Published:Updated:

செந்தில் பாலாஜி Vs அண்ணாமலை - ட்விட்டரில் தெறிக்கும் ‘விலை’ - வாட்ச் அரசியல்

செந்தில் பாலாஜி - அண்ணாமலை

``இதையெல்லாம் பார்க்கும்போது ‘ஹனி டிராப்’ என்று சொந்தக் கட்சிக்காரர்களையே வேவு பார்ப்பதாக அண்ணாமலை மீதிருக்கும் குற்றச்சாட்டை திசைதிருப்பும் வேலையோ என்கிற எண்ணம் வருகிறது.” - இராஜீவ் காந்தி

செந்தில் பாலாஜி Vs அண்ணாமலை - ட்விட்டரில் தெறிக்கும் ‘விலை’ - வாட்ச் அரசியல்

``இதையெல்லாம் பார்க்கும்போது ‘ஹனி டிராப்’ என்று சொந்தக் கட்சிக்காரர்களையே வேவு பார்ப்பதாக அண்ணாமலை மீதிருக்கும் குற்றச்சாட்டை திசைதிருப்பும் வேலையோ என்கிற எண்ணம் வருகிறது.” - இராஜீவ் காந்தி

Published:Updated:
செந்தில் பாலாஜி - அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் கைக்கடிகாரம் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கியது என சமூக வலைதளங்களில் விவாதமானது. இதற்கு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பதில் அளித்த அண்ணாமலை, “புதிதாக நான் அணிந்திருக்கும் வாட்ச், சட்டை, கார் போன்ற தனிப்பட்ட பொருள்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். நான் கையில் கட்டியிருக்கும் வாட்ச் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது. உலகில் இந்த வகை வாட்ச் 500 மட்டும்தான் இருக்கிறது. அதனால், என் உடம்பில் உயிருள்ளவரை இந்த வாட்ச் என்னிடம் இருக்கும். நம்மைத் தவிர வேறு யார் அதை வாங்குவார்கள். நம்முடைய நாட்டுக்காக இந்த வாட்ச்சைக் கட்டியிருக்கிறேன். ஏனென்றால் நான் தேசியவாதி. ரஃபேல் நம்முடைய நாட்டுக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம். விமானம் வந்த பிறகு இந்தியா உலக அளவில் பேசப்படுகிறது. இந்த வாட்ச்சில் விமானத்தின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். மொத்தமுள்ள 500 வாட்ச்சுகளில் 149-வது வாட்ச்சை நான் கட்டியிருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன். இந்தியாவினுடைய எதிரிகள் இந்தியாவிலேயே சில கட்சிக்குள் ஊடுருவி இருக்கிறார்கள். இந்தியா பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறக் கூடாது என்பதற்காக, சீனா, பாகிஸ்தானுடைய ஏஜென்ட்டாக அவர்கள் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில், இது பழைய இந்தியா அல்ல. மோடி ஜியின் புதிய இந்தியா. அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இதைத் தொடர்ந்து இந்த வாட்ச் விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவிய நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரான்ஸ் நிறுவனத்துக்காக, உலகில் வெறும் 500 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலையுள்ள Rafale watch-ஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்து எனச் சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்துக்குள் வெளியிட்டால், வெளிநாட்டு வாட்ச்சைக் கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி. ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி... வார்ரூம் வழியாகத் தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா... கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்துக்குள் வெளியிட முடியுமா... இல்லை வழக்கம்போல Excel Sheet ஏமாத்து வேலைதான் வருமா?" எனப் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக, ‘மிக விரைவில் தனது ஒட்டுமொத்தச் சொத்து விவரத்தையும் வெளியிடவிருப்பதாக’ பதிவிட்டிருந்தார் அண்ணாமலை. அதற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, "தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்புமனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியைத் தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021-ல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்துக்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா... வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்டதுபோல ரஃபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டிக் கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான். பல லட்சம் மதிப்புகொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா... இதுதான் நீங்கள் அளந்துவிடும் (Made in India) 'மேட் இன் இந்தியா'-வா... சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பிகட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்தும் 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கின்றன. இவர் என்ன வெளியிடுவது... யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இதற்கிடையே தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அண்ணாமலை, “நான் கவுன்சிலரோ, ஊராட்சி மன்றத் தலைவரோ, சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லை. அரசுப் பணத்திலிருந்து ஒரு ரூபாய்கூட இப்போது வருமானம் பெறவில்லை. ஆனாலும், என்னிடம் திமுக ஒரு கேள்வி கேட்டிருக்கிறது. திமுக-வினர் எனது உடைகள், கடிகாரம், கார் குறித்துக் கேள்வி கேட்பதை வரவேற்கிறேன். இதற்காகத்தான் ஒன்றரை ஆண்டுகளாகக் காத்திருந்தேன். இந்திய அரசியலில் யாரும் செய்யாததை ஒரு மாநிலத் தலைவராக நான் செய்யவிருக்கிறேன். தமிழகம் முழுவதும் விரைவில் பாஜக சார்பாக நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். 234 தொகுதிகளுக்கும் நடந்து சென்று, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து கோயில்களுக்கும் செல்லவிருக்கிறேன். எனது நடைப்பயணத்தைத் தொடங்கும்போது, நான் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வான 2010-11-ம் ஆண்டு முதல் எனது வங்கிக் கணக்கு நிதி விவரங்களை மக்களுக்குச் சமர்ப்பிக்கவிருக்கிறேன். கடந்த 13 ஆண்டுகளில் நான் செய்த அனைத்துச் செலவுகள், எனது வருமானம் குறித்து இணையதள வலைதளத்தில் நடைப்பயணம் தொடங்கும் முதல் நாளிலேயே பதிவு செய்யவிருக்கிறேன். 500 ரூபாய் கொடுத்து நான் படத்துக்குச் சென்றிருந்தாலும் அது பதிவாகியிருக்கும். தமிழக அரசியலில் முதன்முதலாக என்னுடைய வாழ்க்கை முழுவதையும் தமிழக மக்களுக்குத் திறந்து காட்டப்போகிறேன்” என்று பேசியிருந்தார்.

