Published:Updated:

`பா.ஜ.க ஓ.கே; காங்கிரஸ் வேண்டவே வேண்டாம்!' - சிவசேனாவைச் சிக்கலில் ஆழ்த்தும் 4 விஷயங்கள்

என்ன நடந்தாலும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இணையாது என அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

சிவசேனா
சிவசேனா ( Twitter/ @AUThackeray )

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அங்கு தினமும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. பா.ஜ.க - சிவசேனா ஒரு கூட்டணியாகவும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் இணைந்து மகாராஷ்டிர தேர்தலைச் சந்தித்தன. வாக்குப்பதிவு முடிவில் பா.ஜ.க 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்று, கூட்டணியாக ஆட்சியமைக்கத் தயாரானது.

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

அதேபோல் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவையான நிலையில் 161 இடங்களில் வெற்றி பெற்று அசுரபலம் பெற்றது பா.ஜ.க - சிவசேனா கூட்டணி. ஆனால் தற்போது அதுவே அவர்களுக்கு எதிர்வினையாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின்போதே பா.ஜ.க-வும் சிவசேனாவும் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. ‘மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால், இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் அந்த மாநிலத்தை ஆள வேண்டும்’ என்பதுதான் அந்த டீல். தேர்தலில் வெற்றி பெற்றபிறகு தங்களுக்குள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இரண்டரை ஆண்டுகள் ஆட்சி தங்களுக்கு வேண்டும் எனக் கேட்கிறது சிவசேனா. ஆனால், ஒப்பந்தத்தை மீறி துணை முதல்வர் பதவி வேண்டுமானாலும் தருகிறோம், ஆட்சியை விட்டுத் தர முடியாது என ஒற்றைக் காலில் நிற்கிறது பா.ஜ.க.

உத்தவ் தாக்கரே - அமித் ஷா
உத்தவ் தாக்கரே - அமித் ஷா

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும் இன்னும் அங்கு ஆட்சி அமையவில்லை. எப்படியாவது மகாராஷ்டிராவில் தங்களின் ஆட்சி அமையவேண்டும் என்று சிவசேனாவுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது பா.ஜ.க தலைமை. ஆனால், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் முதல்வர் பதவி மட்டுமே போதும் என்று பிடிவாதம் பிடித்து வருகிறது சிவசேனா. `பா.ஜ.க தேசிய அளவில் வளர்ந்த கட்சி, நாங்கள் எங்கள் கட்சியையும் வளர்க்க வேண்டும். அதற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம், அதனால், முதல்வர் பதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது’ எனப் பதவிக்கான காரணத்தையும் சிவசேனா வெளிப்படையாகக் கூறிவிட்டது.

கடைசியாக பி.ஜே.பி முன்வைத்துள்ள 3 சான்ஸ்!- செவிசாய்க்குமா சிவசேனா?

இரண்டு கட்சிகளும் தங்களுக்கான வலுவான காரணத்தை வைத்திருந்தாலும் தங்கள் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்க இருவருமே மறுகின்றனர். இதற்கிடையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். பா.ஜ.க தங்கள் வழிக்கு வரவில்லையென்றால், பிளான் பி -க்காகவே சிவசேனா, சரத்பவாரைச் சந்தித்ததாக நேற்று முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால், `என்ன நடந்தாலும் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைக்காது' என்ற கருத்து அழுத்தமாக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிவசேனா வட்டாரங்கள் கூறிய கருத்தை ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.

சரத் பவர் - உத்தவ் தாக்கரே
சரத் பவர் - உத்தவ் தாக்கரே

முதலில் கருத்து வேறுபாடு : அரசியல் மற்றும் தேசிய பிரச்னைகளைப் பொறுத்தவரை சிவசேனா மற்றும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸின் நிலைப்பாடு முற்றிலும் எதிர்மறையானவை. ராமர் கோயில், காஷ்மீர் சிறப்புச் சட்டம் நீக்கம் போன்ற அனைத்து விவகாரங்களிலும் காங்கிரஸுக்கு எதிரான கருத்தையே சிவசேனா தெரிவித்து வந்தது.

தி.மு.க வழியில் சிவசேனா... தேர்தல் களத்தில் சவாலைச் சந்திப்பாரா, ஆதித்யா தாக்கரே?

அடுத்தது நம்பிக்கையின்மை : சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் நல்ல நட்பில் இருந்தார். ஆனால், தற்போது தலைவராக உள்ள உத்தவ் தாக்கரே, சரத்பவாரை பெரிதாக நம்புவதும் இல்லை; அவருடன் பேசுவதும் இல்லை. ஒருவேளை சிவசேனா, என்.சி.பி-யுடன் கூட்டணி வைத்தால் அந்த ஆட்சி ஐந்து ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யாது என சிவசேனா நிர்வாகிகள் சிலர் கருதுகிறார்களாம்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
Twitter/ @AUThackeray

மூன்றாவது வெற்றிபெற்ற இடங்கள் : சிவசேனா - என்.சி.பி வெற்றி பெற்ற இடங்கள் மொத்தமாக 110 ஆக தற்போது உள்ளன. இரண்டு கட்சிகளும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைத்தால் அது நிலையாக இருக்காது. மேலும், தங்கள் ஒவ்வொரு தேவைக்கும் அவர்கள் காங்கிரஸையே நம்பி இருக்க வேண்டும் என சிவசேனா நினைக்கிறது.

`முதல்வரா... துணை முதல்வரா?!'-  புதிய ஃபார்முலாவில் கறார் காட்டும் தாக்கரே குடும்பம்

நான்காவது முதலமைச்சர் பதவி : சிவசேனாவும் என்.சி.பி-யும் இணைந்து ஆட்சியமைத்தால் முதல்வராக யார் பதவி ஏற்பது என்ற குழப்பம் நீடிக்கிறது. நிலையில்லா கூட்டணியை பா.ஜ.க-விடமிருந்து காப்பாற்றி வழிநடத்த வலுவான தலைமை தேவைப்படுகிறது. அந்தத் தலைமை சிவசேனா மற்றும் என்.சி.பி ஆகிய இரண்டு கட்சிகளிடமும் இல்லை. ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்கத் துடிக்கிறது சிவசேனா. ஆனால், அது ஒருபோதும் சாத்தியமில்லை' என்கிறார்கள் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில்.

உத்தவ் தாக்கரே - ஆதித்ய தாக்கரே
உத்தவ் தாக்கரே - ஆதித்ய தாக்கரே
Twitter/ @AUThackeray

``அரசியலைப் பொறுத்தவரை பா.ஜ.க மற்றும் சிவசேனாவின் நிலைப்பாடு ஒன்றாகவே உள்ளது. தவிர, பா.ஜ.க இல்லாமல் மற்ற கட்சிகளுடன் இணைந்தால் நிலையான ஆட்சியமைக்கமுடியாது என சிவசேனாவுக்குத் தெரியும். அதையும் மீறிப் பிற கட்சிகளுடன் இணைந்தால் கர்நாடகாவில் ஏற்பட்ட நிலைதான் மகாராஷ்டிராவிலும் ஏற்படும்” என்று கூறியுள்ளார் அரசியல் ஆய்வாளர் அபேய் டேஷ்பாண்டே.

News Credits : Hindustan times