Published:Updated:

உத்தவ் அரசில் உரக்கப் பேசிய சஞ்சய் ராவத் நில மோசடி வழக்கில் கைது... பின்னணி என்ன?!

சஞ்சய் ராவத்

சிவசேனாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவரும், சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத் எம்.பி குடிசை மாற்று திட்டத்தில், ரூ.1,034 கோடி நில மோசடி தொடர்பான வழக்கில் கைதாகியிருக்கிறார்.

உத்தவ் அரசில் உரக்கப் பேசிய சஞ்சய் ராவத் நில மோசடி வழக்கில் கைது... பின்னணி என்ன?!

சிவசேனாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவரும், சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத் எம்.பி குடிசை மாற்று திட்டத்தில், ரூ.1,034 கோடி நில மோசடி தொடர்பான வழக்கில் கைதாகியிருக்கிறார்.

Published:Updated:
சஞ்சய் ராவத்

2019 மகராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, முதல்வர் பதவியைச் சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் கொடுக்காததால் சிவசேனா, ‘மகாவிகாஸ்’ என்ற கூட்டணியை அமைத்ததோடு ஆட்சிக்கட்டிலிலும் அமர்ந்தது. மராட்டிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். இந்த நிலையில் சிவசேனா கட்சியில் முக்கியத் தலைவரான ஏக்னாத் ஷிண்டே திடீரென சிவசேனா அதிருப்தி அணியை உருவாக்கி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். நாங்கள்தான் உண்மையான சிவசேனா அணியினர் என்று கூறி பாஜக-வுடன் கூட்டணிவைத்து நெருக்கடி கொடுத்ததால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இந்தப் பரபரப்பு கொஞ்சம் அடங்கிய நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், உத்தவ் தாக்கரேவின் தீவிர ஆதரவாளராகவும் உள்ள எம்.பி சஞ்சய் ராவத் குடிசை சீரமைப்புத் திட்டத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இப்போது கைதாகியிருப்பது மீண்டும் மகாராஷ்டிர அரசியலைச் சூடுபிடிக்க வைத்திருக்கிறது.

உத்தவ் தாக்கரேயுடன் ஷிண்டே
உத்தவ் தாக்கரேயுடன் ஷிண்டே

மும்பையிலுள்ள அரசுக் குடியிருப்புகளைப் புனரமைப்பு செய்வதில் 2008-ம் ஆண்டு, Guru Ashish Construction Pvt. Ltd என்கிற நிறுவனம் ஒப்பந்தமாகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் ஏற்கெனவே மோசடிப் புகாருக்கு ஆளாகியிருக்கிறார். இதிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பண மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தனது விசாரணையில் கண்டறிந்து வழக்கு பதிவுசெய்துள்ளது. இந்த ஊழல் புகாரில் சஞ்சய் ராவத்துக்கு முக்கியப் பங்கு உண்டு என அமலாக்கத்துறை தரப்பு கூறிவருகிறது. தங்கள் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை கடந்த 1-ம் தேதி சம்மன் அனுப்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் விசாரணைக்கு அவர் ஆஜரான நிலையில், அடுத்த விசாரணை ஜூலை 20-ம் தேதி நடைபெறும் என சம்மன் வந்தது. இதற்கு சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. தொடர்ந்து ஜூலை 27-ம் தேதி அடுத்த சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு, `நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருவதால் அடுத்த மாதம் 7-ம் தேதிக்குப் பிறகு ஆஜராவதாக’ சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையிடம் தெரிவித்தார்.

 சஞ்சய் - வர்ஷா ராவத்
சஞ்சய் - வர்ஷா ராவத்

இந்த நிலையில்தான் நேற்று (ஜூலை 31) அவரின் வீடு மற்றும் மும்பையில் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர், மத்திய ரிசர்வ் போலீஸாருடன் இணைந்து சோதனை நடத்தினர். சுமார் 10 மணி நேர சோதனைக்கு பிறகு மாலை 5 மணியளவில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்காக சஞ்சய் ராவத்தை வீட்டிலிருந்து மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியிலுள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நள்ளிரவில் ராவத் கைதுசெய்யப்பட்டார். இந்தச் சோதனையில் அவரின் வீட்டில் ரூ.11½ லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த அதிரடி வருகை குறித்துக் கூறிய சஞ்சய் ராவத், “இவர்கள் கூறும் மோசடிப் புகாருக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் பாபாசாஹேப் தாக்கரே மீது உறுதியிட்டு இதைச் சொல்கிறேன். நான் சிவசேனாவுக்காக இறுதிவரை போராடுவேன். எந்தச் சூழலிலும் நான் கட்சியைவிட்டு விலக மாட்டேன். எனது தலை கொய்யப்பட்டு இறந்தாலும் சரி, பாஜக-விடம் சரணடைய மாட்டேன்” என காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இந்த விகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே, ``அமலாக்கத்துறை விருந்தினர்கள் தற்போது சஞ்சய் ராவத்தின் வீட்டில் உள்ளனர். அவர் கைதுசெய்யப்படலாம். இது என்ன வகையான சதி... சிவசேனா, இந்துக்கள் மற்றும் மராத்தி மக்களுக்கு பலமளித்துவருகிறது. எனவே, சிவசேனாவை அழிக்க சதி நடக்கிறது. இந்த நடவடிக்கை அதில் ஒரு அங்கம்.

சிவசேனாவால் அரசியல்ரீதியாக வளர்ந்தவர்கள் தற்போது தங்களின் விசுவாசத்தை மாற்றிக்கொண்டிருக்கின்றனர். முன்னாள் மந்திரி அர்ஜுன் கோட்கர் குறைந்தபட்ச அழுத்தத்தின் கீழ்தான் அதிருப்தி அணிக்குச் செல்வதாக ஒப்புக்கொண்டார். ஆனந்த் திகே இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தபோது சிவசேனா தொண்டர்களுக்கு விசுவாசம் என்றால் என்ன என்பதைக் காட்டினார். கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் மும்பை குறித்த கருத்தால் மராத்தியர்கள் மற்றும் மராட்டியத்தை அவமதித்திருக்கிறார். இந்த விஷயத்தில் அடிமைகளாக மாறியவர்களின் எதிர்வினை என்னவாக இருந்தது... `இது மிகவும் லேசானது. எங்களுக்கு அவரின் பேச்சில் உடன்பாடில்லை’ என்று கூறி கடந்துவிட்டனர்.

எதிர்க்கட்சிகளை எதிரிகளாகக் கருதக்‌ கூடாது என்று இந்திய தலைமை நீதிபதிகூட கூறியிருக்கிறார். ஆனால் நாங்கள் கூட்டணிக் கட்சிகளாக இருந்தபோதும் எதிரிகளாகக் கருதப்பட்டோம். அஞ்சாத, அநீதிக்கு எதிராகப் போராடும் அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் கட்சிக்குத் தேவைப்படுகிறார்கள்” என்று தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

ஏற்கெனவே மத்தியில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளை தனது விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்திவருவதாகவும், விசாரணை அமைப்புகள் ஆளும் பாஜக-வின் கைப்பாவைபோலச் செயல்படுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே அணியுடன் கூட்டணி வைத்திருக்கும் பாஜக, உத்தவ் தலைமையிலான சிவசேனாவை பலவீனப்படுத்த இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசியல் வட்டாரத்தில் விவாதமாகியிருக்கிறது. சமீபத்தில் மம்தா ஆளும் மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸின் முக்கியத் தலைவர்மீது ரெய்டு நடந்தது நினைவுகூரத்தக்கது.