Published:Updated:

பா.ஜ.க மறுப்பு; என்சிபியின் `ஒற்றை கண்டிஷன்'- திருப்பம் காணும் மகாராஷ்டிரா அரசியல்!

``எங்கள் முடிவை ஆளுநரிடம் தெரிவித்துவிட்டோம். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்க சிவசேனா விரும்பினால், அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்"

மகாராஷ்டிரா பா.ஜ.க - சிவசேனா கூட்டணி
மகாராஷ்டிரா பா.ஜ.க - சிவசேனா கூட்டணி

மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில், ஆட்சியமைக்க வருமாறு பா.ஜ.க-வுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்திருந்தார். ஆளுநரின் அழைப்பை அடுத்து, இன்று மும்பையில் பா.ஜ.க-வின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பட்னாவிஸ் இல்லத்தில் மாநில பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் என முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பா.ஜ.க டெல்லி தலைமையின் சிக்னலுக்கு காத்திருப்பது என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி மாலை டெல்லி தலைமை தகவல் கொடுத்ததை அடுத்து ஆளுநரை சந்தித்தனர் பா.ஜ.க நிர்வாகிகள்.

பா.ஜ.க மறுப்பு; என்சிபியின் `ஒற்றை கண்டிஷன்'- திருப்பம் காணும் மகாராஷ்டிரா அரசியல்!

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த், ``சிவசேனா முதல்வர் பதவி கேட்டுப் பிடிவாதம் செய்கிறது. சிவசேனா - பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர். மக்களின் முடிவை அவமதிக்கும் செயல் இது. சிவசேனா கட்சி மக்களின் தீர்ப்பை உதாசினப்படுத்திவிட்டது. எனவே, நாங்கள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். எங்கள் முடிவை ஆளுநரிடம் தெரிவித்துவிட்டோம். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்க சிவசேனா விரும்பினால், அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.

அவர் கூறியதுபோலவே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இதை உறுதிப்படுத்தும்விதமாகவே அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் இன்றைய பேட்டியும், சாம்னா பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரையும் அமைந்திருந்தது. சாம்னாவில், ``அடுத்த மகாராஷ்டிரா முதல்வர் குறித்து கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்வார் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, பா.ஜ.க ஆட்சியமைக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து தற்போது சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார் அம்மாநில ஆளுநர்.

பா.ஜ.க மறுப்பு; என்சிபியின் `ஒற்றை கண்டிஷன்'- திருப்பம் காணும் மகாராஷ்டிரா அரசியல்!

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க விருப்பமா என்று 56 இடங்களைக் கைப்பற்றிய 2வது தனிப்பெரும் கட்சி அடிப்படையில் சிவசேனாவுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. அழைப்புக்கு இடையே சிவசேனா உடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிவசேனா முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், அக்கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை ஏற்கும் பட்சத்தில் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸின் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனைகளை ஏற்றால் சிவசேனா ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்.எல்.ஏ-க்கள் தேவை. 56 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் சிவசேனா, 54 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் இணையும் பட்சத்தில் 110 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும். அந்தச் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் 44 உறுப்பினர்கள் ஆதரவு தரும் பட்சத்தில் சிவசேனா பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.