Election bannerElection banner
Published:Updated:

சுப்பராயுலு முதல் பழனிசாமி வரை..! - தமிழக முதல்வர்கள் வரலாறு #MyVikatan

தேர்தல்
தேர்தல்

1937-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 156 இடங்களில் வெற்றிபெற்றது. பலரும் எதிர்பார்த்ததுபோல் சத்தியமூர்த்தி முதல்வராகாமல் மேலிட முடிவின்படி ராஜாஜி முதல்வரானார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சென்னை சட்டமன்றம், 1861 பிரிட்டிஷ் கவுன்சில் சட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டது. அப்போது அம்மன்றம் ஆலோசனை அவையாக மட்டுமே இருந்தது. இந்திய கவுன்சில் சட்டம் 1892-ன் படி சென்னை மாகாண சட்டமன்றத்தின் அதிகார எல்லையை விரிவுபடுத்தியது. 1909-ல் மிண்டோ மார்லி சீர்திருத்தங்களின் விளைவாக மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இம்மன்றத்தில் இடம்பெற்றனர். பின்னர் 1919-ல் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின்படி அமைக்கப்பட்ட இரட்டை ஆட்சியின் கீழ் நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாகத் தேர்ந்தெடுத்தனர். இந்த உறுப்பினர்களைக்கொண்ட சட்டமன்றம் ஓரவை (Unicameral) அமைப்பாக 1920-லிருந்து 1937 வரை செயல்பட்டது.

ஆளுநர் நியமன உறுப்பினர்கள் தவிர 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவை வகுப்புவாரியாக, சிறப்புத் தொகுதிவாரியாக, ஒதுக்கப்பட்ட தொகுதிவாரியாக இருந்தன.

சட்டமன்றம்
சட்டமன்றம்

#முதல் தேர்தல்

சென்னை சட்டமன்றத்துக்கான முதல் பொதுத்தேர்தல் 1920-ம் ஆண்டு, நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில் சொத்து தகுதி உடையோர் மட்டுமே வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். முதல் தேர்தலில் 24.9 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி மைலாப்பூரில் அதிகபட்சமாக 52 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்தது. நீதிக்கட்சியின் தீவிர பிரசாரமும், பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்ததும் நீதிக் கட்சியை வெற்றி பெறவைத்தன.

சென்னை ராஜதானி ஆளுநர் வில்லிங்டன் தேர்தலில் வெற்றிபெற்ற நீதிக்கட்சித் தலைவர் தியாகராய செட்டியாரை ஆட்சி அமைக்குமாறு அழைத்தார். ஆனால், அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக சுப்பராயலு நாயுடு முதலமைச்சரானார். நீதிக்கட்சியின முதல் அமைச்சரவை 1923 செப்டம்பர் 11 வரை பதவியில் இருந்தது.

இரண்டாவது தேர்தலில் காங்கிரஸுக்குள் `சுயராஜ்ய கட்சி’ என்ற தனி அமைப்பை உருவாக்கி தேர்தலில் நின்றனர். 1923-ம் ஆண்டு, அக்டோபர் 31-ம் நாள் தேர்தல் நடத்தப்பட்டது. மழை வெள்ளம் காரணமாக தேர்தல் உரிய நாளில் முடியாமல் நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெற்றது. 17 தொகுதிகளில் 20 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 44 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இதில் சுயராஜ்ய கட்சி போட்டியிட்ட 14 இடங்களிலும் வெற்றிபெற்றது. நீதிக்கட்சி தனிப் பெரும் கட்சியாக வெற்றிபெற்றாலும் அரசாங்கத்தை அமைக்கக்கூடிய பெரும்பான்மை இல்லாததால் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பனகல் அரசர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இரண்டாம் அமைச்சரவை பதவி ஏற்றது.

தேர்தல்
தேர்தல்

1926-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சுயராஜ்ய கட்சி சத்தியமூர்த்தி தலைமையில் களமிறங்கி 47 இடங்களைக் கைப்பற்றியது. நீதிக்கட்சி 21 இடங்களில் மட்டுமே வென்றது. இம்முறை தனிப்பெரும்பான்மை பெற்ற சுயராஜ்ஜியக் கட்சி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டதால், ஆளுநர் சுயேச்சைகளில் ஒருவரான டாக்டர் பி. சுப்பராயன் (மோகன் குமாரமங்கலத்தின் தந்தை) முதலமைச்சராக சுயராஜ்ய கட்சி மற்றும் நீதிக்கட்சி ஆகிவற்றின் ஆதரவோடு ஆட்சி நடத்தினார்.

அடுத்து 1930 தேர்தலில்.. லாகூர் காங்கிரஸ் மாநாட்டுத் தீர்மானத்தின்படி காங்கிரஸ் போட்டியிடாததால், நீதிக்கட்சி சார்பில் முனுசாமி நாயுடு ஆட்சியமைத்தார். 1932-ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதால் பொப்பிலி அரசர் முதல்வரானார்.

