முதல் நபராக அபராதத் தொகையைச் செலுத்திய சசிகலாவே கடைசியாகச் சிறையிலிருந்து வெளியே வரப்போகிறார். அவருக்கு முன்பாகவே சுதாகரன், இளவரசி ஆகிய இருவரும் வெளியே வந்துவிடுவார்கள். கர்நாடக அரசும், சிறைத்துறையும் சசிகலா விஷயத்தில் குறைந்தபட்ச சிறைத் தளர்வுகளைக்கூட இதுவரை அனுமதிக்கவில்லை என்கிற கோபமும் சசிகலா தரப்பிடம் இப்போது உள்ளது.

2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது தண்டனைக் காலம் வரும் ஜனவரி 27-ம் தேதியோடு முடிவடையவிருப்பதாக, கர்நாடக சிறைத்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளித்திருக்கிறது. இந்தநிலையில், சசிகலா உள்ளிட்ட மூவரின் விடுதலைக்கான பூர்வாங்க வேலைகளை ஏற்கெனவே சிறைத்துறை தொடங்கிவிட்டது. குறிப்பாக, ஒரு தண்டனைக் கைதியை விடுதலை செய்யும் முன்பு மாநில உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறுவது அவசியம். அந்த அடிப்படையில் கர்நாடக மாநில சிறைத்துறை, அந்த மாநில உள்துறைக்குக் கடிதமும் எழுதியிருக்கிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தநிலையில், சசிகலாவின் விடுதலைக்கு முன்பாக அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான பத்து கோடி ரூபாயைக் கட்ட வேண்டும் என்கிற நிபந்தனையும் இருக்கிறது. எனவே, கடந்த மாதமே அந்தத் தொகையை நீதிமன்றத்தில் கட்டிவிட்டனர் சசிகலா தரப்பினர். அதேபோல் இளவரசிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையும் கட்டப்பட்டுவிட்டது. ஆனால், சுதாகரனின் அபராதத் தொகையை இதுவரை செலுத்தவில்லை. குறிப்பாக, சுதாகரன் உறவினர்கள் அவருக்கான தொகையைக் கட்டுவதில் ஆர்வம்காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது விடுதலையிலும் சிக்கல் இருக்கிறது. அதேநேரம், சிறைத்துறையின் கணக்குப்படி சுதாகரன் முதலிலும், அடுத்து இளவரசியும் விடுதலையாகவே வாய்ப்பிருக்கிறது. இருவருமே ஏற்கெனவே சசிகலாவைவிட அதிக நாள்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மற்றொருபுறம், கடந்த மாதம் இறுதி வரை, சசிகலா டிசம்பர் மாதம் இறுதிக்குள் வெளியே வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு கர்நாடக அரசுத் தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. குறிப்பாக, சசிகலா சிறையில் கன்னட மொழி பயின்று அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். அதோடு சிறைக் கைதிகளுக்கு வழங்கும் பணிகளையும் தினமும் செய்துவந்திருக்கிறார். அந்த அடிப்படையில் அவருக்குக் குறைந்தபட்ச சலுகையைச் சிறை நிர்வாகம் காட்டினால்கூட இந்த மாதமே அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பார். ஆனால், சசிகலா விவகாரத்தில் எந்த சலுகையும் காட்டக் கூடாது என்று கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கிறது. இது, சசிகலா தரப்பை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்றொருபுறம், விடுதலைக்கான காலம் வந்த பிறகும் பணம் செலுத்தாமல் இருப்பதால், சுதாகரன் விடுதலையும் சிக்கலாகியிருக்கிறது. இதனால் சுதாகரன் மனைவி வழி உறவுகளான சிவாஜி குடும்பத்தினர் அவருக்குப் பணம் செலுத்தலாமா... என்று ஆலோசனை செய்திருக்கிறார்கள். விரைவில் அவர்கள் தரப்பிலிருந்து சுதாகரனுக்கான பணம் செலுத்தப்படும் என்று தெரிகிறது. பணம் செலுத்திய பிறகு இந்த மாத இறுதியில் சுதாகரன் விடுதலை உறுதியாகிவிடும். அதேநேரம், சசிகலா சிறைத்துறையின் மீது ஏக கடுப்பில் இருக்கிறார். தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமை மறுக்கப்பட்டதற்காக நீதிமன்றத்தை நாடும் மனநிலையிலும் இருக்கிறார்.

``சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டாம் என்று சிலரது தரப்பிலிருந்து வந்த அழுத்தமே அவருக்குச் சலுகைகள் காட்டாமல் கர்நாடக அரசு இழுத்தடிக்கக் காரணம். சிறையிலிருந்த வெளியே வந்த பிறகு அவர்களுக்கு எதிராக சட்டரீதியாகவே நடவடிக்கைகளை சசிகலா எடுப்பார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.