Published:Updated:

மத்தியப்பிரதேசத்தை தவறவிட்ட காங்கிரஸ்; 4-வது முறையாக முதல்வரான சிவராஜ் சிங்!- ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்

சிந்தியா - சிவராஜ் சிங்
சிந்தியா - சிவராஜ் சிங்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்தியப்பிரதேச அரசியலில் வீசி வந்த புயல் தேசிய அரசியலில் கவனம் பெறாமல் போனது. அதனால் மத்தியப்பிரதேச அரசியலில் நடந்த சில விஷயங்கள் ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்காக இங்கே.....!

மத்தியப்பிரதேச அரசியலில் கடந்த சில வாரங்களாக நீடித்துவந்த அரசியல் குழப்பங்கள், நேற்று பா.ஜ.க வின் சிவராஜ் சிங் செளகான் 4 -வது முறையாக முதல்வராகப் பதவியேற்றதும் முடிவுக்கு வந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த காங்கிரஸ் கட்சியால் அதைத் தக்க வைக்க முடியாமல், மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் திருப்தியடைகிறது.

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்
மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்

ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்தியப்பிரதேச அரசியலில் வீசி வந்த புயல் தேசிய அரசியலில் கவனம் பெறாமல் போனது. அதனால் மத்தியப்பிரதேச அரசியலில் நடந்த சில விஷயங்கள் ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்காக இங்கே.....!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியில் நிலவி வந்த கோஷ்டி மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. 2018 -ம் ஆண்டில் மத்தியப்பிரதேசத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் முதல்வர் ரேஸில் கமல்நாத் மற்றும் ஜோதிர்ஆதித்யா சிந்தியா ஆகியோர் இருந்தனர். இந்த ரேஸில் முந்தி கமல்நாத் முதல்வரானார்.

`17 ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மாயம்.. `ஸ்விட்ச்-ஆஃப்' சிந்தியா!'- சிக்கலில் கமல்நாத் அரசு

அப்போது முதலே மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் மாநில முதல்வராகவும் கமல்நாத் இருந்து வருகிறார். இதுதான் கோஷ்டி பூசலுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பலமுறை மாநிலத் தலைமை மாற்றம் குறித்து ஜோதிர்ஆதித்யா சிந்தியா வலியுறுத்தியும் அவரது கோரிக்கைக்கு கமல்நாத் செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாநிலங்களவை தேர்தலைப் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டார் சிந்தியா...

சிந்தியா - கமல்நாத்
சிந்தியா - கமல்நாத்

கடந்த 9 -ம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் 17 எம்.எல்.ஏ க்கள் திடீரென காணாமல் போனார்கள். அவர்கள் கர்நாடகாவில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அப்போது டெல்லியில் முகாமிட்டிருந்த ஜோதிர்ஆதித்யா சிந்தியா சோனியா காந்தியைச் சந்திப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக அவர், பிரதமர் இல்லத்தில் மோடியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அமித் ஷாவும் கலந்துகொண்டார். மத்தியப் பிரதேசத்தில் சிஏஏ உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடிவந்த ஜோதிர்ஆதித்யா சிந்தியா அடுத்த இரு நாள்களில் பா.ஜ.க வில் சேர்ந்தார். பா.ஜ.க வின் மாநிலங்களவை உறுப்பினரும் ஆகிறார். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். அவையின் பலம் குறைய, ஆட்சி கவிழும் சூழல் உருவாக்கப்பட்டது.

மத்தியப்பிரதேசம்: கவிழ்ந்த காங்கிரஸ் கப்பல்; ராஜினாமா செய்த கமல்நாத்... அடுத்து என்ன?

இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தனக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்து பதவியிலிருந்து விலகிவிட்டார் கமல்நாத். 15 மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு கிட்டியது `மாமாஜி’ சிவராஜ் சிங் செளகானுக்கு. தன் ஆதரவாளர்களால் மாமாஜி எனச் செல்லமாக அழைக்கப்படுவர் சிவராஜ். மத்தியப்பிரதேச மாநில பா.ஜ.க உறுப்பினர்கள் ஒன்றுகூடி சிவராஜ் சிங் செளகானை முதல்வராகத் தேர்ந்தெடுக்க, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் லால்ஜி.

ராகுல், கமல்நாத் , ஜோதிராதித்யா
ராகுல், கமல்நாத் , ஜோதிராதித்யா

இரவு 9 மணிக்கு 4 -வது முறையாக மத்தியப்பிரதேச முதல்வராக, ராஜ் பவனில் பதவியேற்றுக்கொண்டார் சிவராஜ் சிங். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விழா மிக எளிமையாக நடத்தப்பட்டது. டெல்லியிலிருந்து யாரும் கலந்து கொள்லவில்லை. மத்தியப்பிரதேச பாஜ.க வின் டெல்லி கண்காணிப்பாளர்களான அருண் சிங் மற்றும் வினய் ஆகியோர் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

மீண்டும் ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்...

2003 -ம் ஆண்டு... மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி பொறுப்புக்கு வருகிறது. மாநிலத்தில் பா.ஜ.க வுக்கு பெரும் வெற்றியைச் சாத்தியமாக்கிய உமா பாரதிக்கு முதல்வர் பொறுப்பு வருகிறது. எனினும் 1994 -ம் ஆண்டு ஹூப்ளி கலவர வழக்கில் உமா பாரதிக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட, 2004 -ம் ஆண்டு முதல்வர் பதவி பாபுலால் கவுருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 2005 -ம் ஆண்டில் மீண்டும் முதல்வர் பொறுப்பில் மாற்றம் கொண்டு வந்தது பா.ஜ.க. மத்திய பா.ஜ.க வின் அங்கமாக இருந்து வந்த சிவராஜ் மத்தியப்பிரதேச முதல்வரானார். அதன் பின்னர் நடைபெற்ற 2008 மற்றும் 2013 ஆகிய தேர்தல்களில் பா.ஜ,க வெற்றிபெற தொடர்ச்சியாக முதல்வர் நாற்காலியைத் தக்க வைத்துக்கொண்டார். 2018 -ம் ஆண்டு சிறிய வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க அதுவும் 15 மாதங்களில் சிவராஜ் சிங் செளகான் வசம்...

சிவராஜ் சிங் செளகான்!
சிவராஜ் சிங் செளகான்!

முதல்வரான சிவராஜ் சிங், எம்.எல்.ஏ க்களுக்கு நன்றி தெரிவித்தார். ஜோதிர்ஆதித்யா சிந்தியாவுக்கு வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்தார். கொரோனாதான் தற்போது முக்கியம் என்ற அவர், அந்த வைரஸை வீழ்த்துவோம் என்றார். தொடர்ந்து, ``ஆட்சியில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும்.. குறைகள் களையப்படும்’’ என்றார். கர்நாடகா பாணியில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ஜனநாயக உரிமை மூலம் மக்கள் அளித்த வாய்ப்பை காங்கிரஸ் நழுவ விட்டது என்பதும் தவிர்க்க முடியாத உண்மையே...

அடுத்த கட்டுரைக்கு