Election bannerElection banner
Published:Updated:

`கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறியது மோடி அரசு; வேடிக்கை பார்க்கிறது உச்ச நீதிமன்றம்’-சிவசேனா காட்டம்

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும், ஆனால் இதைக் கண்டுகொள்ளாமல் சுப்ரீம் கோர்ட் பார்த்துக்கொண்டிருக்கிறது என்றும் சிவசேனா குற்றம்சாட்டியிருக்கிறது.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. ஆனால், மத்திய அரசு அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் நரேந்திர மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக உலக மீடியாக்கள் குற்றம்சாட்டிவருகின்றன. ஃபேஸ்புக்கில் #ResignModi என்ற ஹேஷ்டேக் பதிவிடப்பட்டுவருகிறது. ஆனால், மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாக அதை ஃபேஸ்புக் நிர்வாகம் மறைத்துவிட்டது. பின்னர் தவறுதலாக அந்த ஹேஷ்டேக்கை பிளாக் செய்துவிட்டதாக ஃபேஸ்புக் நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்தநிலையில், நரேந்திர மோடி அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக, மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் அதன் ஆசிரியர் சஞ்சய் ராவத் எழுதியுள்ள தலையங்கத்தில், ``நாடு முழுவதும் கொரோனா நெருக்கடி இருந்துவருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. இதை சுப்ரீம் கோர்ட் உறுதிபடுத்தியிருக்கிறது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

ஆனாலும் சுப்ரீம் கோர்ட் வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு அடியோடு செயலிழந்துவிட்டது. மருத்துவ ஆக்ஸிஜன், படுக்கைகள், தடுப்பூசி போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைகளில் விபத்துகள் ஏற்பட்டு, நோயாளிகள் இறந்துவருவதைக் காரணம் காட்டி மகாராஷ்டிரா அமைச்சர்களை பா.ஜ.க தலைவர்கள் ராஜினாமா செய்யும்படி கேட்கின்றனர்.

ஆனால், மேற்கு வங்க தேர்தல் மற்றும் கும்பமேளா விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. நாடு தற்போது எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடிக்கு சுப்ரீம் கோர்ட் வெறுமனே பார்த்துக்கொண்டு இருப்பதுதான் காரணம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கத் தேர்தலில் முகக்கவசம் அணியாமல் பிரசாரம் செய்கிறார். ஹரித்வார் கும்பமேளாவில் கலந்துகொண்ட யாரும் முகக்கவசம் அணியவில்லை. தேர்தல் கமிஷன், போலீஸ், கோர்ட் போன்றவை வெறுமனே பார்வையாளர்களாக இருக்கின்றன.

மோடி அரசு அரசியல் விரோதத்தைக் கைவிட்டுவிட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து கொரோனாவை ஒழிக்க சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சஞ்சய் ராவத் தனியாக அளித்த பேட்டியில், ``கொரோனாவை தேசியப் பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியிடம் பல முறை கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் தெரிவித்துவிட்டார். தாக்கரே இதை ஒரு மாதமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போது இதை சுப்ரீம் கோர்ட்டும் கையில் எடுத்துள்ளது.

கொரோனா பிரச்னையில் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலையிட்டிருப்பது நாட்டுக்கு நல்லது. கொரோனா விவகாரத்தில் மகாராஷ்டிராவுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அரசின் முயற்சிகளை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு