Published:Updated:

`உங்களை விசாரிக்கணும்’... கடத்தப்பட்ட பாத்திர வியாபாரி; 230 கி.மீ தூரம் விரட்டிப் பிடித்த போலீஸ்!

கிழக்கு காவல் நிலையம்

தூத்துக்குடியில் போலீஸ் எனச் சொல்லி பாத்திர வியாபாரியைக் கடத்தி ரூ.5 லட்சம் பணம் பறித்த 5 பேர்கொண்ட கர்நாடகக் கும்பலை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

`உங்களை விசாரிக்கணும்’... கடத்தப்பட்ட பாத்திர வியாபாரி; 230 கி.மீ தூரம் விரட்டிப் பிடித்த போலீஸ்!

தூத்துக்குடியில் போலீஸ் எனச் சொல்லி பாத்திர வியாபாரியைக் கடத்தி ரூ.5 லட்சம் பணம் பறித்த 5 பேர்கொண்ட கர்நாடகக் கும்பலை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
கிழக்கு காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் தங்கம். இவர், இளையரசனேந்தல் சாலையில் பாத்திரக்கடை மற்றும் பழைய இரும்பு வியாபாரம் செய்துவருகிறார். நேற்று மதியம் 1:30 மணிக்கு வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது இன்னோவா கார் ஒன்று கடையின் முன்பு வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இரண்டு பேர், ``உங்களை சார் வரச் சொல்கிறார்” என தங்கத்திடம் கூறியுள்ளனர். அவர் கடையிலிருந்து இறங்கி கார் அருகில் சென்றார். காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் ஐந்து பேர் இருந்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

அதில் ஒருவரான மீசைக்காரர், அவரிடம், “நாங்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த தனிப்பிரிவு போலீஸார். சமீபத்துல நீங்க வாங்கிய செம்புக்கம்பிகள் திருடப்பட்டவை. திருடப்பட்ட செம்புக்கம்பிகளை வாங்கினது தவறு. இது சம்பந்தமா எங்களுக்குப் புகார் வந்திருக்கு. உங்களை விசாரணை செய்யணும்” எனக் கூறியுள்ளனர். ”நான் எந்தத் திருட்டுப் பொருளையும் வாங்கலை. உங்களுக்கு யாரோ என்மேல தவறா புகார் சொல்லியிருக்காங்க” எனச் சொல்லியிருக்கிறார் தங்கம். “விசாரணையில தெரிஞ்சுடும். இப்போ எங்ககூட கிளம்புங்க” எனச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

``கடையில ஆள் இல்லை. என் மகன் வரட்டும். அவனிடம் விஷயத்தைச் சொல்றேன். பிறகு போகலாம்” எனச் சொல்ல, ``நீங்கதான் விசாரணைக்கு வரணும்” எனச் சொல்லி காருக்குள் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் தங்கத்தின் போனை வாங்கி சுவிட்ச் ஆஃப் செய்துள்ளனர். அதன் பிறகு கார் மதுரை நோக்கிச் சென்றது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தங்கம் வராததாலும், அவரது போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாலும் சந்தேகம் அடைந்த கடையின் ஊழியர்கள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

கடத்தப்பட்ட பாத்திர வியாபாரி தங்கம்
கடத்தப்பட்ட பாத்திர வியாபாரி தங்கம்

கடையிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளில் அந்தக் கும்பல் வந்த காரின் எண், அவர்களின் தோற்றத்தைப் பார்வையிட்டனர். பின்னர், தனிப்படை அமைக்கப்பட்டு தங்கத்தை அழைத்துச் சென்ற காரைத் தேடிச் சென்றனர். தங்கத்தை அழைத்துச் சென்ற அந்தக் கும்பல், ”உன்னை விடுவிக்கணும்னா, எங்களுக்கு 20 லட்சம் பணம் வேணும்” எனச் சொல்ல, “எங்கிட்ட அவ்ளோ பணம் இல்லை” என அவர் சொல்ல, கடைசியாக 5 லட்ச ரூபாய் பணம் பேரம் பேசப்பட்டது.

``உன் மகனுக்கு போன் செஞ்சு பணத்தைக் கொண்டு வரச் சொல்லு” என அந்தக் கும்பல் சொல்ல, தங்கமும் மகன் செந்திலுக்கு போன் செஞ்சு பணத்தைக் கொண்டு வரச் சொன்னார். விருதுநகர் மாவட்டம், கப்பலூர் அருகே ஒரு காட்டுப்பகுதியில் நின்றுகொண்டு செந்திலிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கத்தை விடுவித்துவிட்டுச் சென்றனர். உடனடியாகத் தன் தந்தை தங்கத்தைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு சாத்தூர் சுங்கச்சாவடிக்கு வந்தார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைச் சோதனையிட்டபோது, தான் சென்ற காரை தங்கம் அடையாளம் காட்டினார்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

அந்த காரின் ஃபாஸ்டேக் பார்கோடைக்கொண்டு போலீஸார் பின்தொடர்ந்து சென்றனர். கரூர் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது அந்த காரின் எண் கர்நாடக மாநிலப் பதிவு எண்ணாக மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், அரவக்குறிச்சியை அடுத்த வேளஞ்செட்டியூரில் உள்ள சுங்கச்சாவடியை அந்த கார் கடப்பதை அறிந்த போலீஸார், அதைத் தடுக்க முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்றுவிட்டது. இதையடுத்து கரூர் மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே ஆட்டையாம்பரப்பு பகுதியில் சென்றபோது அங்கிருந்த போலீஸார் லாரிகளை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தச் சொல்லி, செயற்கையாக சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி அந்த காரை மடக்கிப்பிடித்தனர். பிடிபட்ட கார் மற்றும் அதிலிருந்து ஐந்து பேரும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, பெங்களூரு ஐடிஐ காலனியைச் சேர்ந்த டேனியல் எசெக்ஸ், ஏசுதாஸ், பவுல்ராஜ், பெரோஸ்கான், பாரூன் என்பது தெரியவந்தது.

போலி நம்பர் பிளேட்கள்
போலி நம்பர் பிளேட்கள்

அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், நம்பர் பிளேட்கள், ஆறு செல்போன்கள், போலி வாக்கி டாக்கி, போலீஸ் சீருடைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்தக் கும்பல் தமிழ்நாடு முழுவதும் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. பாத்திர வியாபாரி கடத்தப்பட்ட 10 மணி நேரத்துக்குள் கும்பலை மடக்கிப் பிடித்த தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டியிருக்கிறார். சினிமாவைப்போல 230 கி.மீ தூரம் போலீஸார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.