Election bannerElection banner
Published:Updated:

`சம்மன் அஸ்திரம்; 121 பேர் பட்டியல்!’ - சிவசேனா Vs பா.ஜ.க; என்ன நடக்கிறது மகாராஷ்டிராவில்?

 சஞ்சய் - வர்ஷா ராவத்
சஞ்சய் - வர்ஷா ராவத்

சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்தை நேரில் ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிராவில் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பா.ஜ.க-வால் தற்போது அதிகாரம் இல்லாமல்அமைதியாக இருக்க முடியவில்லை. சிவசேனா கூட்டணி அரசைக் கவிழ்க்க தொடக்கம் முதலே முயற்சி மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சி கொரோனா சூழலால் தடைப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், பா.ஜ.க 105 இடங்களைப் பெற்றது. ஆனால், 56 இடங்களை மட்டுமே வென்ற சிவசேனா, தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று முரண்டுபிடித்தது. இதனால், பா.ஜ.க ஆட்சியமைக்க முடியாமல்போனது. இப்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்பதற்காக பா.ஜ.க., தன்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்துவருவதாக ஆளும் கூட்டணிக் கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டிவருகின்றன.

ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விலைபோனது போன்று மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விலை போகாததால், பா.ஜ.க-வின் எண்ணமும் ஈடேறவில்லை எனவும் அந்தக் கட்சிகள் மார்தட்டின. மகாராஷ்டிராவில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலம் சிவசேனாவை இப்போது பா.ஜ.க மிரட்டத் தொடங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஏற்கெனவே சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக்குக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்திருக்கிறது. அந்த வகையில் இப்போது சிவசேனா செய்தித் தொடர்பாளராகவும், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வலதுகரமாகவும் செயல்படும் சஞ்சய் ராவத் மனைவி வர்ஷா ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருக்கிறது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

வர்ஷா ராவத்துக்கு சம்மன் - ஏன்?

மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவந்த பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, கடந்த ஆண்டு ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்துக்குக் கொடுத்திருந்த ரூ.4,355 கோடி கடன் வராக்கடனாக மாறியது. இதனால், வங்கியின் செயல்பாடு முடக்கப்பட்டிருக்கிறது. ஹெச்.டி.ஐ.எல் கிளை நிறுவனம் ஒன்றில் இயக்குநராக இருந்த பிரவீன் ராவத் உட்பட மோசடியில் சிக்கிய 19 பேரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். பிரவீன் ராவத்தின் மனைவி மாதுரி மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் ரூ.55 லட்சம் கடனாக வாங்கி வீடு வாங்கினார். வர்ஷா ராவத்தும் மாதுரியும் தோழிகள் என்பதால், வர்ஷா கடன் வாங்க மாதுரி உதவி செய்தார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட இந்தக் கடன் விவரத்தை தூசுதட்டி எடுத்து, இப்போது அமலாக்கப் பிரிவு வர்ஷாவுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. கடந்த 11 மற்றும் 22 தேதிகளில் நேரில் ஆஜராகுமாறு இரண்டு முறை வர்ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இப்போது மூன்றாவது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பி, 28-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டபோது அமைதியாக இருந்த சஞ்சய் ராவத், இப்போது மட்டும் திடீரென கொதிப்பதற்குக் காரணம் இருக்கிறது. மூன்று முறை தொடர்ந்து சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முடியும்.

வர்ஷா ராவத் நேற்று ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் மீண்டும் ஆஜராகவில்லை. அதோடு தனக்கு நேரில் ஆஜராக அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனால் வர்ஷா ராவத் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது

`பா.ஜ.க தலைமையகம்!’ - மும்பை அமலாக்கத்துறை அலுவலகம் முன் பேனர் வைத்த சிவசேனா

எதற்கும் பயப்பட மாட்டோம்!

தனது மனைவிக்கு சம்மன் அனுப்பப்பட்டதால் கொதித்துப்போயிருக்கும் சஞ்சய் ராவத், மூன்றாவது நோட்டீஸ் குறித்துப் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், ``கடந்த ஒன்றரை மாதத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் எங்களைப் பலமுறை தொடர்புகொண்டு பல தகவல்கள் மற்றும் ஆவணங்களைக் கேட்டனர். நாங்களும் கொடுத்துவந்தோம். 10 ஆண்டுகளுக்கு முந்தைய கடன் விவகாரத்தில் இப்போது அமலாக்கப் பிரிவு விழித்துக்கொண்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகிய விசாரணை ஏஜென்சிகள் மீது ஒரு மரியாதை இருக்கிறது. அவர்கள் ஒன்றை விசாரிக்கிறார்களென்றால் ஏதோ பெரிய பிரச்னை என்று மக்கள் நினைத்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தனக்குப் படியாத அரசியல் கட்சிகள் மீது கோபத்தைக் காட்ட அமலாக்கப் பிரிவு மூலம் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நோட்டீஸ் வரட்டும். கைது செய்யுங்கள். அதைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி

