Published:Updated:

பெயர் குறிப்பிடப்படாத நபர்; பல நிறுவனங்களுக்கு உதவி! - சிதம்பரத்துக்கு எதிராக வலுக்கும் வாக்குமூலம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ள மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த 50 நாள்களுக்கும் மேலாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இரு தினங்களுக்கு முன், அதே வழக்கில் அமலாக்கத்துறையினரும் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

இதையடுத்து, ப.சிதம்பரம் ஏழு நாள்கள் அமலாக்கத்துறையினரின் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் சிதம்பரம் உள்ளிட்ட 15 பேர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது சிபிஐ. குற்றப்பத்திரிக்கை தொடர்பான வழக்கு விசாரணை, வரும் திங்கள்கிழமை டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு வரவுள்ளது.

ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன நிர்வாகி பீட்டர் முகர்ஜி, அவரின் மனைவி இந்திராணி முகர்ஜி, ஆடிட்டர் எஸ்.பாஸ்கரராமன், நிதி ஆயோக் முன்னாள் தலைமை அதிகாரி சிந்துஸ்ரீகுல்லர் போன்ற 15 பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக உள்ளார். இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்திராணி முகர்ஜி
இந்திராணி முகர்ஜி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள ப.சிதம்பரத்தின் மனு, நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷர் மேத்தா, “பெயர் குறிப்பிட முடியாத ஒரு நபர் சட்டப் பிரிவு 164 -ன் (நீதிபதி முன் பதிவு செய்யப்பட்டது) கீழ் தனது அறிக்கையை வழங்கினார். அவர் ஒரு காங்கிரஸ் தலைவரால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்படாமல் இருப்பவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல் தெரிவித்தவரின் பெயர் மற்றும் அடையாளத்தை குற்றப்பத்திரிக்கையில்கூட நாங்கள் வெளியிட விரும்பவில்லை” என்று மேத்தா கூறியுள்ளார்.

தனி அறை; வீட்டு உணவு; படுக்கை வசதி! - அமலாக்கத்துறையின் கஸ்டடியில் ப.சிதம்பரம்

தொடர்ந்து பேசிய மேத்தா, “ சிதம்பரம் வெளியில் இருக்கும் போது, இந்த நபரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார். பெயர் குறிப்பிடப்படாத நபர், இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜி இல்லை. ஆனால், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரங்களை அறிந்தவர். அவரின் வாக்குமூலம் குற்றப்பத்திரிக்கையின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதலுக்கான விண்ணப்பத்தைத் தாக்கல்செய்வதற்கு முன்னரே இந்திராணியும் பீட்டரும் சிதம்பரத்தைச் சந்தித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தன் மகன் கார்த்தியைப் பார்த்துக்கொள்ளுமாறும், கார்த்தியின் கட்டுப்பாட்டில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் பணத்தை மாற்றுமாறும் முகர்ஜியிடம் தெரிவித்துள்ளார், சிதம்பரம்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் மட்டுமில்லாது, இன்னும் சில நிறுவனங்கள் அந்நிய முதலீடு பெற சிதம்பரமும் அவரது மகனும் உதவியுள்ளதாக, அந்த பெயர் குறிப்பிடாத நபர் தெரிவித்துள்ளார். அந்த நிறுவனங்கள் கார்த்தியுடன் இ-மெயிலில் தொடர்பில் இருந்துள்ளன. இதனால் கார்த்தியின் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு பெரிய தொகை அனுப்பப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன. ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய நிறுவனங்கள் பற்றி விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட பலர் இந்தியாவை விட்டு வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளதை நாம் கண் முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும் நிலையில், அவர்களின் வரிசையில் ப.சிதம்பரமும் வெளிநாடு தப்பிச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என வாதிட்டார் வழக்கறிஞர் துஷர் மேத்தா.

சி.பி.ஐ
சி.பி.ஐ

இதை முழுவதுமாக மறுத்த சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், “ சிதம்பரம் எங்கே தப்பிச் செல்லப்போகிறார். அவரது பாஸ்போர்ட் கூட அவரிடம் இல்லை. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அறியப்பட்ட அதிக அந்தஸ்துள்ள ஒருவர் தப்பிச் செல்லமாட்டார். திகார் சிறையில் இந்த 50 நாள்களில், சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார். அவரது உடல் நலனைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். ஜாமீன் மனு மீதான விவாதங்கள் நேற்று முடிவடைந்த நிலையில், தீர்ப்புத் தேதி அறிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.