Published:Updated:

சிவசேனா வேட்பாளர் வெற்றி: மும்பை இடைத்தேர்தலில் ஹைலைட் ஆன `நோட்டா’ - என்ன காரணம்?

வெற்றிபெற்ற ருதுஜாவுக்கு இனிப்பு ஊட்டும் மகள்

மும்பையில் நடந்த இடைத்தேர்தலில் சிவசேனா வேட்பாளர் வெற்றிபெற்றபோதிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைத்திருக்கிறது.

சிவசேனா வேட்பாளர் வெற்றி: மும்பை இடைத்தேர்தலில் ஹைலைட் ஆன `நோட்டா’ - என்ன காரணம்?

மும்பையில் நடந்த இடைத்தேர்தலில் சிவசேனா வேட்பாளர் வெற்றிபெற்றபோதிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைத்திருக்கிறது.

Published:Updated:
வெற்றிபெற்ற ருதுஜாவுக்கு இனிப்பு ஊட்டும் மகள்

மும்பை அந்தேரி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு மூன்று நாள்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் அனைவரும் எதிர்பார்த்ததுபோல் சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கே 66 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க முதலில் வேட்பாளரை அறிவித்துவிட்டு திரும்பப் பெற்றுக்கொண்டது. ருதுஜாவின் கணவர் இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தார். அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து சிவசேனா ருதுஜாவை இடைத்தேர்தலில் நிறுத்தியது. ருதுஜாவைத் தங்களது அணி சார்பாகப் போட்டியிடவைக்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பாகக் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்தப் பிரச்னை நீதிமன்றம் வரை சென்றதால் வேறு வழியில்லாமல் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பாஜகவும் ஒதுங்கிக்கொண்டன.

வெற்றிக்கொண்டாட்டத்தில் சிவசேனாவினர்
வெற்றிக்கொண்டாட்டத்தில் சிவசேனாவினர்

இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தால் அடுத்த சில மாதங்களில் நடக்கவிருக்கும் மாநகராட்சித் தேர்தலில் பின்னடைவாக அமையும் என்று பா.ஜ.க ஒதுங்கியது. ஆனால் ஒதுங்கிக்கொண்டாலும் தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அதாவது மக்களுக்குப் பணம் கொடுத்து நோட்டாவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டதாக உத்தவ் தாக்கரே தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

உத்தவ் தாக்கரேவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும்விதமாக இந்தத் தேர்தலில் நோட்டாவுக்கு அதிகபட்ச வாக்குகள் கிடைத்திருக்கின்றன. நோட்டாவுக்கு 12 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருக்கின்ரன. இந்த அளவுக்கு நோட்டாவுக்கு தேசிய அளவில் எங்கும் வாக்குகள் கிடைத்தது கிடையாது. நோட்டா இரண்டாவது இடத்துக்கு வந்தது. ஆனாலும் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு நடக்கும் முதல் தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வெற்றிபெற்றிருப்பது அந்த அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதுவும் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உத்தவ் தாக்கரே அணியினர் மிகவும் சிரமப்பட்டனர்.

நோட்டா
நோட்டா

இது குறித்து அரசியல் நிபுணர் சந்தோஷ் பிரதான் செய்தியாளர்களிடம், ``இந்தத் தேர்தல் வெற்றி சிவசேனாவுக்கு நிச்சயம் தொண்டர்களிடம் ஒருவித உற்சாகத்தை கொடுக்கும். பா.ஜ.க-வினர் நோட்டாவுக்கு வாக்களித்தபோதிலும் சிவசேனா வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். இந்த வெற்றி பா.ஜ.க-வுக்கு நிச்சயம் உதவியாகத்தான் இருக்கும். நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி பிரசாரம் செய்திருந்தால் அது நிச்சயம் மோசமான அரசியலாகத்தான் இருக்கும்'' என்று தெரிவித்தார்.