Published:Updated:

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அமர்வு படி உயர்வு: முறைகேடுகளைக் களையுமா தமிழ்நாடு அரசு?!

உள்ளாட்சி

'தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது' - என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அமர்வு படி உயர்வு: முறைகேடுகளைக் களையுமா தமிழ்நாடு அரசு?!

'தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது' - என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Published:Updated:
உள்ளாட்சி

'தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது' - என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, 2023-ம் ஆண்டு, மார்ச் 31-ம் தேதி வரையிலான நிலுவைக் கடன் 6,53,348.73 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும், ரூ. 3 லட்சத்துக்கும் அதிகமான கடன் சுமையைத் தமிழ்நாடு அரசு வைத்திருக்கிறது.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதி நிலைமையைக் காரணம் காட்டித்தான், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவித்த முக்கிய வாக்குறுதிகளிலிருந்து தி.மு.க அரசு தப்பித்துவருகிறது. இதற்கிடையேதான், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு அமர்வு படி 10 மடங்காகவும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படி 5 மடங்காகவும் உயர்த்தி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலாளர் அமுதா அரசாணை வெளியிட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசுக்குக் கூடுதல் செலவு எவ்வளவு?

தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சித் தலைவர்களும், 99,327 உறுப்பினர்களும், 388 ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்களும், 6,471 ஒன்றியக் குழு உறுப்பினர்களும், 36 மாவட்ட ஊராட்சித் தலைவர்களும், 655 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும் என கிட்டதட்ட 1.19 லட்சம் பிரதிநிதிகள் உள்ளனர். இவர்கள், தங்கள் பகுதிக்கு உட்பட இடங்களில் நடக்கும் பிரச்னை குறித்து மாதம் ஒரு முறை கலந்தாலோசிக்க வேண்டும். இதற்காக உரிய உறுப்பினர்களுக்குப் படிப் பணம் வழங்கப்படும்.

அமர்வு படி உயர்வு
அமர்வு படி உயர்வு

அதன்படி, மொத்த உறுப்பினர்களுக்கும் பழைய அமர்வு படியின்படி ஓர் அமர்வுக்கு ரூ. 66 லட்சமும், ஓர் ஆண்டில் நடைபெறும் 12 அமர்வுகளுக்கு ரூ.7.96 கோடியும், ஐந்து ஆண்டுகளுக்கு (பதவிக் காலம்) ரூ.39.84 கோடி செலவிடப்பட்டது. தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட அமர்வு படியினால், ஒரு அமர்வுக்கு ரூ.3.53 கோடியும், ஓர் ஆண்டுக்கு ரூ.42.37 கோடியும், ஐந்து ஆண்டுகளில் ரூ.211 கோடியும் செலவாகும். அதன்படி, ஐந்து ஆண்டுகளில் ரூ.170 கோடிக்கும் மேல் அரசுக்குக் கூடுதல் செலவாகிறது.

இதைத் தாண்டி, உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான அமர்வு படி உயர்த்தப்பட்டதற்கான பின்னணியும், நிதிகள் முறையாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கையில் கிடைக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

உள்ளாட்சி பிரதிநிதி பாலசுப்ரமணியன்
உள்ளாட்சி பிரதிநிதி பாலசுப்ரமணியன்

இது தொடர்பாக தென்காசி மாவட்டம், ஐந்தாங்கட்டளை ஊராட்சி வார்டு உறுப்பினர் பாலசுப்ரமணியனிடம் கேட்டபோது, "உயர்த்தப்பட்ட அமர்வு படிக்கு பின்பாக ஊராட்சித் தலைவர் தலைமையில் மூன்று கூட்டங்கள் நடைபெற்றுவிட்டன. இதுவரை அமர்வுக்கான படிக் காசு வரவில்லை. இதே நிலைமைதான், பல ஊராட்சிகளிலும் நடக்கிறது. ஊராட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாலும் தினக்கூலிகள்தான். ஒரு நாள் வேலையை விட்டுவிட்டு, அமர்வுக் கூட்டத்துக்குச் செல்கிறோம். உண்மையில் அரசு எங்கள் நலனுக்காக அமர்வு படியை உயர்த்தியிருந்தால், எங்களின் வருகைப் பதிவேட்டைச் சரிபார்த்து, அதற்கான படியை, வங்கிக் கணக்கிலேயே செலுத்த வேண்டும்" என்றார். இதே கருத்தைத்தான் பெரும்பாலான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்வைக்கிறார்கள்.

