Published:Updated:

`பா.ஜ.க-வை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில்..!’ - சிவசேனாவின் `திடீர்’ அழைப்பு

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

`பா.ஜ.க-வை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கீழ் ஒன்றுபட்டு ஒரு வலுவான எதிர்க்கட்சியாக மாற வேண்டும்’ என்று சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான `சாம்னா’வில் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது.

``தேசிய அளவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது. பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகள் அனைத்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் ஒன்றிணைந்து ஒரு பலமான மாற்றுக் கட்சியாக உருவாக வேண்டும்’’ என்று சிவசேனாவின் நாளேடான `சாம்னா’ -வில் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சாம்னாவில் வெளியாகியிருக்கும் கட்டுரையில்,

`தற்போதைய நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்போல இருக்கிறது’ - சாம்னா

``டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை மத்தியில் ஆட்சி செய்பவர்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களின் அலட்சியத்துக்கு பலமான எதிர்ப்பு இல்லாததே காரணம். மத்திய அரசைக் குறைகூறுவதற்கு பதில் பிரதான எதிர்க்கட்சிகள், தங்களின் தலைமை குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ராகுல் காந்தி ஒரு வலுவான போராட்டத்தை நடத்துகிறார். ஆனால், அந்தப் போராட்டத்தில் ஏதோ குறை இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடத்தும் மாநிலங்கள்கூட இந்த விவசாயிகளின் போராட்டத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டதுபோலத் தெரியவில்லை. அவர்கள் என்ன செய்துவருகிறார்கள் என்ற ஒரு தெளிவும் இல்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
2ANI

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தேசிய அளவில் தனித்துவமான ஆளுமையாக இருக்கிறார். மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தனியாக ஒரு போரை நடத்திவருகிறார். அவருடன் அனைவரும் துணை நிற்க வேண்டும். மம்தா, சரத்பவாரிடம் மட்டுமே பேசியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் மேற்கு வங்கம் செல்கிறார். ஆனால், இது காங்கிரஸ் தலைமையில் நடைபெற வேண்டும்.

டெல்லி சலோ... வெற்றி ரகசியம்... விவசாயிகளின் வியூகத்தால் விழிபிதுங்கும் பி.ஜே.பி அரசு!

திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, அகாலிதளம், பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலங்கானாவைச் சேர்ந்த சந்திரசேகர் ராவ், ஒடிசாவின் நவீன் பட்நாயக், கர்நாடகாவின் குமாரசுவாமி இவர்கள் அனைவருமே பா.ஜ.க-வுக்கு எதிரானவர்கள். ஆனால், இவர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இல்லை. இவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேராவிட்டால், ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக மாற முடியாது.

`அகமதுபடேல், மோதிலால் வோரா போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இப்போது இல்லை. காங்கிரஸை யார் வழிநடத்துவார்கள்? ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் எதிர்காலம் என்ன என்பதில் தெளிவு இல்லை’ - சாம்னா

பா.ஜ.க-வினரால் ராகுல் காந்தி கேலி செய்யப்படுகிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பிரியங்கா காந்தி கைதுசெய்யப்படுகிறார். மகாராஷ்டிராவில் தாக்கரேவின் அரசாங்கத்தை நடக்கவிடாமல் தடை செய்கிறார்கள். இவை அனைத்தும் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ) பா.ஜ.க-வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இல்லை என்பதுபோல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் வேறு யாரும் இல்லை. ஆனால், பா.ஜ.க முழுமையான அதிகாரத்தில் இருக்கிறது. அவர்களுக்கு நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா போன்ற சக்தி வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அப்படி எதுவும் இல்லை.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

இந்த விஷயத்தில் காங்கிரஸ் தீவிரமாக சிந்தித்துச் செயல்படவில்லையென்றால், எதிர்காலம் மிகக் கடுமையாக இருக்கும் என்ற எச்சரிக்கை மணி ஒலிக்கிறது’’ என்று சாம்னா கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு