அலசல்
அரசியல்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 53 - பாண்டிய நாட்டு கதைகள்

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

பாண்டிய நிலத்துக்குச் செல்பவர்கள் இவ்வளவு முத்துகள்தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று நிர்ணயித்திருக் கிறார்கள்.

மார்கோ போலோ அதிரடிகளுக்குப் பெயர்போனவர். `மாபார் மாகாணத்தில் தையல் கலைஞர்களே இல்லை’ என்று எடுத்த எடுப்பிலேயே ஒரு போடு போடுகிறார். மலபார் முடிந்து சோழமண்டலம் தொடங்கும் இடம் இந்த மாபார். தையல் கலைஞர்கள் இல்லாமல் மக்கள் எப்படி ஆடையணிந்தார்கள் என்னும் கேள்வியே உங்களுக்கு எழவேண்டியதில்லை. மக்கள் எதுவுமே அணியவில்லை என்கிறார் போலோ. போனால் போகட்டும் என்று சிலோன்வாசிகள்போல் இடுப்பில் ஒரு துண்டுத் துணியை மட்டும் சுற்றிக்கொண்டிருக்கிறார்களாம். `குழந்தை, முதியவர், ஆண், பெண், இருக்கப்பட்டவர், இல்லாதப்பட்டவர் இப்படி எந்த பேதமும் இல்லை. அவ்வளவு ஏன், மன்னரேகூட இப்படித்தான் பரிதாபகரமாகக் காட்சியளிக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்கிறார் போலோ.

மார்கோ போலோ தென்னிந்தியாவுக்கு வருகை தந்தபோது பாண்டியர்கள் ஆண்டுகொண்டிருந்தனர். நீண்ட, நெடிய வரலாற்றைக்கொண்டிருப்பவர்கள் பாண்டியர்கள். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போன்றவர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்கள் `சங்ககாலப் பாண்டியர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். களப்பிரர் ஆட்சியை வீழ்த்திவிட்டு இடைக்காலப் பாண்டியர் ஆட்சியை கடுங்கோன் பொஆ 575 வாக்கில் மதுரையில் நிலைநாட்டினார். சோழப் பேரரசு தலைதூக்கும் வரை ஆட்சி நீடித்தது. இவர்களுள் மாறவர்மன் அரிகேசரி என்னும் மன்னரின் ஆட்சியின்போது யுவான் சுவாங் பாண்டிய நாட்டுக்கு வருகைபுரிந்தார். முத்து உற்பத்தி குறித்து அவரும் குறிப்பிட்டிருக்கிறார். சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு 1190 வாக்கில் மீண்டும் பாண்டியர் ஆட்சி மலர்ந்தது. மார்கோ போலோ காலடி எடுத்து வைத்தபோது ஆட்சியிலிருந்தவர் முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன். ஆனால் போலோ தனது பதிவுகளில் எங்கும் பெயரைக் குறிப்பிடாமல் `மன்னர்’ என்று மட்டுமே எழுதுகிறார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 53 - பாண்டிய நாட்டு கதைகள்

இனி அவர் குறிப்புகளுக்கு வருவோம். மன்னர் தனது கழுத்தில் பளபளப்பான மணி மாலைகள் அணிந்திருப்பாராம். முத்து, மாணிக்கம், மரகதம் என்று பலவிதமான கற்கள் பட்டுநூலில் கோர்த்து தயாரிக்கப்பட்ட விலை மதிப்பற்ற மாலை அது. `மொத்தம் 104 கற்கள் இருக்கும்’ என்கிறார் போலோ. ஏன் 104 என்றால், தினமும் அவர் 104 முறை காலையிலும் மாலையிலும் உருவச்சிலைகள் முன்பு நின்று உச்சாடனம் செய்வதற்காகவும். இது 108-ஆக இருக்க வேண்டும். `பகாடா, பகாடா...’ என்று மன்னர் சத்தமிடுவாராம். இது பாகவதாவாக இருக்கக்கூடும். வேறு சில தங்க ஆபரணங்களையும் கையிலும் காலிலும் அணிந்திருப்பாராம். `அவர் ஆட்சி செய்யும் பிரதேசத்திலுள்ள மொத்த ஆபரணங்களின் மதிப்பைக் காட்டிலும் மேலானது மன்னரின் உடலில் இருக்கும்’ என்கிறார் போலோ. ஆனால் பாவம், இத்தனை வசதியோடு இருப்பவர் ஒரு தையல் கலைஞரை எங்காவது கண்டுபிடித்து அழைத்துவந்து கொஞ்சம் பெரிய ஆடையாகத் தயாரிக்கச் சொல்லி அணிந்திருக்கலாம்!

