முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ், தனது லோக்தந்திரிக் ஜனதா தளத்தை லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைத்து கொண்டார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ், ``எங்கள் கட்சியை ஆர்.ஜே.டி-யுடன் இணைப்பது எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்கான முதல் படியாகும். பா.ஜ.க-வைத் தோற்கடிக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது அவசியமாக இருக்கிறது. இப்போதைக்கு, ஒற்றுமைதான் எங்களின் முன்னுரிமை. ஒன்றிணைந்த எதிர் அணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்து பின்னர் சிந்திக்கலாம்” என்றார்.

முன்னதாக மத்தியில், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், சரத் யாதவ் மத்திய அமைச்சராக இருந்தார். சமீபத்தில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், இரு தலைவர்களும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக இணைந்துள்ளனர். இந்த நிகழ்வு பீகார் அரசியலில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
