Published:Updated:

அ.தி.மு.க - நாலு பேரு நாலு விதமா யோசிக்கிறாங்க!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

ஒற்றைத் தலைமைத் தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் அவர் வாங்கிய தடைக்குப் பின்னால் பலரின் ஆதரவுக் கரங்கள் இருக்கின்றன என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து

அ.தி.மு.க - நாலு பேரு நாலு விதமா யோசிக்கிறாங்க!

ஒற்றைத் தலைமைத் தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் அவர் வாங்கிய தடைக்குப் பின்னால் பலரின் ஆதரவுக் கரங்கள் இருக்கின்றன என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

அடுத்து என்ன நடக்கும் எனப் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் அரங்கேறிவருகிறது அ.தி.மு.க உட்கட்சி யுத்தம். ‘ஒற்றைத் தலைமையாகத் தன்னை நிலைநாட்டிக்கொள்ள, முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டேன்’ என எடப்பாடி பழனிசாமியும், ‘இந்தமுறை விட்டுத் தர வாய்ப்பே இல்லை’ என ஓ.பன்னீர்செல்வமும் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றனர். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் 2.0-வைத் தொடங்கும் முன்பாகவே ‘அ.தி.மு.க-வை மீட்பேன்’ எனக் களத்திலிறங்கிய சசிகலாவும் டி.டி.வி. தினகரனும்கூட தங்களின் அரசியல் பயணங்களை வேகப்படுத்தியிருக்கின்றனர். ‘விக்ரம்’ திரைக்கதையைவிட வேகமாக நகரும் இந்த ரேஸில் ஒவ்வொருவரின் திட்டம் என்ன?

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
Jerome K

கட்சியை விட்டு நீக்குவேன்... காரியம் சாதிப்பேன்!

‘பெரும்பாலான நிர்வாகிகள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள்; எப்படியும் பொதுச்செயலாளர் ஆகிவிடலாம்’ என்கிற எடப்பாடி பழனிசாமியின் கனவுக்கு இடியாக வந்திறங்கியது, சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு. ‘பொதுக்குழுவை நடத்த எந்தத் தடையுமில்லை' என்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீட்டுக்குச் சென்றவுடனேயே அடுத்து எப்போது பொதுக்குழுவைக் கூட்டலாம் என்பதுவரை முடிவு செய்துவிட்டது எடப்பாடி தரப்பு. விடியற்காலையில், `புதிதாக எந்தத் தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது' என்கிற உத்தரவு வந்தவுடன் உச்ச நீதிமன்றத்தில் தடை உடைக்க அபிஷேக் சிங்வி வரைக்கும் வைத்து முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், எல்லாம் கைமீறிப்போன நிலையில் ஒப்புக்காக நடத்திமுடிக்கப்பட்டது பொதுக்குழுக் கூட்டம். ஓ.பி.எஸ்ஸை கட்சியில் வைத்துக்கொண்டே காரியம் சாதித்துவிடலாம் என்கிற எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை அவநம்பிக்கையாகிப் போனது. ஓ.பி.எஸ்-ஸைக் கட்சியை விட்டு நீக்கியாவது பொதுக்குழுவைக்கூட்டித் தலைமைப் பதவிக்கு வந்துவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் எடப்பாடி. வெளியேற்றுவதற்கு முன்னால் துரோகிப் பட்டத்தை வலுவாகக் கட்டிவிடவேண்டும் என்ற முயற்சிகள் ஜரூராகத் தொடங்கிவிட்டன. இனி ‘ஓ.பி.எஸ்ஸின் துரோகங்கள்’ என்கிற பட்டியலை அ.தி.மு.க மாஜிக்கள் பொறுப்பாகப் படிப்பார்கள்.

இதை முதல் ஆளாகச் செய்துவிட்டார், கட்சியில் ஓ.பி.எஸ்ஸின் இடத்துக்காக வெகுநாள்களாக முட்டிமோதிவரும் ஆர்.பி.உதயகுமார். தென்மாவட்டங்களில் சாதி ரீதியாக எழும் எதிர்ப்புகளை அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை வைத்தே எடப்பாடி சரிசெய்துகொள்ளலாம். ஆனால், பன்னீர் மீதான டெல்லியின் பரிவை என்ன செய்வது? முடிந்தவரை முயற்சி செய்து பா.ஜ.க ஆதரவைப் பெறலாம், இல்லாவிட்டால் அதிகபட்சம் என்னாகும்? கட்சி பிளவுபடும், சின்னம் முடங்கும், பார்த்துக்கொள்ளலாம்’ என்பதே எடப்பாடி தரப்பின் திட்டம்.

அ.தி.மு.க - நாலு பேரு நாலு விதமா யோசிக்கிறாங்க!

டெல்லி ஆதரவு... மோதிப் பார்க்கும் பன்னீர்!