பாண்டிய நிலத்துக்குச் செல்பவர்கள் இவ்வளவு முத்துகள்தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று நிர்ணயித்திருக் கிறார்கள். அதற்கு மேல் எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம். ஆனாலும் எப்படியோ சிலர் முத்துகளைக் கடத்திச் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறார் போலோ. இருப்பதிலேயே பெரிய முத்து கண்டெடுக்கப் பட்டால் அதை மன்னரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். `உங்களிடம் ஏதேனும் விலை மதிப்பற்ற கற்கள் இருந்தால் அரண்மனைக்கு அளித்துவிடுங்கள்’ என்று அவ்வப்போது ஊர் மக்களுக்கு அறிவிப்பு சென்றுகொண்டே இருக்குமாம். மக்களும் தங்களிடம் உள்ளதை ஒப்படைத்துவிடுவார்களாம். இலவசமாக அல்ல. சந்தையில் ஒரு கல்லுக்கு எவ்வளவு மதிப்பு இருக்குமோ அதைவிடக் கூடுதலாக மன்னர் அளிப்பார். `மன்னர் செல்வச் செழிப்பானவராக மாறியது இப்படித்தான்’ என்கிறார் போலோ.

முத்துகளோடு நிறுத்திக்கொண்டிருந்தால் பரவாயில்லை. அழகிய பெண்களைச் சேகரிப்பதிலும் மன்னர் ஆர்வமிக்கவராக இருந்திருக்கிறார். தன்னுடைய ஆட்சிப் பரப்பில் எங்கு அழகிய பெண் இருப்பதாகக் கேள்விப்பட்டாலும் அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டுவிடுவாராம். இவ்வளவு மனைவிகள்தான் இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் மன்னருக்கு இல்லாததால், ஒருவராலும் அவரைத் தடுக்க முடியவில்லை. மன்னரின் பெண்ணாசை எந்த அளவுக்குச் சென்றுவிட்டது தெரியுமா? `ஒருநாள் தன் சகோதரனின் மனைவி மீதே அவர் காதல் வயப்பட்டுவிட்டார். வலுக்கட்டாயமாக அவளைத் தன்னோடு இழுத்துச் சென்றும்விட்டார்’ என்று அதிர்கிறார் போலோ. அண்ணனாகிய மன்னனை எதிர்க்க அஞ்சி தம்பியும் அமைதியாக இருந்துவிட்டாராம்.

அரண்மனை வீரர்களில், குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த சிலர் இருக்கிறார்கள். மன்னருக்கு நெருக்கமானவர்கள். அவர் எங்கு சென்றாலும் இவர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர். மன்னர் பயணம் செய்யும்போது நிழல்போல் தொடர்கிறார்கள். இவர்களுடைய விசுவாசம் ஆச்சர்யப்படத்தக்கது. மன்னர் இறந்துவிட்டால் தகன மேடைக்கு இவர்களும் செல்கிறார்கள். மன்னரின் உடல் எரியூட்டப்படும்போது இவர்களும் நெருப்பில் பாய்ந்துவிடுகிறார்கள். `இருந்தவரை அவருக்குப் பணிவிடைகள் செய்தோம். இறந்த பிறகும் நாங்கள் அவருக்கே பணிவிடைகள் செய்ய விரும்புவதால், அவரோடு சேர்ந்து இன்னொரு உலகுக்குப் பயணமாகிறோம்’ என்கிறார்கள் இவர்கள். இவர்களை யாரும் தடுப்பதில்லை என்கிறார் போலோ. திருநெல்வேலி மாவட்டத்தில் கீழப்பாவூர் என்னும் இடத்திலுள்ள லஷ்மி நரசிம்மர் கோயிலிலுள்ள கல்வெட்டுகளில், இந்த வீரர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ‘தென்னவன் ஆபத்துதவிகள்’, ‘முனை எதிர் மோகர்’, ‘பெரும்படையினர்’ ஆகிய பெயர்களால் இந்த மெய்க்காவல் வீரர்கள் அழைக்கப்படுகின்றனர். மேலதிக விவரங்கள் இல்லை.

யானைப்படை, காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை நான்கும் இருந்தன என்றாலும் மார்கோ போலோ குதிரைகளை மட்டுமே குறிப்பாக கவனித்திருக்கிறார். `குதிரைகளின் முக்கியத்துவம் தெரிந்தாலும், ஏனோ இங்கிருப்பவர்கள் குதிரை வளர்ப்பில் கவனம் செலுத்தவேயில்லை. எல்லாக் குதிரைகளையும் வெளியிலிருந்தே கொண்டுவருகிறார்கள். இதனால், பெரும் பொருள் செலவு ஏற்படுகிறது’ என்கிறார் போலோ. (கொற்கை, தொண்டி உள்ளிட்ட கடல்துறைப் பட்டணங்களில் ஆண்டுதோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் இறக்குமதியானதாக வேறு சில பதிவுகளும் உள்ளன). `குதிரைகள் வாங்குவார்கள். அவை இறந்துபோகும். மீண்டும் வாங்குவார்கள். வாங்குவதில் காட்டும் அக்கறையில் கொஞ்சமாவது குதிரையைப் பராமரிப்பதில் காட்டியிருந்தால், இவ்வளவு இழப்பு நேர்ந்திருக்காது’ என்கிறார் போலோ.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 53 - பாண்டிய நாட்டு கதைகள்

