Published:Updated:

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம்: `எடப்பாடி நினைப்பதுபோலில்லை... சிக்கல்கள் உண்டு’ - பின்னணி என்ன?!

அதிமுக கூட்டம்

வரும் 23-ம் தேதி அதிமுக-வின் பொதுக்குழு நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமையைத் தேர்தெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம்: `எடப்பாடி நினைப்பதுபோலில்லை... சிக்கல்கள் உண்டு’ - பின்னணி என்ன?!

வரும் 23-ம் தேதி அதிமுக-வின் பொதுக்குழு நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமையைத் தேர்தெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published:Updated:
அதிமுக கூட்டம்

அதிமுக-வில் ஒற்றைத் தலைமைக்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுவருவதாக பல்வேறு காலகட்டங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதிகாரபூர்வமாக இன்று அது குறித்த விவாதம் நடைபெற்றிருக்கிறது. வரும் 23-ம் தேதி அதிமுக-வின் பொதுக்குழு நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமையைத் தேர்தெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒற்றைத் தலைமை கோஷம்
ஒற்றைத் தலைமை கோஷம்

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வரும் 23-ம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடைபெற்றது. மொத்தமாக 149 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், 135 பேர் கலந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.

எம்.ஜி.ஆர் மாளிகையின் முதல் தளத்தில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே, கீழ்த் தளத்தில், `கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்’ என ஒரு குழுவும், `ஓ.பி.எஸ்-தான் தலைமையேற்க வேண்டும்’ என ஒரு குழுவும் கோஷங்களை எழுப்ப சிறிது நேரம் அந்த இடம் பரபரப்பானது. சில மூத்த நிர்வாகிகள் வந்து சமாதனம் செய்ய அனைவரும் அமைதியாகினர். தரைத்தளத்தில் நடந்த இதே விவாதம், மேலே கூட்டம் நடந்த அறைக்குள்ளும் நடந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூட்டம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை எனக் கூறியிருக்கிறார்கள். ஒற்றைத் தலைமை யார் என்பது குறித்து கட்சி முடிவு செய்யும். கட்சியில் இருக்கும் யார் வேண்டுமானாலும் தலைமைக்கு வர முடியும். முன்பிருந்த நிலை வேறு, இப்போதைய நிலைமை வேறு. எனவே காலத்தின் கட்டாயத்தால் ஒற்றைத் தலைமை குறித்து விவாதம் நடத்தினோம். சூழல் மாறியிருக்கிறது. எனவே, ஒற்றைத் தலைமை அவசியம் என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர்'' என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

மாதவரம் மூர்த்தி
மாதவரம் மூர்த்தி

இந்த நிலையில் கூட்டத்தில் என்ன நடந்தது, யார் இந்த விவாதத்தைத் தொடங்கியது என அதிமுக வட்டாரத்தில் பேசினோம்.

``பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கும் பொதுக்குழு , செயற்குழு உறுப்பினர்களுக்கு உடனடியாகப் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டைகளைத் தயார் செய்வது, சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் உள்ளிட்ட விஷயங்கள்தான் முதலில் பேசப்பட்டன. தொடர்ந்து பொதுக்குழுத் தீர்மானங்கள் குறித்து விளக்கப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்திதான் முதலில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதத்தைத் தொடங்கிவைத்தார். உடனடியாகக் கூட்டத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், `அவர் கருத்தை அவர் சொல்லட்டும். நீங்களும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்' என அவருக்கு ஆதரவாகப் பேசினர். தொடர்ந்து, வேலுமணி, தங்கமணி எனப் பெரும்பாலானவர்கள் ஒற்றைத் தலைமைக்கான தேவை குறித்துப் பேசினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியனும், ஜே.சி.டி.பிரபாகரும் கட்சிக்காக ஓ.பி.எஸ் எந்தெந்த விஷயங்களை இதுவரைக்கும் விட்டுக் கொடுத்திருக்கிறார் என்கிற விஷயங்களை அடுக்கினர். வைத்திலிங்கமும், `கட்சி நலனுக்கு ஏற்ற நல்ல முடிவை எடுங்கள்’ என்பதோடு ஒதுங்கிக்கொண்டார். தளவாய் சுந்தரம், தச்சை கணேசராஜா உள்ளிட்ட சிலர் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் என்று பேசினார்கள். ஆனால், பெரும்பானவர்களின் கருத்தாக ஒற்றைத் தலைமைதான் இருந்தது. ஆனால், `அது யார் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’ என ஓ.பிஎ.ஸ் & இ.பி.எஸ்-ஸிடமே அந்த முடிவை விட்டுவிட்டனர்'' என்றவர்கள் தொடர்ந்து,``அப்படி இரட்டைத் தலைமைகளில், ஒற்றைத் தலைமை யார் என்கிற போட்டி வந்தால் நிச்சயமாக எடப்பாடிதான் வெற்றிபெறுவார். இப்போது இருக்கிற பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், அவரின் ஆதரவாளர்கள்தான். பொதுவாக எந்தக் கருத்தையும் தடாலடியாகப் பேசாத, மாதவரம் மூர்த்திதான் இந்த விஷயத்தை முதலில் பேசியிருக்கிறார் என்றால், இதெல்லாம் இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்பே திட்டமிட்ட ஒரு விஷயமாகத்தான் இருக்கும். அதனால்தான், வெளியே ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

அ.தி.மு.க கூட்டம்
அ.தி.மு.க கூட்டம்

ஓ.பி.எஸ்-தான் இந்தச் சரவெடியை சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், இதில் பல்வேறு சிக்கல்களும் இருக்கின்றன. கட்சியில் எடப்பாடியை ஒற்றைத் தலைமையாகத் தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தில் ஓ.பி.எஸ்-ஸும் கையெழுத்து போட வேண்டும். பெரும்பாலானவர்களின் ஆதரவு என்கிற அடிப்படையில் அவர் கையெழுத்துப் போடவேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டாலும், பின்னாளில் நீதிமன்றத்துக்கு அவர் சென்றால் அதனால் சிக்கல்கள் எழவும் வாய்ப்பிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக-வுக்கும் இது ஒரு வாய்ப்பாக மாறிவிடும். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்கிற விஷயம் இதில் உண்மையாகிவிடும். 2024 தேர்தலில் இதை வைத்தே 20 இடங்கள் வரை அதிமுக-விடம் பேரம் பேசுவார்கள். விளைவுகளை யோசிக்காமல் எடுத்த முடிவாகவே இதைப் பார்க்கிறோம். எது எப்படியோ, எடப்பாடி திட்டமிட்டு காய்களை நகர்த்தி ஒற்றைத் தலைமைக்கான இடத்தை நெருங்கிவிட்டார். அவர் கட்சியின் பொதுச்செயலாளராகவும், ஓ.பி.எஸ்-ஸுக்கு அவைத்தலைவர் பொறுப்பு வழங்கப்படவும் முடிவெடுக்கப்படலாம். அதற்கு ஓ.பி.எஸ் வழக்கம்போல் ஒப்புக்கொண்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகளில் அவர் இறங்கினால் அதிமுக-வுக்கு அது சிக்கல்தான்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism