Published:Updated:

`சித்தராமையாதான் எங்களைத் தூண்டிவிட்டார்’ - கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏவின் பேச்சால் வெடித்த சர்ச்சை

சத்யா கோபாலன்

கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவுக்கு சித்தராமையாவும் காரணம் எனக் குற்றம் சுமத்திய எம்.எல்.ஏவை கடுமையாக விமர்சித்துள்ளார் சித்தராமையா.

சித்தராமையா
சித்தராமையா ( Twitter/@siddaramaiah )

கர்நாடகாவில் நடந்து வந்த காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணியிலான ஆட்சி 16 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் கடந்த செவ்வாய்க் கிழமையுடன் முடிவுக்கு வந்தது. அன்று முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் குமாரசாமிக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானதால் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாமல் போனது. எனவே அன்று இரவே தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி.

குமாரசாமி
குமாரசாமி

ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களிடம் எவ்வளவோ சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அவர்கள் தங்கள் முடிவை விட்டு மாறவில்லை. ஜூலை 6-ம் தேதி ராஜினாமா செய்துவிட்டு மும்பை சென்றவர்கள் ஆட்சி கவிழும் வரை அங்குள்ள ஒரு ஹோட்டலிலேயே முகாமிட்டிருந்தனர்.

இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களில் சிலர் நேற்று கர்நாடகா திரும்பினர். உத்தர கன்னடா மாவட்டம் எல்லபூர் தொகுதியின் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பர் (Shivaram Hebbar) நேற்று அந்தத் தொகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ‘எனக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்த தொகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் திடீர் ராஜினாமாவுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் காரணம். அவர்தான் எங்களை ராஜினாமா செய்யத் தூண்டினார். நாங்கள் இன்னும் காங்கிரஸில்தான் உள்ளோம். தற்போது பா.ஜ.க ஆட்சியமைப்பதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனப் பேசியுள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பர்
அதிருப்தி எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பர்
shivaramhebbar.com

இவரின் கருத்துக்கு சித்தராமையா கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சித்தராமையா, “ அதிருப்தி எம்.எல்.ஏக்களை தூண்டி நான் ராஜினாமா செய்யச்சொன்னதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தீய நோக்கத்துடன் ஒரு பொய்யான குற்றச்சாட்டை அவர்கள் என் மீது தெரிவித்துள்ளனர். இதேபோன்று அவர்கள் தொடர்ந்து பேசிவந்தால் தக்க பதிலடி தருவேன்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சியையும், வாக்காளர்களையும் முதுகில் குத்தியுள்ளனர். அதனால் அவர்கள் மக்கள் மத்தியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இதைச் சரிசெய்ய அவர்கள் என் மீது பழி சுமத்துகின்றனர்.

சித்தராமையா ட்வீட்
சித்தராமையா ட்வீட்

நான் கர்நாடக முதல்வராக இருக்கும் போதே என் மீது ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது முதல் முறை அல்ல, கடைசியும் அல்ல. ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக இந்த விசயத்தை ஜீரணித்துக்கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும். சத்யமேவ ஜெயதே!” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த மாநில காங்கிரஸ் கட்சியில் மீண்டும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.