Published:Updated:

மியா முஸ்லிம்களின் நம்பிக்கை... 27 வயதில் எம்எல்ஏ-வான அஷ்ரஃபுல் ஹுசைன் எனும் கவிஞனின் கதை!

அஷ்ரஃபுல் ஹுசைன்
அஷ்ரஃபுல் ஹுசைன்

ஹுசைனின் இந்த வெற்றிக்கு காரணம் அவர் தந்த வாக்குறுதிகளும், கொரோனா ஊரடங்கு காலங்களில் மக்களுக்கு தன் குழுவோடு இணைந்து செய்த பணிகளும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அதையும் தாண்டி அவரின் கவிதைகள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம் என்றும் சொல்லலாம்.

அஸ்ஸாம் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 126 தொகுதிகளில், பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி (AIUDF) 16 இடங்களில் வெற்றி பெற்றது.

பார்பெட்டா மாவட்டம், செங்கா(Chenga) தொகுதியில் AIUDF சார்பில் போட்டியிட்ட அஷ்ரஃபுல் ஹுசைன் என்ற 27 வயது இளைஞர் இளம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர், தற்போது எல்லோரின் கவனத்தையும், நம்பிக்கையும் பெற்றவராக மாறியிருக்கிறார். முதல்முறை தேர்தலில் நின்ற ஹுசைன் எப்படி வென்றார், மக்கள் ஏன் அவரைக் கொண்டாடுகின்றனர்?

அஷ்ரஃபுல் ஹுசைன் | Ashraful Hussain
அஷ்ரஃபுல் ஹுசைன் | Ashraful Hussain

அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா நதிக்கரையில், விவசாயியின் மகனாக பிறந்தவர் அஷ்ரஃபுல் ஹுசைன். பிரிட்டிஷ் ஆட்சியில் வங்காளதேசத்தின் மைமென்சிங், ராங்பூர் போன்ற பகுதியிலிருந்து அஸ்ஸாம் பிரம்மபுத்திரா பகுதியில் குடியேறிய மியா (Miya) குடியைச் சேர்ந்தவர் இவர். குறைந்த எண்ணைக்கையிலான மியா பகுதி முஸ்லிம்கள் அஸ்ஸாம் மக்களால் எப்போதும் ஓரம்கட்டப்படுவதாக உணர்ந்த ஹுசைன் தன் எதிர்ப்புக் குரலை கவிதைகள் மூலம் எழுத ஆரம்பித்தார். இதன்மூலம் புகழ்பெற்றார். இதற்காக சில வழக்குகளையும் பெற்றார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் எதிர்த்து ஹுசைன் குரல்கொடுக்க அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றார். கார்ப்ரேட் துறையில் வேலை பார்த்த ஹுசைன் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமையைப் பெற அரசியலில் இறங்க வேண்டும் என்று முடிவு செய்து, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியில் சேர்ந்தார். இளம் வயதில் மிகவும் துடிப்புமிக்கவராக செயல்பட்ட இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது.

அஷ்ரஃபுல் ஹுசைன்
அஷ்ரஃபுல் ஹுசைன்

”மியா மக்கள் பிரம்மபுத்திரா வெள்ளத்துக்கும், மண் அரிப்புக்கும் எதிராக போராடுகிறார்கள். அவர்கள் தங்கும் வீடுகளுக்கு பட்டா கூட கிடையாது. அம்மக்களின் உரிமைக்காக எப்போதும் துணை நிற்பேன்” என்ற கொள்கையோடு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இதன் மூலம் அஸ்ஸாமின் இளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஹுசைனின் இந்த வெற்றிக்கு காரணம் அவர் தந்த வாக்குறுதிகளும், கொரோனா ஊரடங்கு காலங்களில் மக்களுக்கு தன் குழுவோடு இணைந்து செய்த பணிகளும்தான் என்று சொல்லப்படுகிறது. அதையும் தாண்டி அவரின் கவிதைகள் ஏற்படுத்திய தாக்கம் என்றும் சொல்லலாம்.

அழாதே! இறங்கி போராடு! கறையை தகர்த்தெறி
- அஷ்ரஃபுல் ஹுசைன்

வெற்றிக்குப் பின், பேட்டியளித்த ஹுசைன், ''அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மா மியா கவிதைகளையும், கவிஞர்களையும் எதிர்க்கிறார். ஆனால், நான் கவிதை எழுதுவதை விடமாட்டேன். மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கவிதைகள் மூலம் வெளிச்சம் போட்டு காட்டுவேன். அமைதிக்கான கவிதைகளை பொதுவெளியில் நான் படிக்கும்போது மக்கள் கவனிக்கின்றனர். அவர்களுக்குள் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது'' என்றார். மேலும் ''19 லட்சம் மக்கள் இந்திய தேசிய பதிவேட்டில் இல்லாமல் தவிக்கின்றனர் அவர்களுக்கான அடையாளம் கிடைக்கப்பட வேண்டும்'' என்றும் கூறியிருக்கிறார்.

அஷ்ரஃபுல் ஹுசைன்
அஷ்ரஃபுல் ஹுசைன்
ஹுசைனின் வெற்றி சாதாரண வெற்றியாக இல்லாமல் மியா மக்களின் வெற்றியாகவும், தங்களது வாழ்தாரங்களுக்காக போராடுபவர்களின் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. ஹுசைனின் கவிதைகள் ஏற்படுத்திய வீச்சைப் போல, அவரின் செயலும் குரலொடுக்கப்பட்டவர்களுக்காக எப்போதும் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
அடுத்த கட்டுரைக்கு