Published:Updated:

மழையில் நனைந்தார்... மக்கள் மனதைக் கரைத்தார்... மகாராஷ்டிராவில் சரத்பவாரின் எழுச்சி!

இருவருக்குள்ளும் என்ன மனக் கசப்போ தெரியவில்லை சரத்பவார் கட்சியை விட்டு விலகி, திடீரென்று பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமானார். சதாரா தொகுதி எம்பி பதவியையும் உதயன்ராஜே ராஜினாமா செய்தார்.

சரத்பவார்
சரத்பவார்

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், அங்கே நடந்த மக்களவை இடைதேர்தல் ஒன்றும் கடும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அந்தத் தொகுதியில் தன் கட்சி வெற்றிபெற்றே தீர வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு பம்பரமாக சுற்றிவந்தார். காரணம், எதிர்த்துப் போட்டியிட்டவர் சரத்பவாரின் முதுகில் குத்தியவர். மகாராஷ்டிர மாநிலம் சதாரா மக்களவைத் தொகுதி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோட்டை.

பாரதிய ஜனதாவில் சேர்ந்த உதயன்ராஜே
பாரதிய ஜனதாவில் சேர்ந்த உதயன்ராஜே

இந்தத் தொகுதியில், கடந்த 2009, 2014 ,2019-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில், தேசியவாத காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றுள்ளது. இந்தக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், உதயன்ராஜே போஸ்லே. இவர், மராட்டிய மாமன்னர் வீர சிவாஜியின் பரம்பரையைச் சேர்ந்தவர். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருடன் உதயன்ராஜே மிகுந்த நெருக்கமாகத்தான் இருந்தார். இருவருக்குள்ளும் என்ன மனக்கசப்போ தெரியவில்லை. சரத்பவாரை விட்டு விலகி, திடீரென்று பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமானார். சதாரா தொகுதி எம்பி பதவியையும் உதயன்ராஜே ராஜினாமா செய்தார்.

இதன் காரணமாக, மீண்டும் சதாராவில் இடைத் தேர்தல் நடத்தப்படவேண்டிய நிலைக்கு சூழல் உருவானது. பாரதிய ஜனதா கட்சி தரப்பில் உதயன்ராஜே மீண்டும் போட்டியிட, சரத்பவார் தன் நீண்ட கால நண்பரான சீனிவாஸ் பாட்டீலைக் களம் இறக்கினார். முதுகில் குத்திவிட்டு எதிர்க்கட்சிக்கு ஓடிய உதயன்ராஜே போஸ்லேவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணமும் அவர் மனதில் இருந்ததாக அரசியல் நோக்கர்கள் எழுதினார்கள். இதனால் சதாரா தொகுதியின் சந்து பொந்துக்குள் எல்லாம் தேர்தல் பிரசாரத்தின்போது சரத்பவாரின் தலை தென்பட்டது.

சரத்பவார்
சரத்பவார்

கடைசிக்கட்ட பிரசாரத்தின்போது, சரத்பவார் செய்த பிரசாரம்தான் ஹைலைட். கடந்த 19-ந் தேதி, சதாராவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சரத்பவாரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தனர். திடீரென்று மழை கொட்டத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தாலும், சரத்பவார் அசைந்துகொடுக்கவில்லை. தன் பேச்சைத் தொடர்ந்தார். யாரையும் தனக்கு குடைபிடிக்க விடவில்லை.

நான் செய்த தவற்றை திருத்திக்கொண்டுவிட்டேன். தேர்தல் தினத்தில் சதாராவில் ஒரு அதிசயம் நிகழும்!
சரத்பவார்

தன் பேச்சில் உதயன்ராஜேவை ஒரு பிடி பிடித்தார். அதற்காக துரோகி, கோழை என்றெல்லாம் திட்டவில்லை. சரத்பவாரின் விமர்சனம் மிக நேர்மையாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. ''மழைக் கடவுள் இந்த நாளில் நம்மை ஆசீர்வதித்துள்ளார். அடுத்து, 21-ம் தேதி தேர்தல் தினத்திலும் நம்மை ஆசீர்வதிப்பார். சதாராவில் அதிசயம் நடக்கும். கடந்த மே மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலின்போது, தவறான நபரை வேட்பாளராக்கி நான் தவறு செய்துவிட்டேன். ஒருவர் தவறு செய்தால், அதைத் தயங்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும்.

Vikatan

என் தவற்றை உங்களிடம் ஒப்புக்கொள்ள நான் தயங்கவில்லை. தவற்றைத் திருத்திக்கொண்டுவிட்டேன்'' என்றார் உருக்கமாக. கொட்டும் மழையில் சரத்பவார் நிகழ்த்திய உருக்கமான பேச்சு, சதாரா மக்களை மட்டுமல்ல மகாராஷ்டிர மக்களின் மனதையும் மழையோடு மழையாகக் கரைத்துவிட்டது. கொட்டும் மழையில் சரத்பவார் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியதோடு, உதயன்ராஜேவையும் க்ளீன் போல்டாக்கியது. இடைத்தேர்தலில் சீனிவாஸ் பாட்டீல் 6,36,620 ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற, உதயன்ராஜே 5,48,903 ஓட்டுகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணிக் கட்சிகள் 190 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால், பாரதிய ஜனதா கூட்டணியால் 161 இடங்களையே பிடிக்க முடிந்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

ஆதித்யா தாக்கரேவை முதல்வராக்க வேண்டுமென்று வைக்கப்பட்டுள்ள பேனர்
ஆதித்யா தாக்கரேவை முதல்வராக்க வேண்டுமென்று வைக்கப்பட்டுள்ள பேனர்

காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிரத்தில் கௌரவமான வெற்றிபெற, கடைசிக் கட்டத்தில் சரத்பவார் செய்த உருக்கமான பிரசாரமும் காரணமாக அமைந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

சரத்பவாரை சிவசேனா பத்திரிகையான 'சாம்னா'வும் பாராட்டியுள்ளது. ''சரத்பவார் மீண்டும் எழுச்சிபெற்றுவருகிறார். சதாரா தொகுதி தோல்வியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மகாராஷ்டிர முதல்வர் பட்னாவீஸ் மல்யுத்த வீரர் என்றால், அவரைத் தோற்கடிக்கும் பலம்கொண்ட மல்யுத்த வீரர், சரத்பவார்'' என்று 'சாம்னா' தன் கட்டுரையில் புகழாரம் சூட்டியுள்ளது.

`தமிழர் vs தமிழர்; 2வது முறை ஜாக்பாட் அடித்த பட்னாவிஸின் நம்பிக்கை!'- மகாராஷ்டிரா தேர்தல் சுவாரஸ்யம்

இதற்கிடையே, மகாராஷ்டிர முதல்வர் பதவியில் சிவசேனாவின் ஆதித்ய தாக்கரேவை அமரவைக்க வேண்டுமென்று மும்பையில் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆதித்யா தாக்கரே, சிவசேனாவை உருவாக்கிய பால்தாக்கரேவின் பேரன். இதுவரை, பால்தாக்கரே வாரிசுகள் தேர்தலில் போட்டியிட்டதில்லை. முதன்முறையாக ஆதித்ய தாக்கரே மும்பையின் ஒர்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.