Published:Updated:

`சாவர்க்கருக்கு பாரத ரத்னா; எதிர்த்தால் ஜெயில்!’- யாரை எச்சரிக்கிறார் சிவசேனாவின் சஞ்சய் ராவத்?

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

``சஞ்சய் ராவத் சிவசேனாவின் செய்தி தொடர்பாளர். இவரின் இந்தக் கருத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவின் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது” என அம்மாநில பா.ஜ.க தலைவர் கூறியுள்ளார்.

இந்துத்துவ சிந்தனைகளைக் கொண்ட சாவர்க்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்குவது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நிலவி வருகின்றன. இந்நிலையில், சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் நேற்று விருது வழங்குவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``வீர சாவர்க்கருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையைதான் நாங்கள் எப்போதும் முன் வைக்கிறோம். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவன் ஷாஹப், சாவர்க்கரின் தியாகத்தையும் போராட்டத்தையும் பற்றி அறிவார். சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவதுக்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்கள் எந்தக் கட்சியை, கொள்கையைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை கண்டிப்பாக அதே அந்தமான் சிறையில் இரண்டு நாள்களுக்கு அடைக்க வேண்டும். சாவர்க்கர், தேசத்துக்காக அளித்த பங்கையும் தியாகத்தையும் அப்போதுதான் அவர்களும் உணர்வார்கள்” என்று பேசியுள்ளார்.

`வீர் சாவர்க்கர் கித்னா வீர்’- சர்ச்சை புத்தகத்தால் காங்கிரஸ்-சிவசேனா கூட்டணிக்குள் மோதல்!

சஞ்சய் ராவத்தின் கருத்து குறித்து மகாராஷ்டிராவின் பா.ஜ.க துணைத் தலைவர் கிரித் சோமையா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``சஞ்சய் ராவத் சிவசேனாவின் செய்தி தொடர்பாளர். இவரின் இந்தக் கருத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவின் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இது ராகுல் காந்திக்கான குறுஞ்செய்தி” என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கடந்த டிசம்பர் மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது, `ரேப் இன் இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதுக்காக மன்னிப்பு கேட்க மறுத்தார். மேலும், ``எனது பெயர் ராகுல் காந்தி, ராகுல் சாவர்க்கர் அல்ல” என்று பேசியது கவனிக்கத்தக்கது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஏற்கெனவே கடந்த 15ம் தேதி, ``ஒரு காலத்தில் சோட்டா ஷாகீல், தாவூத் இப்ராஹிம், ஷரத் ஷெட்டி ஆகியோருக்கு மும்பையில் யார் காவல்துறைக் கண்காணிப்பாளராக வரவேண்டும் அமைச்சராக வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இருந்தது. தென் மும்பையில், இந்திரா காந்தி அடிக்கடி கரீம் லாலைச் சென்று சந்தித்து வருவார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதை காங்கிரஸ் கட்சியினர் வன்மையாகக் கண்டித்தனர். பின்னர், ``காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நண்பர்கள் கவலைப்படத் தேவையில்லை. நான் கூறியது இந்திரா காந்தியினுடைய மதிப்பைப் புண்படுத்துவதாக யாராவது உணர்ந்தால், எனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று அடுத்தநாள் கூறியிருந்தார்.

`Holy Land' சாவர்க்கர்..! ராகுல் காந்தியுடன் பி.ஜே.பி-யை முட்டி மோத வைக்கும் சாவர்க்கர் யார்?

இந்திரா காந்தியின் மீதான விமர்சனமும் சாவர்க்கர் குறித்த சர்ச்சை பேச்சும் கூட்டணியிலிருக்கும் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிவசேனா தலைவர்களில் ஒருவரான ஆதித்யா தாக்ரே இந்தப் பிரச்னை குறித்து தனது விளக்கத்தையும் பதிவு செய்துள்ளார்.

அதில், ``சஞ்சய் ராவத் எந்த அர்த்தத்தில் பேசியுள்ளார் என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி பலமாக உள்ளது. சில விஷயங்களில் எங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். இதைத்தான் நாம் ஜனநாயகம் என்கிறோம். ஆனால், மாநிலத்தினுடைய வளர்ச்சிக்கு இணைந்து செயல்பட்டு வருகிறோம். வெவ்வேறு கொள்கைகள் இணைந்து செயல்பட முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் அர்த்தம். காங்கிரஸ் மட்டும் சிவசேனாவுக்கு இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார்.

ஆதித்யா தாக்ரே
ஆதித்யா தாக்ரே

தொடர்ந்து பேசிய அவர், ``வரலாறுகளைப் பற்றி விவாதித்து நம்முடைய நேரத்தை இழக்க வேண்டாம். நாம் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்த வேண்டும். பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை போன்ற பெரிய பிரச்னைகள் இங்கு உள்ளன. அமைதிக்காகவும் மகிழ்ச்சிக்காவும் தொடர்ந்து உழைக்க வேண்டும். அனைவரிடமும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்வோம். ஆனால், அதையே மீண்டும் செய்ய வேண்டாம்” என்று பேசினார்.

சாவர்க்கர் விருது குறித்த சர்ச்சை தொடர்பாகப் பேசும்போது, ``அனைத்துமே ரத்தினாக்கள்தான். பாரத ரத்னா வழங்குவது குறித்த முடிவு மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் கைகளில்தான் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தில் மாநிலம் இன்றைக்கு இருக்கும் நிலையைப் பார்த்தால் இந்த ரத்னாக்கள் மகிழ்ச்சியாக இருக்குமா கவலைக்குரியதாக இருக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்” என்றும் பேசியுள்ளார்.

`நான் ராகுல், சாவர்க்கர் இல்லை…’
ராகுல் காந்தி சொன்னது ஏன்?
அடுத்த கட்டுரைக்கு