Published:Updated:

கர்நாடகா எல்லைப் பிரச்னையில் இட்லி, தோசை புறக்கணிப்பு: புனேயில் சரத் பவார் கட்சி போராட்டம்!

ஹோட்டலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர்

மகாராஷ்டிரா, கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்னையில் புனேயில் இட்லி, தோசைக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

Published:Updated:

கர்நாடகா எல்லைப் பிரச்னையில் இட்லி, தோசை புறக்கணிப்பு: புனேயில் சரத் பவார் கட்சி போராட்டம்!

மகாராஷ்டிரா, கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்னையில் புனேயில் இட்லி, தோசைக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

ஹோட்டலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர்

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே கடந்த சில நாள்களாக எல்லைப் பிரச்னை பெரிய அளவில் வெடித்திருக்கிறது. கர்நாடகா மாநிலம், பெல்காம் சென்ற மகாராஷ்டிரா பஸ்கள் கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்டன. இதனால் மகாராஷ்டிரா பஸ்கள் கர்நாடகா செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி-க்களும் இந்தப் பிரச்னையை எழுப்பினர்.

சரத் பவார்
சரத் பவார்

சரத் பவார் மகள் சுப்ரியா சுலே இந்த விவகாரத்தில் அமித் ஷா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். புனேயில் கர்நாடகா பஸ்களில் கறுப்பு பெயின்ட் அடித்து சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதோடு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தென்னிந்தியர்களின் பிரதான உணவான இட்லி, தோசைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அதன் முன்னாள் மேயர் அங்குஷ் காக்டே தலைமையில் புனேயின் வாதேஷ்வர் கட்டா என்ற ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். அங்கு அவர்கள் இட்லி, தோசையைச் சாப்பிட மறுத்து மராத்தி உணவுகளைச் சாப்பிட்டனர். அதோடு இட்லி, தோசைக்கு எதிராக ஹோட்டலுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

இது குறித்து புனே அங்குஷ் காக்டே கூறுகையில், ``கர்நாடகாவைச் சேர்ந்த பலரும் மகாராஷ்டிராவுக்கு வந்து தொழில் செய்து பிழைக்கின்றனர். கர்நாடகா அரசு எப்படி மகாராஷ்டிரா மக்களை வெறுக்கிறது என்பதைக் காட்டத்தான் இட்லி, சாம்பார், தோசை, மசாலா தோசைக்கு எதிராகப் போராடுகிறோம். தென்னிந்திய உணவுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினாலும், இதனால் ஹோட்டல்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறையும் ஏற்படுத்த மாட்டோம். இரு மாநிலப் பிரச்னை ஓயும் வரை இட்லி, தோசையைத் தொடர்ந்து புறக்கணிப்போம்’’ என்று தெரிவித்தார்.

மும்பை, புனேயில் ஆயிரக்கணக்கான தமிழர்கள், கன்னடர்கள் தெருவோரத்தில் இட்லி வியாபாரம் செய்துவருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தால் இந்த வியாபாரிகள் கலக்கமடைந்திருக்கின்றனர்.