அமர்வு படி உரிய உறுப்பினர்களுக்குச் செல்லாதது தொடர்பாக ஊரக உள்ளாட்சித்துறையில் ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் கொட்டிக் கிடந்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக ஊரக உள்ளாட்சித்துறையின் மூத்த அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, " உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் அமர்வு படி, சிறப்புப் படிகளைக் கட்சிப் பணிக்காகவும், சொந்தச் செலவுக்காகவும் எடுத்துக்கொள்ளும் வழக்கம் நீண்ட காலமாக இருக்கிறது. இதை த்தடுக்க கிராம ஊராட்சிகளில் உள்ள உறுப்பினர்களுக்கு அமர்வு முடிந்தபின்னர், அதற்கான வருகைப் பதிவில் கையெழுத்திட்டு, படியை அப்போதே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்திவருகிறோம்.

உள்ளாட்சி
உள்ளாட்சி

அமர்வு படிக்கான செலவினங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தங்களது பொதுநிதியிலிருந்து நேரடியாகவே கையாளுகின்றன. இதில், உள்ளாட்சி அமைப்பின் தலைவர் நினைத்தால், படிப் பணத்தில் கையாடல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இது எங்களுக்கும் தெரியும். இது தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளபோதும், வருகைப் பதிவில் பிரதிநிதிகளின் கையெழுத்து இருப்பதால், எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை" என்றனர்.

இது குறித்து அ.தி.மு.க மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களிடம் கேட்டபோது, " தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், நடந்த எந்தக் கூட்டத்துக்கும் அமர்வு படி வழங்கப்படவில்லை. தலைமையிடம் கேட்டால், `இன்னும் நிதி வரவில்லை. கையெழுத்திடுங்கள், வந்ததும் தருகிறோம்’ என்று கூறிவிடுகிறார்கள். இதில் முறைகேடு நடப்பது தெரிந்தே, தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது சந்தேகத்துக்குரியது. தற்போது, அமர்வு படிக்காக உயர்த்தப்பட்ட ரூ.211 கோடியில், 10 சதவிகிதம் என்றாலும், ரூ.21 கோடிகளுக்கு மேல் முறைகேடு நடக்க வாய்ப்பு இருக்கிறது" என்றனர்.

அமுதா
அமுதா

இது தொடர்பாக ஊரக உள்ளாட்சித்துறையின் செயலாளர் அமுதாவை செல்போனிலும் நேரிலும் பல முறை தொடர்புகொள்ள முயன்றும், அவர் நமக்கு பதிலளிக்கவில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர் தியாகுவிடம் கேட்டபோது, "உள்ளாட்சி அமைப்பில் பல எளிய மக்கள்தான் பிரதிநிதிகள். அவர்களுக்கு இந்த அமர்வு படி உயர்வு நல்லதுதான். ஆனால், அமர்வுக்கான படி, உரிய பிரதிநிதிக்குச் செல்கிறதா என்பது சந்தேகம்தான். இந்தப் படி நிதியமைச்சருக்கோ, கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களுக்கோ, உள்ளாட்சி அதிகாரிகளுக்கோதான் கையூட்டாகச் செல்கிறது. இந்த முறைகேடுகளைத் தடுக்க, அமர்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் படிப் பணத்தைச் செலுத்த அரசு முன்வர வேண்டும் " என்றார்.

தியாகு
தியாகு

உள்ளாட்சி அமைப்புகளில் பல எளிய மக்கள்தான் பிரதிநிதிகளாக உள்ளனர். அவர்களுக்குச் சம்பளம் இல்லை என்ற கருத்தை முன்வைத்து, பல முறைகேடுகளும் நடக்கின்றன. பிரதிநிதிகளுக்குக் குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும். அதேபோல சம்பளத்தையும், அமர்வு படியையும் உரியவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினால், முறைகேடுகளைத் தவிர்க்கலாம். இதனால், திட்டங்களுக்கு நிதி நிலைமையை காரணம் காட்டவும் அவசியமிருக்காது..!