நிர்வாகிகள் ஆதரவில்லாத நிலையில் சட்டத்தையும், பா.ஜ.க மேலிடத்தையும் நம்பித்தான் களத்திலிறங்கியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஒற்றைத் தலைமைத் தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் அவர் வாங்கிய தடைக்குப் பின்னால் பலரின் ஆதரவுக் கரங்கள் இருக்கின்றன என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து. அந்தத் தைரியத்தில்தான் அவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் மிக நிதானமாக பொதுக்குழுக் கூட்டத்தில் அவரால் கலந்துகொள்ள முடிந்தது என்கிறார்கள். அதேநாளில், ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்ய, கூட்டணிக் கட்சித்தலைவர்கள் என்கிற முறையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் பணிக்கான மேலாண்மைக் குழு உறுப்பினர் சி.டி.ரவியின் மூலமாக பா.ஜ.க மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது. எடப்பாடி சார்பில் தம்பிதுரை செல்ல, ஓ.பி.எஸ்ஸே நேரடியாகச் சென்று கலந்துகொண்டார். இதன்மூலம், டெல்லியின் ஆதரவு தனக்குத்தான் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொண்டார் பன்னீர்.பொதுக்குழுவுக்கு முந்தைய நாள் ஓ.பி.எஸ் ஆதரவு நிலையில் இருந்த வேளச்சேரி அசோக், மைத்ரேயன், சென்னையைச் சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள் பலர் எடப்பாடி அணிக்குத் தாவ, அதிர்ச்சியடைந்தனர் ஓ.பி.எஸ் தரப்பினர். ஆனால், எடப்பாடி திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்காததும் டெல்லி பயணமும் மீண்டும் சிலரின் பார்வையைப் பன்னீர் பக்கம் திரும்பியிருக்கிறது. பன்னீரின் ஆதரவாளர்களாக கடந்த காலத்தில் இருந்தவர்கள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் என ஒரு பட்டியலைத் தயார்செய்து மீண்டும் அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையைத் தொடங்கியிருக்கின்றனர் பன்னீர் குடும்பத்தினர். அதேபோல, பன்னீரைப் பொதுக்குழுவில் நடத்திய விதம், தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயப் பிரமுகர்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளதையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். அதற்கான ஒருங்கிணைப்புகளை அவரின் இளைய மகன் ஜெயபிரதீப் பார்க்கிறார்.

சசிகலா
சசிகலா

புரியாத சசிகலா... புதுத்தெம்பில் தினகரன்!

இந்தக் களேபரங்களுக்கு நடுவே, ‘அ.தி.மு.க-வைக் காப்பாற்ற தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாகச் சுற்றுப்பயணம் செல்லப்போகிறேன்’ எனக் கிளம்பியிருக்கிறார் சசிகலா. இருவரும் அடித்துக்கொண்டால், நிர்வாகிகள் நம்மிடம் வந்துவிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பில் அவர் இருப்பதாகத் தகவல். `இரட்டைத் தலைமை இருக்கும்போதே அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்த பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி வந்துவிட்டால் அவ்வளவுதான்’ என அதிர்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள். ‘`சின்னம்மா இந்த விபரீதம் புரியாமல், இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் குடும்பத்தினருக்கு முறுக்குச் சுட்டுக் கொடுத்தும், கொடுவா மீன் குழம்பு வைத்துக் கொடுத்தும் மகிழ்ந்துகொண்டிருக்கிறார். இதுதான் சரியான தருணம், பன்னீருக்கு ஆதரவாக மறைமுகமாகக் களத்திலிறங்கி, எம்.எல்.ஏக்களை, மா.செக்களை கொடுப்பதைக் கொடுத்துத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளைச் செய்ய வேண்டும். அதைச் செய்யாதவரை, அரசியல் சுற்றுப்பயணங்கள் மூலம் எந்த நன்மையும் ஏற்படாது. அவரே முன்வந்து ஏதாவது நடவடிக்கைகளில் இறங்கினாலும் குடும்பத்தினர் விடுவதில்லை. கட்சிக்கு, அரசியல் வேலைகளுக்குச் செலவழிக்க தங்களிடம் ஏற்கெனவே கொடுத்துவைத்த சொத்துகளை, பணத்தைக் கேட்டுவிடுவாரோ என்ற அச்சத்தில் முட்டுக்கட்டை போடுகிறார்கள்’’ எனக் கொந்தளிக்கிறார்கள் ஆதரவாளர்கள்.

தினகரன்
தினகரன்

தவிர, டெல்லியின் கிரீன் சிக்னல் கிடைக்காமல், அதிரடியாக ஏதாவது செய்து மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்கிற அச்சமும் அவரிடம் இருக்கிறது. அதனால்தான், பா.ஜ.க குறித்து ஏதாவது கேள்வி கேட்டால்கூட, தி.மு.க-வைத் திட்டி நழுவிக்கொள்கிறார் என்கிறார்கள்.

பன்னீரின் இந்த தர்மயுத்தம் 2.0-ஆல் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன். பன்னீரைப் பொதுக்குழுவில் நடத்திய விதத்தால், தென் மாவட்ட முக்குலத்துச் சமூக மக்களிடம் எழுந்திருக்கும் அதிருப்தியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். தவிர, டெல்லியின் ஆதரவும் சமீபத்தில் அவருக்குக் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அதனால்தான், அமலாக்கத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்கிறார்கள். மேலும், இரட்டை இலைச் சின்னம் முடங்கவேண்டும் என்பதும் டி.டி.வி தரப்பின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தொடங்கி பொன்விழா காணும் இப்போதுவரை இதேபோல பல்வேறு காட்சிகளைக் கண்டிருக்கிறது அ.தி.மு.க. இப்போது நடக்கும் இந்த யுத்தத்தில் வெல்லப்போவது யார் என்பது இந்த நால்வரைத்தாண்டி டெல்லியின் கைகளில்தான் இருக்கிறது.