Published:Updated:

``ஷாகின் பாக் போக்குவரத்து நெரிசலுக்கு டெல்லி போலிஸ்தான் காரணம்!'' - வஜாஹத் ஹபிபுல்லா

வஜாஹத் ஹபிபுல்லா
வஜாஹத் ஹபிபுல்லா

ஷாகின் பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, வஜாஹத் ஹபிபுல்லா தன்னுடைய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டதிலிருந்து, அதற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. டெல்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில், இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்கள் போராடிவருகின்றனர். சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களின் அடையாளமாகவே மாறிவிட்டது, ஷாகின் பாக். டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பி.ஜே.பி, ஷாகின் பாக் போராட்டத்தை விவாதப் பொருளாக முன்னிறுத்தியது.

ஷாகின் பாக்
ஷாகின் பாக்

ஆனாலும் ஷாகின் பாக்கில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் கலந்துகொண்ட நான்கு மாதக் குழந்தை ஒன்று, குளிர் தாங்காமல் இறந்துபோனது. இது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. போராட்டத்தில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த நிலையில், ஷாகின் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பிரதான சாலைகளையும் டெல்லி காவல்துறை மூடியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. போராட்டக் களத்திற்குத் தொடர்பில்லாத சாலைகளையும் சேர்த்து மூடி, ஷாகின் பாக் போராட்டங்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்கிற எண்ணத்தை காவல்துறை உருவாக்க முயல்வதாகவும் போராட்டக்காரர்கள் தரப்பு குற்றம் சாட்டுகிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
ப.சிதம்பரம் ஓவர்... அடுத்தது அகமது படேல்... அமித் ஷாவின் சபத அரசியல்!

இதைத் தொடர்ந்து, ஷாகின் பாக்கில் நடைபெற்றுவரும் போராட்டத்தை அப்புறப்படுத்தி, சாலையைத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வழக்கறிஞர்கள் சாதனா ராமச்சந்திரன், சஞ்சய் ஹெக்டே மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா ஆகியோரை நியமித்தது.

இவர்கள், ஷாகின் பாக் சென்று பார்வையிட்டு, போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர். இந்த நிலையில் ஷாகின் பாக் சென்றுவந்த வஜாஹத் ஹபிபுல்லா, தன்னுடைய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளார். அதில், ஷாகின் பாக் பகுதியில் மக்கள் அமைதியாகவே போராடி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட டெல்லி காவல்துறையே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், “ஷாகின் பாக்கில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையுடன் சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆருக்கு எதிராகப் போராடிவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், நீதிமன்றத்தின் முன் தெரிவிக்குமாறு என்னிடம் கூறியவைகளைப் பட்டியலிடுகிறேன்.

வஜாஹத் ஹபிபுல்லா
வஜாஹத் ஹபிபுல்லா
ஜாமியா, அலிகர், ஷாகின் பாக் - பி.ஜே.பி அரசின் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டு என்ன?

‘நாங்கள் அமைதியான வழியிலேயே போராடிவருகிறோம். சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர் அமல்படுத்தப்பட்டால், அது எங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாகிவிடும் என்று அஞ்சுகிறோம். எங்கள் போராட்டத்துக்கு நிறைய அச்சுறுத்தல்கள் வருகின்றன. ஆனால், போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தப் போராட்டங்களில் எந்தவிதமான வன்முறையும் ஏற்படவில்லை. இந்த நாட்டின் குடிமகன்களாக இருப்பதில் பெருமைகொள்கிறோம். அதே சமயம், எங்களைத் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவது வருத்தமளிக்கிறது. இந்த இடம் எங்களுக்கு போராட பாதுகாப்பானதாக உள்ளது. மத்திய அரசு சி.ஏ.ஏ பற்றி எங்களுடன் விவாதிக்கத் தயாராக இல்லை. உச்ச நீதிமன்றம் சி.ஏ.ஏ வழக்குகளை விரைந்து விசாரித்து, ஒரு தீர்வளிக்க வேண்டும்" என்றனர்.

மேலும் அந்த அறிக்கையில் வஜாஹத் ஹபிபுல்லா, "நான் சென்று பார்வையிட்டபோது, போராட்ட இடத்திற்கு சம்பந்தமில்லாத தொலைவில் உள்ள சாலைகளில் எல்லாம் தேவையில்லாத தடுப்புகளை காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்தனர். இதன்மூலம், தங்களுடைய கடமையிலிருந்து நழுவி, மக்கள்மீது பழியைப் போடுகின்றனர். இதுதான் குழப்பத்திற்குக் காரணம். இந்த தடுப்புகள் அகற்றப்பட்டாலே, இந்த வழக்குகளில் எழுப்பப்பட்டுள்ள கோரிக்கைகள் தீர்ந்துவிடும். ஷாகின் பாக்கில் அனைத்து வயது பெண்களும் குழந்தைகளுடன் இடம்பெற்று வருகின்றனர். போராட்டம் அமைதியாகவே நடைபெறுகிறது.

ஷாகின் பாக்
ஷாகின் பாக்

போராடுபவர்களின் பாதுகாப்பும் முக்கியம். போராட்ட இடத்தை மாற்றினால், அது அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும். நாடு முழுவதும் இதுபோன்ற போராட்டங்களை அரசு வன்முறையுடன் கையாள்கையில், ஷாகின் பாக் அமைதியான வழியில் போராடிவருகிறது. காவல்துறையின் அடக்குமுறையும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை எதிர்மறையாகச் சித்திரிப்பதையும் நாம் நாடு முழுவதும் பார்த்துவருகிறோம்.

"விவாதங்களில் ஈடுபடாமல், மாற்றுக் கருத்துகளை முடக்குவது இந்தியாவில் இன்று புதிய யதார்த்தமாகிவிட்டது. ஆனால், அது இந்திய அரசியலமைப்புக்கு அந்நியமானது!"
என்கிறார் வஜாஹத் ஹபிபுல்லா

ஷாகின் பாக் போராட்டம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விரைவில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் பேச்சுவார்த்தைக்காக நியமித்த வஜாஹத் ஹபிபுல்லாவின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு