அரசியல்
Published:Updated:

சரத் பவார் ராஜினாமா! - செக் பா.ஜ.க-வுக்கா, அஜித் பவாருக்கா?

சரத் பவார்
பிரீமியம் ஸ்டோரி
News
சரத் பவார்

படங்கள்: தீபக் சால்வி

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப்போவதாக சரத் பவார் அறிவித்திருப்பது மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அவரது இந்த அறிவிப்பு மராட்டிய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இரு குண்டுகள்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே இரு வாரங்களுக்கு முன்பு, “இரு அரசியல் வெடிகுண்டுகள் வெடிக்கப்போகின்றன. ஒன்று மகாராஷ்டிராவிலும், மற்றொன்று டெல்லியிலும் வெடிக்கும்” என்று பேசியிருந்தார். அவற்றில் ஒன்று வெடித்தேவிட்டது.

மும்பையில் 2-ம் தேதி நடந்த சரத் பவாரின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார் சரத் பவார். கட்சியின் நிர்வாகிகளிடம்கூட ஆலோசிக்காமல் கமுக்கமாக அவர் இந்த முடிவை எடுத்தது அரசியல் வட்டாரத்தில் பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியினரோ, சரத் பவாரின் இந்த முடிவுக்குக் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் கொடுத்த நெருக்கடியே காரணம் என குற்றம்சாட்டுகிறார்கள்.

சரத் பவார்
சரத் பவார்

‘அஜித் பவார்’ அரசியல்!

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் பேசுகையில், “தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என பா.ஜ.க நினைக்கிறது. அவரால் கட்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற சந்தேகமும் இருக்கிறது. அதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவாரைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் மேற்கு மகாராஷ்டிராவில் கட்சியை வளர்க்க முடியும் என்று பா.ஜ.க கருதுகிறது.

அஜித் பவார், சரத் பவாரின் சொந்த அண்ணன் மகன். கட்சியில் பெரிய பொறுப்பேதும் இல்லை. என்றாலும், நான்கு முறை துணை முதல்வராக இருந்ததோடு, இப்போதும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர். மகாராஷ்டிர அரசியலில் ஊறித்திளைத்த அவரின் தீவிர ஆதரவாளர்களாக சில எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அதைவைத்து கட்சியை உடைக்க பா.ஜ.க முயல்வதை சரத் பவார் புரிந்துகொண்டார். அவர் அதை விரும்பவில்லை. பா.ஜ.க-வின் இந்த சூழ்ச்சியை முறியடிக்கத்தான் சரத் பவார் ராஜினாமா செய்திருக்கிறார்.

கட்சியின் தலைவர் பதவியை தன் மகள் சுப்ரியா சுலே-வுக்கு அளிப்பதோடு, அஜித் பவாருக்கு முதல்வர் வேட்பாளர் அந்தஸ்தையும் கொடுக்கவிருக்கிறார் சரத் பவார். இதன் மூலம் கட்சியை உடையாமல் காப்பாற்றுவது, அஜித் பவாரைத் தொடர்ந்து கட்சியில் தக்கவைத்துக் கொள்வது, பா.ஜ.க-வின் முயற்சியை முறியடிப்பது என ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை சரத் பவார் அடித்திருக்கிறார்” என்கிறார்கள்.

சரத் பவாரே நீடிக்க வேண்டும்!

சிவசேனா கட்சி உடைந்தபோது பதவி பறிக்கப்பட்ட 16 எம்.எல்.ஏ-களின் வழக்கில் எந்த நேரத்திலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே அணிக்கு எதிராகத் தீர்ப்பு வருமானால் அதைச் சமாளிக்கும் வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அஜித் பவாரைத் தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க முயல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மகாராஷ்டிராவில் நடக்கும் இந்த அரசியல் குறித்து சிவசேனா (உத்தவ்) செய்தித் தொடர்பாளர் நீலம் கோரேவோ, “மகாராஷ்டிராவில் பா.ஜ.க அணி பலவீனமடைந்துவருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் அணியை எதிர்த்து வெற்றிபெற முடியாது என்பதால் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது. இந்த இக்கட்டான சூழலில், சரத் பவார் தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” என்றார்.

அடுத்த தலைவர் யார்?

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கான முடிவை சரத் பவார் அறிவித்தபோது எல்லோருமே அதிர்ச்சியடைந்த போதிலும், அஜித் பவார் அதை நியாயப்படுத்தினார். ‘முதுமையின் காரணமாக சரத் பவார் எடுத்திருக்கும் ராஜினாமா முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். அவரது முடிவைத் திரும்பப் பெறும்படி யாரும் கேட்க வேண்டாம்’ என்று அஜித் பவார் பேசியதைக் கட்சி நிர்வாகிகளே ரசிக்கவில்லை.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க மூத்த தலைவர் பிரஃபுல் பட்டேல் தலைமையிலான கமிட்டியை சரத் பவார் அமைத்திருக்கிறார். புதிய தலைவருக்கான ரேஸில் அஜித் பவார், சுப்ரியா சுலே, பிரஃபுல் பட்டேல், ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த தலைவர் யார் என்பது குறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோவிடம் கேட்டதற்கு, “தலைவரிடம் முடிவை மாற்றிக்கொள்ளும்படி கேட்டிருக்கிறோம். தேவைப்பட்டால் சரத் பவாரின் பணிச்சுமையைக் குறைக்க கட்சிக்கு, செயல் தலைவர் ஒருவரை நியமிக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

ராஜினாமாவுக்கு எதிராக  போராட்டம்
ராஜினாமாவுக்கு எதிராக போராட்டம்

ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்!

இந்தச் சர்ச்சைகள் குறித்து பா.ஜ.க என்ன நினைக்கிறது என்பதை அறிய அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் லக்ஷ்மண் சாவ்ஜியிடம் பேசினோம். “தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இப்போது ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் ஒருவர் தேவை. சோனியா காந்தி தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும், காங்கிரஸை வழிநடத்துவது போல, சரத் பவாருக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தேவை. ஆனால், அஜித் பவார் அதற்குச் சம்மதிப்பாரா எனத் தெரியவில்லை” என்றார்.

இதற்கிடையே, அஜித் பவார் தனக்குத் தலைவர் பதவி தேவையில்லை என்று கூறியிருக்கிறார். சரத் பவாரும் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவார் எனக் கட்சி நிர்வாகிகள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அரசியலில் சாதுர்யமாகக் காய்நகர்த்தத் தெரிந்த மூத்த அரசியல்வாதியான சரத் பவார், ஒரே நேரத்தில் தனது கட்சியின் அஜித் பவாருக்கும், பா.ஜ.க-வுக்கும் செக் வைத்திருக்கிறார்!

அதெல்லாம் இருக்கட்டும்... சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, டெல்லியில் வெடிக்கும் எனத் தெரிவித்த அந்த இன்னொரு வெடிகுண்டு என்னவாக இருக்கும்?