Published:Updated:

சீர்காழி: `உயிர் பயத்தில் வாழ்கிறார்கள்..!’ - இடிந்து விழும் நிலையில் 6,000 தொகுப்பு வீடுகள்?

புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை
புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும், தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு அரசு கான்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ் சுமார் 6,000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம்  பகுதியில் இடிந்து விழும் நிலையிலுள்ள சுமார் 6,000 தொகுப்பு வீடுகளுக்கு  பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை
புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சக்திவேல், வக்கீல் ரவி மற்றும் முகமது ரபிக் ஆகியோர் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்டிருந்த மயிலாடுதுறை ஆர்.டி.ஓ மகாராணி, நேர்முக உதவியாளர் மலர்விழி ஆகியோரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில், ``கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளிலும் கடந்த 1992-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை ஏழை எளிய, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும், தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு அரசு கான்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ் சுமார் 6,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. புயல், மழை, வெள்ளம் எனத் தொடர்ந்து இந்த வீடுகள் பழுதடைந்தன. கடந்த 29 ஆண்டுக்காலமாக இந்த வீடுகளில்  வசித்துவருபவர்கள் எப்போதும அச்சத்துடன் வாழ்ந்துவருகின்றனர். தினம் தினம் உயிர் பயத்திலும், தூக்கத்தை இழந்தும் பயந்து வாழ்கின்றனர். இந்த அனைத்துத் தொகுப்பு வீடுகளும் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. கனமழை, புயல் போன்ற அதிக காற்று வீசும் நேரங்களில் சொந்த வீட்டில் தங்குவதற்கு பயந்து, மற்ற வீடுகளில் போய் அடைக்கலம் புக வேண்டிய அவல நிலையில்  இருக்கிறார்கள். அகதிகளைப்போல் இவர்கள் உயிர் பயத்தில் தினம் தினம் மனவேதனையுடன் வாழ்ந்துவருகிறார்கள்.

புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை
புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை

எனவே, இவர்களின் பரிதாப நிலைமையை உணர்ந்து, இடியும் நிலையிலுள்ள அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்து, வீடுகளை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டம் ஆகிய அரசு கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிதாக அரசு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருக்கின்றனர். கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. ``இது குறித்து ஆய்வு செய்து புதிய அரசு, கான்கிரீட் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு