Published:Updated:

`வேளாண் சட்டங்கள் மட்டுமே காரணம் அல்ல!’- பா.ஜ.க-வுடன் 24 வருட கூட்டணி, வெளியேறியது சிரோமணி அகாலிதளம்

சுக்பீர் சிங் பாதல்
சுக்பீர் சிங் பாதல்

சிரோமணி அகாலிதளம், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகும் மூன்றாவது கட்சி. முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியும், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனாவும் ஏற்கேனவே கூட்டணியிலிருந்து விலகிவிட்டன!

வேளாண் சட்டங்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறுவதாகக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்திருக்கிறார்.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்ட மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகியவற்றுக்கு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களை நடத்திவருகின்றனர். தற்போது தென்னிந்தியாவிலும் இந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

சிரோமணி அகாலிதளம்

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசில், சிரோமணி அகாலிதளம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. மக்களவையில் இரண்டு இடங்களைக்கொண்ட சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அந்தக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக இருக்கிறார். மற்றொரு உறுப்பினரான அவரின் மனைவி ஹர்சிம்ரத் கௌர் பாதல், மோடி அரசில் உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராக இருந்துவந்தார். இந்தநிலையில்தான் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்சிம்ரத் கௌர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கூட்டணியில் தொடர்வது குறித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு; மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா! - யார் இந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல்?

முடிவுக்கு வந்த 24 வருடக் கூட்டணி

இந்தநிலையில் சிரோமணி அகாலிதளக் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டதாக அந்தக் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் செய்தியாளர்களிடம் அறிவித்தார். தொடர்ந்து கட்சி சார்பில் இது தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், `விவசாயிகளின் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படுவதைப் பாதுகாக்க, சட்டபூர்வ உத்தரவாதங்களை வழங்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது. மேலும், காஷ்மீரில் பஞ்சாபி மொழியை அலுவல் மொழியிலிருந்து விலக்குவது போன்ற பஞ்சாபி மற்றும் சீக்கியப் பிரச்னைகள் மீது மத்திய அரசின் தொடர்ச்சியான அக்கறையின்மை காரணமாகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது என முடிவெடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

சிரோமணி அகாலிதளம் கூட்டணி
சிரோமணி அகாலிதளம் கூட்டணி

சிரோமணி அகாலிதளக் கட்சி, கடந்த 24 ஆண்டுகளாக பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்துவந்தது. 1996 -ம் ஆண்டு ஏற்பட்ட இந்தக் கூட்டணி, தற்போது வேளாண் மசோதா மற்றும் சில சீக்கியப் பிரச்னைகளில் மத்திய அரசின் அக்கறையின்மை காரணமாக முடிவுக்கு வந்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுவனர்களில், அகாலிதளத்தின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பாதுகாக்காது! - நிரூபித்த பழனிசாமி அரசு

கூட்டணியிலிருந்து விலகும் மூன்றாவது கட்சி

முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் கூட்டணியிலிருந்து விலகியது தொடர்பாக ட்விட்டரில், ``மூன்று கோடி பஞ்சாப் மக்களின் வலியும், போராட்டங்களும் அரசாங்கத்தின் மனதை உருகவைக்கவில்லையென்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணி, வாஜ்பாய் மற்றும் பாதல் ஆகியோர் கண்ட கனவின் வழியில் இல்லை என்பது உறுதி. ஒரு கூட்டணிக் கட்சி, அதன் பழைமையான கூட்டணிக் கட்சியின் குரலைக் கேட்காமலும், தேசத்துக்கே உணவளிப்பவர்களைக் கண்டுகொள்ளாமலும் இருந்தால், பஞ்சாப் மக்களின் விருப்பத்திலும் இருக்க மாட்டீர்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

ஹர்சிம்ரத் கெளர்
ஹர்சிம்ரத் கெளர்

சிரோமணி அகாலிதளக் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகும் மூன்றாவது கட்சி. முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியும், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனாவும் ஏற்கெனவே கூட்டணியில் இருந்து விலகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு