Published:Updated:

``சரத்பவார் வைத்த பில்லிசூனியம்; உத்தவ் தாக்கரே சிக்கிக்கொண்டிருக்கிறார்” - பாஜக தலைவர் பவன்குலே

பவன்குலே

``சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி விளம்பரம் தேடிக்கொள்வதுதான் பாஜக தலைவர்களின் வேலை’’ - சஞ்சய் ராவத்

``சரத்பவார் வைத்த பில்லிசூனியம்; உத்தவ் தாக்கரே சிக்கிக்கொண்டிருக்கிறார்” - பாஜக தலைவர் பவன்குலே

``சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி விளம்பரம் தேடிக்கொள்வதுதான் பாஜக தலைவர்களின் வேலை’’ - சஞ்சய் ராவத்

Published:Updated:
பவன்குலே

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அனால், சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்துவிட்டது. உத்தவ் தாக்கரே ஆட்சியை இழந்த பிறகு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உத்தவ் தாக்கரேயை கைவிட்டுவிடும் என்று பாஜக நம்பியதாக சொல்லப்பட்டது. ஆனால் பா.ஜ.க-வின் நம்பிக்கை கைகூடவில்லை. தொடர்ந்து மூன்று கட்சிகளும் கூட்டணியில் இருக்கிறது. இதனால் உத்தவ் தாக்கரேயிக்கு சரத்பவார் பில்லிசூனியம் வைத்துவிட்டார் என்று மகாராஷ்டிரா பா.ஜ.க குற்றம்சாட்டியிருக்கிறது.

இது தொடர்பாக, மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே செய்தியாளர்களிடம், ``2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு உத்தவ் தாக்கரேயிக்கு சரத்பவார் பில்லிசூனியம் வைத்துவிட்டார். அதில் உத்தவ் தாக்கரே சிக்கிக்கொண்டிருக்கிறார்.

ஷிண்டே அணியில் கஜானன் கீர்த்திகர்(வலது பக்கம்)
ஷிண்டே அணியில் கஜானன் கீர்த்திகர்(வலது பக்கம்)

எந்த போலி சாமியார் (சரத்பவார்) பில்லிசூனியம் வைத்தார் என்பது ஒட்டுமொத்த மகாராஷ்டிராவுக்கும், நாட்டுக்கும் தெரியும். யாராவது ஒரு முறை சரத் பவார் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால் அவர்களை அவர் விடுவிக்கவே மாட்டார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நியாயமற்ற முறையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்பட்டது. உத்தவ் தாக்கரேயிக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டதால், எதைப்பற்றியும் சிந்திக்காமல் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துவிட்டார். ஆனால் நாங்கள் இப்போது உஷாராக இருக்கிறோம். மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வும், ஏக்நாத் ஷிண்டேயும் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள்’’ என்று தெரிவித்தார்.

பவன்குலேயின் இந்தக் கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து அந்தக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மகேஷ் செய்தியாளர்களிடம், ``பவன்குலே முதலில் தன் மூளையை சோதனை செய்துவிட்டு பேசவேண்டும். நாகரீக சமுதாயத்தில் பில்லிசூனியம், போலி சாமியார் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த வார்த்தைகளை பயன்படுத்தி அரசியல் செய்வதாக இருந்தால் அரசியல் செய்யுங்கள். பில்லி சூனிய தடுப்பு சட்டத்தை எந்த அரசு கொண்டு வந்தது என்பதை பவன்குலே நினைத்துப்பார்க்கவேண்டும். மகாராஷ்டிரா மீது சரத் பவாருக்கு ஒரு பிணைப்பு இருக்கிறது. உங்களைப்போன்ற மதவாத கட்சியிடமிருந்து சிவசேனாவை விடுவித்ததால் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க சரத் பவார் உதவினார்’’ என்று தெரிவித்தார்.

பா.ஜ.க-வின் கருத்துக்கு சிவசேனாவின் சஞ்சய் ராவத் அளித்துள்ள பதிலில், ``சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி விளம்பரம் தேடிக்கொள்வதுதான் பாஜக தலைவர்களின் வேலை’’ என்று தெரிவித்தார்.

சரத்பவார்
சரத்பவார்

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்தக் கட்சியின் எம்.பி.கஜானன் கீர்த்திகர் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே 12 எம்.பி.க்கள் ஷிண்டே அணியில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு எம்.பி.அதில் இணைந்திருக்கிறார். உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட கஜானன் கீர்த்திகர் அணி மாறியிருப்பது உத்தவ் தாக்கரேயிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது. தன்னுடைய தொகுதியில் முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதி பெறுவதற்காக ஷிண்டே அணியில் சேர்ந்திருப்பதாக கஜானன் தெரிவித்தார்.

அடுத்த சில மாதங்களில் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கீர்த்திகர் அணி மாறியிருப்பது உத்தவ் அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது. ராகுல் ஷெவாலே எம்.பி.க்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஷிண்டே கலந்து கொண்டார். இதில்தான் கஜானன் கீர்த்திகர் தன்னை ஷிண்டே அணியில் சேர்த்துக்கொண்டார். கடந்த ஜூலை மாதம் கஜானன் கீர்த்திகர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது அவரது வீட்டிற்கு ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்தே இந்த அணி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.