Published:Updated:

`இருந்த பதவியும் பறிபோனது’ - மகாராஷ்டிர மன்னர் வம்சாவளிக்கு நேர்ந்த சோகம்

தன் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்து மீண்டும் தேர்தலை சந்தித்த மன்னர் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தோல்வியடைந்துள்ளார். 

மன்னர் வம்சாவளி உதயன்ராஜே
மன்னர் வம்சாவளி உதயன்ராஜே ( Twitter/@Chh_Udayanraje )

மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்களுடன் நாட்டில் உள்ள 18 மாநிலங்களில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நேற்று ஒரே கட்டமாக எண்ணப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்ற பிறகு, வரும் முதல் மாநிலத் தேர்தல் என்பதால் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தன.

உதயன்ராஜே
உதயன்ராஜே
Twitter/@Chh_Udayanraje

இந்நிலையில் மகாராஷ்டிராவில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல் போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள சதாரா நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி-யாக இருந்த உதயன்ராஜே போஸலேதான் சத்ரபதி சிவாஜியின் வம்சாவளி. முன்னதாக உதயன்ராஜே, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து, சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற பொதுதேர்தலில் சதாரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மகாராஷ்டிரா, ஹரியானாவில் முந்தும் பா.ஜ.க? - கருத்துக் கணிப்பால் பரபரக்கும் தேர்தல் களம்

ஆனால், தான் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களிலேயே தன் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தார். இப்போது நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சதாரா தொகுதியில் போட்டியிட உதயன்ராஜேவுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது பா.ஜ.க. அந்தத் தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயன்ராஜே. ஆனால், அவர் அந்த இரண்டு முறையும் தேசியவாத காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டே வெற்றிபெற்றார்.

உதயன்ராஜே
உதயன்ராஜே
Twitter/@Chh_Udayanraje

சதாரா தொகுதியில் உதயன்ராஜேவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது, அதனால் இந்த முறையும் அவர்தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் பாட்டீல் வெற்றி பெற்றுள்ளார். தன் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வுக்குச் சென்ற உதயன்ராஜேவுக்கு, தற்போது இருந்த பதவியும் பறிபோய்விட்டது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.