இது தொடர்பாக திமுக மாணவர் அணித் தலைவர் இராஜீவ் காந்தி, “ராகுல் காந்தியின் டி-சர்ட்டை வைத்து அரசியல் செய்த பாஜக-வினர்போல், வாட்ச்சை வைத்து இழிவான அரசியல் செய்யும் நோக்கம் திமுக-வினருக்கு இல்லை. ஏன் இது விவாதப் பொருளாகிறது என்றால் மேடைக்கு மேடை, `சாதாரண எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்’ என்று புனிதம் பேசி, எளிமையானவன் என்று விளம்பரம் செய்யும்போதுதான் நீங்கள் அப்படி இருக்கிறீர்களா என்று கேள்வி வருகிறது. எந்த திமுக அமைச்சரும் கொள்கை அடிப்படையில்தான் பிரசாரம் செய்துவருகிறாரே தவிர நூறு ரூபாய்க்குச் செருப்பு போட்டோம் என்று பிரசாரம் செய்வதில்லை. அவர் கட்டியிருக்கும் வாட்ச் பரிசாகவோ அல்லது பணம் கொடுத்து வாங்கியோ இருப்பது அவரின் விருப்பம். அதில் இங்கு யாருக்கும் எந்தச் பிரச்னையும் இல்லை. ஆனால் வாட்ச் மீதான ஒரு புனிதத்தைக் கற்பித்து, தேசபக்தி என்கிற பெயரில் ஒரு கோமாளித்தனமான நாடகத்தை அரங்கேற்றுவதுதான் சிக்கலாக இருக்கிறது.