1937-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 156 இடங்களில் வெற்றிபெற்றது. பலரும் எதிர்பார்த்ததுபோல் சத்தியமூர்த்தி முதல்வராகாமல், மேலிட முடிவின்படி ராஜாஜி முதல்வரானார்.1939-ல் பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பதில்லை எனும் காங்கிரஸின் முடிவின்படி ராஜாஜி பதவி விலகிய பின் ஆளுநர் ஆட்சி 1939 முதல் 1946 வரை நடந்தது. மீண்டும் 1946 தேர்தலில் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டிய உடன்பாட்டின் காரணமாக டி.பிரகாசம் முதல்வரானார். 1947 நம்பிக்கை இல்லா தீர்மானத்தினால் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார்.

இந்திய சுதந்திரத்தின்போது ஓமந்தூரார்தான் தமிழகத்தின் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பின் 1949-ல் பூசப்பாடி சஞ்சீவி குமாரராஜா முதல்வரானார். காங்கிரஸின் கோஷ்டிப் பூசல் அதிகமாக இருந்தது இக்கால கட்டத்தில்தான்.

ஓமந்தூரார்
ஓமந்தூரார்

#சுதந்திரத்துக்குப் பின்...

தேசிய, மாநிலக் கட்சிகளைத் தவிர சுயேச்சைகளும் பெருமளவில் சுதந்திரத்துக்குப் பின் போட்டியிட்டனர். தேர்தலில் சின்னங்களை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் அப்போது ஆணையத்தில் பணியாற்றிய எம்.எஸ்.சேத்தி ( M.S.Sethi) என்கிற ஓவியர் நாம் அழுத்தும் ஒவ்வொரு சின்னத்தையும் உருவாக்கினார். அவரது பாணி சின்னங்களையே இப்போதும் உருவாக்கிவருகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.

1952-ல் நேருவுக்கும் ராஜாஜிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ராஜாஜி மாநில அரசியலில் நுழைந்து இரண்டு ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாகப் போட்டியிடாமல் எம்.எல்.சி-யாகப் பதவிபெற்று மாநில முதல்வரானார். குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு காரணமாக 24-3-1954-ல் ராஜினாமா செய்தார்.

1954 முதல் 1963 வரை காமராஜர் முதல்வராக இருந்து சாதனைகள் செய்தார். அடுத்து `கே பிளான்’ திட்டப்படி காமராஜர் 1963-ல் பதவி விலகியதை அடுத்து மீஞ்சூர் பக்தவச்சலம் முதல்வரானார். விலைவாசி உயர்வு, உணவுப் பஞ்சம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக 1967 தேர்தலில் 138 இடங்களில் வென்று திமுக சார்பில் அண்ணா 1967 மார்ச் 6-ம் தேதி முதல்வரானார்.

அண்ணாவின் மறைவுக்குப் பின் 1969-ல் மு.கருணாநிதி முதல்வரானார்.1972-ம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை முன்கூட்டியே 1971-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று, திமுக வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி முதல்வரானார். அதற்கு அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக-வைவிட்டுப் பிரிந்த எம்.ஜி.ஆர் 1977 தேர்தலில் அதிமுக ஆட்சியமைத்து முதல்வரானார். 1987 வரை முதல்வராக இருந்து எம்.ஜி.ஆர் இயற்கை எய்திய பின், வி.என்.ஜானகி 1988-ல் முதல்வரானார். 24 நாள்களுக்குப் பிறகு அமைச்சரவை கலைக்கப்பட்டு 1989-ல் நான்கு முனைப்போட்டி நிலவியபோது கருணாநிதி முதல்வரானார். ஆனால், தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஒடுக்கத் தவறிவிட்டார் எனக் கூறி ஆட்சியை 1991, ஜனவரி 30-ம் தேதி கலைத்தனர்.

கருணாநிதி
கருணாநிதி

1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையின் காரணமாக எழுந்த அனுதாப அலையால் அதிமுக வென்று, ஜெ.ஜெயலலிதா முதல்வரானார்.1996-ல் மீண்டும் நான்காம் முறையாக கருணாநிதி முதல்வரானார். 2001-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெ.ஜெயலலிதா முதல்வரானார். அப்போது டான்சி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் பெரியகுளம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் சிறிது காலம் முதல்வரானார். அதன் பின் வழக்கில் வென்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். 2006 தேர்தலில் திமுக 96 இடங்களைப் பெற்று காங்கிரஸ் உதவியுடன் கருணாநிதி ஐந்தாம் முறையாக முதல்வரானார்.

2011-ம் ஆண்டு தேர்தலில் 146 இடங்கள் வென்று மூன்றாம் முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 2016-ம் ஆண்டு, 134 இடங்களில் வென்று மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். அதே ஆண்டு ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அதன் பின் கட்சியில் எடுத்த முடிவின் காரணமாக 16-2-2017-ல் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

இந்தியா விடுதலைபெற்ற பின்னர் 16-வது சட்டசபைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. மே 2-ம் தேதி வெற்றி பெறுபவர் தமிழகத்தின் அடுத்த முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். வரலாறு யார் பெயரை முன்மொழியக் காத்திருக்கிறது என்பதை அறிய காத்திருப்போமாக!

- மணிகண்டபிரபு

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

 சுப்பராயுலு முதல் பழனிசாமி வரை..! - தமிழக முதல்வர்கள் வரலாறு #MyVikatan

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு