கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெற்று, இன்று (மே.13) வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. ஆளும் பா.ஜ.க 70 தொகுதிகளுக்குக் குறைவாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் சுமார் 22 தொகுதிகள் என்ற அளவிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஆட்சியமைக்கப்போவது காங்கிரஸ்தான் என்பது உறுதியாகிவிட்டது. அதனால், காங்கிரஸ் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில், `யாருக்கு முதல்வர் நாற்காலி?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. காங்கிரஸ் முன்னிலை என்ற செய்தி வெளியானதிலிருந்தே, ‘என் தந்தையைத்தான் முதல்வராக்க வேண்டும்’ என்று சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா பேச ஆரம்பித்துவிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய யதீந்திர சித்தராமையா, “கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும். பா.ஜ.க-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு எதையும் செய்வோம். கர்நாடகாவின் நலன் கருதி, என் தந்தை முதல்வராக வேண்டும். ஒரு மகனாக அவரை முதல்வராகப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். சித்தராமையாக முதல்வராக இருந்தபோது, மிகச் சிறப்பான ஆட்சியை அவர் அளித்தார். அவர் முதல்வராக வந்தால், பா.ஜ.க ஆட்சியின் தவறுகளைச் சரிசெய்வார். ஆகவே, மாநிலத்தின் நலன் கருதி, அவர் முதல்வராக வேண்டும்” என்றார்.

அதேநேரத்தில், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் பெரிதும் உழைத்திருக்கிற, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான டி.கே.சிவக்குமாரும் முதல்வர் நாற்காலிக்கான ரேஸில் இருக்கிறார். “கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வேன் என்று நான் அளித்த வாக்குறுதி, தற்போது நிறைவேறியிருக்கிறது. அந்த வாக்குறுதியை அளித்ததிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக நான் தூங்கவில்லை. நான் சிறையில் இருந்தபோது, சோனியா காந்தி வந்து என்னைச் சந்தித்தார். அதை நான் மறக்க மாட்டேன்” என்று கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார் டி.கே.சிவக்குமார்.
மேலும் அவர், “காங்கிரஸ் கட்சி எங்களின் கோயில். எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கையை காங்கிரஸ் அலுவலகத்தில் எடுப்போம். என்மீது நம்பிக்கை வைத்த என்னுடைய தலைவர் சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். சித்தராமையா உள்ளிட்ட மாநிலத்திலுள்ள தலைவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல” என்று கூறியிருக்கிறார் டி.கே.சிவக்குமார்.

காங்கிரஸ் கட்சியின் வெற்றி காரணமாக, செய்தியாளர்கள் சந்திப்பின்போது டி.கே.சிவக்குமார் உணர்ச்சிவயப்பட்டிருக்கலாம். அதேநேரத்தில், முதல்வராகும் விருப்பம் அவருக்கு இருப்பதை அவரது அந்தப் பேட்டியிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு எதையும் காங்கிரஸ் கட்சியின் தலைமை வெளியிடவில்லை. இது பற்றிப் பேசியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் சிலர், ‘ஜனநாயக முறைப்படி முதல்வர் தேர்வுசெய்யப்படுவார். எம்.எல்.ஏ-க்களாகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். இறுதி முடிவை கட்சித் தலைமை எடுக்கும்’ என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சித்தராமையாவுக்கு 75 வயதாகிறது. முதல்வராக இருந்து ஆட்சியை நடத்திய அனுபவம் அவருக்கு இருக்கிறது. டி.கே.சிவக்குமாரைப் பொறுத்த அளவில், அவர் ஆறு முறை எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றவர். இந்த முறையும் வெற்றிபெற்றிருக்கிறார். இவர், முதல்வர் நாற்காலிக்காக நீண்டகாலம் காத்திருப்பவர். அவருக்கான வாய்ப்பு தற்போது கனிந்திருக்கிறது. ஆனாலும், முதல்வராக வேண்டும் என்கிற விருப்பம் சித்தராமையாவுக்கும் இருப்பதால், அவ்வளவு எளிதாக டி.கே.சிவக்குமாராலும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட முடியாது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த தலைவராக வலம்வரும் டி.கே.சிவக்குமாரை, பண மோசடி, வரி ஏய்ப்பு ஆகிய குற்றச்சாட்டுகளில் 2019-ம் ஆண்டு திஹார் சிறையில் அடைத்தது மத்திய அரசு. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, சிறைக்கொடுமைகள் பற்றிய அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
“அரசியல் பழிவாங்கலுக்காக என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார்கள்... அவமானப்படுத்தினார்கள். மிகச் சிறிய அழுக்கடைந்த அறையில் அடைத்துவைத்தார்கள். கண்ணைக் கூசச்செய்யும் அளவுக்கு விளக்கை எரியவைத்து, இரவும் பகலும் என்னை கேமராவிலேயே வைத்திருந்தார்கள்” என்றார்.

கட்சிக்காக அந்தக் கொடுமைகளையெல்லாம் தாங்கிக்கொண்ட தனக்கு, தற்போது முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்பது டி.கே.சிவக்குமாரின் மனநிலையாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரிடம் டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமான உறவு உண்டு. காங்கிரஸ் கட்சியின் தலைமையைப் பொறுத்த அளவில், சீனியரான சித்தராமையா இருக்கிறாரே என்றெல்லாம் யோசிக்காமல் இருந்தால், முதல்வர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு வழங்கவே வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், ‘இதுதான் எனக்குக் கடைசித் தேர்தல்’ என்று தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக சித்தராமையா பேசியிருந்தார். ஆகவே, சித்தராமையா கடைசியாக ஒரு முறை முதல்வராக ஆட்சி செய்துவிட்டுப் போகட்டும் என்று தலைமை நினைத்தால், அவருக்கு முதல்வர் நாற்காலியை வழங்கலாம். எப்படியோ, அடுத்த முதல்வர் சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா என்பது ஓரிரு நாள்களில் முடிவாகிவிடும்.