Published:Updated:

`சிக்கிம் முதல்வருக்கு கிரீன் சிக்னல்!’ - சர்ச்சையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்தவர், இன்று எதிர்க்கட்சித்தலைவராக கூட இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Prem Singh Tamang
Prem Singh Tamang

சிக்கிம் மாநிலத்தில்1999-ம் ஆண்டு முதல் கடந்த மே மாதம் வரை முதல்வராக இருந்தவர் பவன் குமார் சாம்லிங். ஏறக்குறைய 20 வருடங்களுக்கும் மேலாக அம்மாநிலத்தில் முதல்வராக பதவி வகித்துவந்தவர். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் அம்மாநிலத்தில் நடைபெற்றது. இதில், பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. அதன்படி, சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமங் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள் கடந்த மாதம் திடீரென பா.ஜ.க-வில் இணைந்தனர்.

election commission
election commission

இதன் மூலம் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்தவர், இன்று எதிர்க்கட்சித்தலைவராகக் கூட இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அம்மாநில முதல்வராக இருக்கும் பிரேம் சிங் தமங் வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டார். 1990-ம் ஆண்டு பிரேம் சிங் அமைச்சராக இருக்கும்போது, கால்நடைத்துறையில் நடந்த ஊழல் தொடர்பாக தமங்குக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியது. அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்த வழக்கில் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் அவர் சிறைத் தண்டனை அனுபவித்தார். 2018 ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, சிறையிலிருந்து வெளியே வந்த ஒருவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதன் அடிப்படையில் 2018 முதல் 2024-ம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் அவர் அம்மாநிலத்தில் முதல்வராக இருந்தபோதிலும், எம்.எல்.ஏவாக இல்லை. 6 மாதகாலத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றால் மட்டுமே அவர் முதல்வராக நீடிக்க முடியும். ஆனால், தேர்தல் ஆணையத்தின் தடையால் அவரால், எந்தத் தேர்தலிலும் போட்டியிடமுடியாது. இப்படியொரு சிக்கலில் தவித்துக்கொண்டிருந்தார் பிரேம் சிங். இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

Prem Singh Tamang
Prem Singh Tamang

அதில் 1990-ம் ஆண்டு நடந்த ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற தமக்கு` 2003-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது செல்லாது’ என அவர் வாதிட்டார். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதைத் ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் அவருக்குத் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை 13 மாதங்களாகக் குறைத்து நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் அவர் இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் இடைத் தேர்தலில் தமாங்கின் கிரந்திகாரி மோர்ச்சா, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.