Published:Updated:

`உள்ளடி வேலைகளால் கலக்கம்; மொட்டை அடித்து வேண்டுதல்!’ - வேலூர் தொகுதியில் அதிமுக முந்துமா?

மொட்டை அடித்துக்கொண்ட தொண்டர்கள்
மொட்டை அடித்துக்கொண்ட தொண்டர்கள்

வேலூர் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற வேண்டி அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் மொட்டை அடித்துக்கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் நேரடியாக மோதுகின்றன. தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திகேயன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க-வில் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு களமிறங்கியுள்ளார். மாவட்டத் தலைநகர் தொகுதி என்பதால் பிரசாரமும் அனல் பறக்கிறது. இந்தநிலையில், அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வெற்றி பெற வேண்டிக்கொண்டு அக்கட்சியைச் சேர்ந்த 18 தொண்டர்கள் ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மொட்டை அடித்து வழிபட்டனர்.

அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு
அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு

இந்தநிகழ்ச்சியில், அப்புவும் கலந்துகொண்டு தனக்காக முடிக் காணிக்கைச் செய்த அ.தி.மு.க-வினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். பி.காம்., எம்.பி.ஏ பட்டம் பெற்றுள்ள அப்பு, வணிகம் நடத்துவதோடு, கட்டுமானப் பொருள்களை விற்பனை செய்யும் தொழிலையும் செய்கிறார். முழு நேர அரசியல்வாதியாகவும் வலம்வருகிறார். தற்சமயம், மாநகர மாவட்டச் செயலாளராக கட்சிப் பொறுப்பு வகிக்கிறார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 21-ம் தேதி அப்புவை ஆதரித்து வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசவிருக்கிறார். இந்தநிலையில், தேர்தல் பணியில் சுணக்கம் காட்டும் நிர்வாகிகளால் அ.தி.மு.க-வுக்குத் தலைவலி ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, சத்துவாச்சாரி மற்றும் ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் தேர்தல் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கி நிற்கிறார்கள்.

மொட்டை அடித்துக்கொண்ட தொண்டர்கள்
மொட்டை அடித்துக்கொண்ட தொண்டர்கள்

பணம் செலவிடுவதற்குத் தயக்கம் காட்டுவதாலேயே அந்த நிர்வாகிகள் ஒதுங்கி நிற்பதாகவும், அப்படிப்பட்ட நபர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் இன்னொரு தரப்பு குரல் கொடுத்துவருகிறது. மாநகராட்சி இரண்டாவது மண்டல குழுத் தலைவராக இருந்தவரும், தொகுதிச் செயலாளராக கட்சிப் பொறுப்பிலிருந்தவரும்தான் சத்துவாச்சாரியில் சுணக்கத்துக்குக் காரணம் என்றும் அவர்கள் கொதிக்கிறார்கள். இன்னொரு புறம் சீட் கிடைக்காத அதிருப்தியில் உள்ளடி வேலை செய்துவருகிறார் ஐடி விங் நிர்வாகி ஒருவர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவை அனைத்தையும் சமாளித்து அதிமுக வேட்பாளர் வெல்லுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு