சேலம் மாவட்டத்துக்கு வருகைபுரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``சேலம் மாவட்டத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த மாவட்டச் செயலாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி. இங்கு வந்திருக்கும் அமைச்சர் நேரு பற்றி உங்களுக்குத் தெரியும்.
அவர் கலைஞருடன் பயணித்தவர். சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே ஜெயித்தோம். உடனே பொறுப்பு அமைச்சராக சேலத்துக்கு அவரை நியமித்தார் தலைவர். வரப்போகும் ஈரோடு கிழக்குத் தேர்தலிலும் பொறுப்பாளராக அவரே இருக்கிறார். எனவே, ஈரோடு தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றுத் தருவார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் சேலத்தில் கோட்டைவிட்டுவிட்டோம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை நீங்களெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த மணமக்களை வாழ்த்துகிறேன்.
மணமக்கள் இருவரும் மருத்துவர்கள், படித்தவர்கள். அவர்களுக்கு நான் பெரிய ஆலோசனை சொல்லத் தேவையில்லை. நீங்கள் ஓபிஎஸ் - இபிஎஸ்போல் இருந்துவிடாதீர்கள். சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருப்பார்கள். ஆனால், ஒருவரை ஒருவர் பார்க்கவும் மாட்டார்கள், பேசவும் மாட்டார்கள். ஆனால், மோடிக்கு யார் மிகப்பெரிய அடிமை என்பதில் பெரிய போட்டியே நடக்கும். இப்போது இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு கமலாலயத்தில் காத்திருக்கின்றனர். இவர்களைப்போல் மணமக்கள் இருவரும் தங்களது சுயமரியாதை விட்டுக்கொடுக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் என்ன வேண்டுமோ கேட்டுப் பெற்று, வாழ்வாங்கு வாழ வேண்டும்" என்றார்.