`இன்னொரு விசித்திரமான வழக்கத்தை இங்கே கண்டேன். ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், அவன் ஏதேனும் ஒரு கடவுளுக்குத் தன்னுயிரைத் தியாகம் செய்ய அனுமதிக்கப்படுவான். `நான் என்னுடைய கடவுளுக்கு, அவருடைய திருவுருவச் சிலைக்கு என் உயிரை அளிக்க விரும்புகிறேன்’ என்று அவன் அறிவிப்பான். அரசு அனுமதி பெற்றவுடன், அவன் தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சொல்லியனுப்புவான். அவர்கள் திரண்டு வந்து அவனை வண்டியில் ஏற்றி, 12 கத்திகளை அவனிடம் ஒப்படைத்து ஊர் முழுக்க ஊர்வலமாகக் கொண்டுவருவார்கள். ‘இவன் தன்னுயிரை இன்ன கடவுளுக்குத் தியாகம் செய்யப்போகிறான்’ என்று அவர்கள் முழங்குவார்கள். பலி கொடுக்கும் இடம் வந்ததும் கைதி இறக்கிவிடப்படுவான். முதல் கத்தியால் தன் கையைக் குத்திக்கொள்வான். இரண்டாவதால் இன்னொரு கை. மூன்றாவது வயிற்றுக்குள் செலுத்தப்படும். இப்படி இறந்து விழும்வரை ஒவ்வொரு கத்தியை எடுத்து ஒவ்வோர் இடத்தில் அவன் குத்திக்கொள்வான். ஒவ்வொருமுறையும் ‘கடவுளே, உனக்காகத்தான் நான் என்னை மாய்த்துக்கொள்கிறேன்!’ என்று அவன் அலறுவது வழக்கம். பிறகு அவனுடலை எடுத்துச் சென்று மகிழ்ச்சியோடு தகனம் செய்வார்கள். கணவனை இழந்த பெண்ணும் உயிர்த் தியாகம் செய்ய அனுமதிக்கப்படுகிறாள். ஆணைப்போல் கத்தியால் குத்திக்கொள்ளாமல் அவள் தீக்குள் பாய்கிறாள். அவளுக்கும் அதே மரியாதை கிடைக்கிறது’ என்கிறார் போலோ.

இந்துக்களை `உருவச்சிலை வழிபாட்டாளர்கள்’ என்றே அழைக்கிறார் மார்கோ போலோ. `மாடு அவர்களுக்குப் பிடித்தமானது. எருது பல சிறப்புகளைப் பெற்றிருக்கும் என்று கருதி அதை வழிபடுகிறார்கள். எதற்காகவும் எருதை அவர்கள் கொல்வதில்லை. உயிரே போனாலும் மாட்டிறைச்சியைச் சீந்துவதுமில்லை. எல்லா சிலை வழிபாட்டாளர்களும் ஒன்றுபோல் இருப்பதாகச் சொல்ல முடியாது. இவர்களில் ஒரு பிரிவினர் எருதைத் தங்கள் கரங்களால் கொல்வதில்லை என்றாலும் மாமிசம் கிடைத்தால் உண்கிறார்கள். மாட்டிறைச்சியையும் மகிழ்ச்சியோடு உட்கொள்கிறார்கள். மாட்டை இதோடு அவர்கள் விடுவதாக இல்லை. அதன் சாணத்தை அள்ளியெடுத்து வந்து வீடு முழுக்கப் பூசிவிடுகிறார்கள்.

உலகில் எல்லோரும் இருக்கையில் அமர்ந்து உண்ணும்போது, இவர்கள் மட்டும் கட்டாந்தரையில் அமர்ந்து உண்கிறார்கள்’ என்கிறார் போலோ. ஏழைகள் மட்டுமல்ல, மன்னரும்கூடத் தரையில் அமர்ந்துதான் உண்கிறார். இதை ஒரு வழக்கமாக அனைவரும் பின்பற்றுவதால் அதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்து விசாரித்திருக்கிறார் போலோ. அவருக்குக் கிடைத்த பதில் இது. இதில், பரிகசிப்பதற்கு எதுவும் இல்லை. கீழே அமர்வது மதிக்கத்தக்க பண்பு. நாம் அனைவரும் பூமியிலிருந்தே தோன்றியிருக்கிறோம். பூமிக்குத்தான் திரும்பப் போகிறோம். பூமிக்கு நாம் செலுத்தும் எளிய மரியாதை இது!

(விரியும்)