இராஜீவ் காந்தி -
இராஜீவ் காந்தி -

இதையெல்லாம் பார்க்கும்போது சொந்தக் கட்சிக்காரர்களையே வேவு பார்ப்பதாக அண்ணாமலை மீதிருக்கும் குற்றச்சாட்டை திசைதிருப்பும் வேலையோ என்கிற எண்ணம் வருகிறது. அமைச்சர் கேட்ட பிறகு 2021-ல் வாங்கியதாகப் பொய் சொல்கிறார். ஆனால், இந்த வாட்ச் 2016-லேயே வாங்கியதாகத் தகவல். பெங்களூர் சிட்டியில் போலீஸ் கமிஷனராக இருந்தபோது, அங்கு ஒரு காபி நிறுவனத்துக்குப் பஞ்சாயத்து தீர்த்துவைத்ததற்குப் பரிசாகக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தப் பெரும் காபி நிறுவனத்தில் சட்டவிரோத மீறல்கள், பல உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. அதற்கான கைமாறாக வாங்கியிருப்பாரோ என்கிற எண்ணம் தோன்றுகிறது. குற்றச்சாட்டாக வைக்கவில்லை. அதனால்தான் அந்த பில்லை வெளியிடச் சொல்கிறோம். வாய்ப்பிருந்தால் அண்ணாமலை பத்து கோடிக்கு ரூபாய்க்குக்கூட வாங்கிக் கட்டட்டும். நாங்கள் பணக்கார அண்ணாமலை, பண்ணையார் அண்ணாமலை என்று சொல்லிவிட்டுப் போகிறோம்” என்றார்.

“பில் குறித்து பேசுவதற்கு செந்தில் பாலாஜிக்கு தகுதி, அருகதை கிடையாது” என்கிறார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. மேலும் தொடர்ந்தவர், “பல கோடி ரூபாய்க்கு மக்களிடம் மது விற்பனை செய்து வருமானம் ஈட்டும் மதுக்கடைகளில் இருக்க கூடிய மதுவுக்கு முதலில் மக்களுக்கு பில் கொடுக்கச் சொல்லுங்கள். அதன் பிறகு வேறு யாரிடமாவது பில் கேட்கலாம். நீதிமன்றம் பல முறை பில் கொடுக்கச் சொல்லி சொல்லிவிட்டது. இன்னும் அவர்கள் பின்பற்றவில்லை என்றால் லஞ்சம், ஊழல் புரையோடி இருக்கிறது என்றுதானே அர்த்தம்... அதனால் மற்றவர்கள் குறித்துப் பேசுவதற்கு தகுதியே இல்லாதவர்கள் பேசுவதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், எங்கள் மாநிலத் தலைவர் ‘வாட்ச் குறித்து சொல்வதற்குத் தயார்...’ என்று மிகத் தெளிவாக பதில் சொல்லிவிட்டார். அதேபோல் உதயநிதி, சபரீசன், ஸ்டாலின் ஆகியோர் பயன்படுத்தும் பொருள்களைப் பட்டியலிட்டு பில் கேட்டால் கொடுப்பார்களா?

செந்தில் பாலாஜி Vs அண்ணாமலை - ட்விட்டரில் தெறிக்கும் ‘விலை’ - வாட்ச் அரசியல்

ஒரு கட்சியின் மாநிலத் தலைவர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கையில் கட்டியிருக்கும் வாட்ச்சுக்கு பில் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அதற்கு எங்கள் தலைவர் துணிந்துவிட்டார். தயாராகிவிட்டார். ஆனால், நாங்கள் வைக்கும் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லையே... பதில் சொல்லியும் தொடர்ந்து இது குறித்துப் பேசும்போது அவர்களுக்கு ஏற்றாற்போல்தானே எங்கள் பதிலும் அமையும்... பார்க்கப்போனால் இப்போது அண்ணாமலை விரித்த வலையில் இவர்கள் போய் விழுந்துவிட்டார்கள்” என்றார்.