பா.ஜ.க தலைவர்கள் சிலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்சியைக் கவிழ்த்துவிடுவதாக மிரட்டிவருகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் பா.ஜ.க மூத்த தலைவர்களும், அவர்களது கூட்டாளிகளும் என்னைச் சந்திக்க முயன்றனர். அவர்களின் ஒரே நோக்கம் சிவசேனா கூட்டணி அரசைக் கவிழ்ப்பதாக மட்டுமே இருந்தது. என்ன விலை கொடுத்தேனும் ஆட்சியைக் கவிழ்ப்பதில் தீவிரமாக இருந்தனர். எனக்கும் பல வழிகளில் மிரட்டல் வந்தது. `தாக்கரே குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர்கள், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் பட்டியலைக் காட்டினர். அமலாக்கப் பிரிவு மூலம் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து பதவியை ராஜினாமா செய்யவைத்து, ஆட்சியைக் கவிழ்த்துவிடுவோம்’ என்று என்னிடம் மிரட்டினர்.

நவம்பர் 22-ம் தேதிக்குள் ஆட்சியைக் கவிழ்க்க இலக்கு நிர்ணயித்திருந்தனர். நீங்கள் நோட்டீஸ் அனுப்புங்கள். கைதுசெய்யுங்கள். நோட்டீஸுக்கு பதிலளிப்போம். ஆனால், அவர்களின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி பயனளிக்காது. நாங்கள் பயப்பட மாட்டோம். பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களின் முயற்சிக்கு சிவசேனா வழியில் பதிலளிப்போம். எங்களுக்கு அமலாக்கத்துறை பெரிய பொருட்டே கிடையாது. அவர்கள் (பா.ஜ.க), தங்களது விரக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

மோசடியில் ஈடுபட்ட 121 பா.ஜ.க தலைவர்கள்

மோசடியில் ஈடுபட்ட பா.ஜ.க தலைவர்கள் 121 பேரின் ஃபைல் என்னிடம் இருக்கிறது. அதை விசாரிக்கவே அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ஐந்து ஆண்டுகள் பிடிக்கும். பா.ஜ.க தொடர்ந்து எதிர்க்கட்சிகளை இலக்குவைத்து செயல்பட்டால் அந்தப் பட்டியலை வெளியிடுவேன். நான் வெளியிட்டால் அவர்கள் நாட்டைவிட்டுத்தான் ஓட வேண்டிவரும். நேரம் வரும்போது நான் அவற்றை வெளியிடுவேன். மத்திய அரசு மிகவும் தரம் தாழ்ந்து அரசியல் எதிரிகளின் குழந்தைகள், பெண்கள் மற்றும் குடும்பத்தினரைக் குறிவைத்துச் செயல்படுகிறது’’ என்று சஞ்சய் ராவத் கொதித்திருக்கிறார்.

அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு சிவசேனா இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனில் தேஷ்முக் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியா துண்டு துண்டாகும்!

மத்திய அரசு அமலாக்கப் பிரிவு மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டிவருவது குறித்து சிவசேனா, தனது கட்சிப் பத்திரிக்கையான சாம்னாவில் கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில், `பா.ஜ.க அல்லாத ஆட்சிகளைக் கவிழ்கும் மத்திய அரசின் நடவடிக்கையால் ரஷ்யா போன்று இந்தியா உடைந்துவிடும். பிரதமர் மாநில அரசுகளைக் கவிழ்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறார். அரசியல் காரணங்களுக்காக மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார். அரசியல் ஆதாயத்துக்காக மக்களைத் துன்புறுத்துகிறோம் என்று மத்திய அரசு உணரவில்லையெனில், ரஷ்யாவைப்போல் இந்தியாவும் உடைவதற்கு அதிக நாள்கள் பிடிக்காது. விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசு, நடிகை கங்கனா ரணாவத் போன்றோரைப் பாதுகாக்க முயல்கிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பா.ஜ.க-விலிருந்து விலகி சரத்பவார் கட்சியில் சேர்ந்திருக்கும் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவுக்கும் அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பத் தவறவில்லை. பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கைகளுக்கு சிவசேனா வேறு வழிகளில் எதிர்வினையாற்றிவருகிறது.

மோடியின் கனவு திட்டத்துக்குத் தடை!

பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டத்துக்கு சிவசேனா அரசு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்துக்கு தேவையான நிலத்தை சிவசேனா கூட்டணி அரசு கையகப்படுத்திக் கொடுக்க மறுக்கிறது. அதோடு, நிலம் கொடுக்க மறுத்துப் போராடும் விவசாயிகளுக்கு சிவசேனா ஆதரவும் தெரிவித்திருக்கிறது. இதனால் திட்டமிட்டபடி 2023-ம் ஆண்டு புல்லட் ரயில் திட்டத்தை முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே, புல்லட் ரயில் திட்டத்தை தற்போதைக்கு குஜராத்துக்குள் முதற்கட்டமாக இயக்க தேசிய விரைவு ரயில் கழகம் பரிசீலித்துவருகிறது. அகமதாபாத்திலிருந்து வாபி வரை இதை இயக்க, பரிசீலிக்கப்பட்டுவருகிறது. மற்றொருபுறம் பா.ஜ.க மும்பையில் நிறைவேற்றப்படும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது.

- மு.ஐயம் பெருமாள்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு