Election bannerElection banner
Published:Updated:

யார் வேட்பாளர்; கடும் போட்டியால் குழப்பத்தில் கட்சித் தலைமைகள் - சிவகங்கை தொகுதி தேர்தல் நிலவரம் !

சிவகங்கை தொகுதி நிலவரம்
சிவகங்கை தொகுதி நிலவரம்

தொகுதி முழுதும் வேலையில்லா திண்டாட்டம் இருந்துவருவதால் பலரும் வெளிநாட்டு வேலைக்கே விரும்பிச் செல்கின்றனர். காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் என பல கட்சிகள் இங்கு வெற்றி பெற்றாலும்,தொகுதியின் நிலை மாறவில்லை.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் நான்கு தொகுதிகள் உள்ளன. அவற்றுள் சிவகங்கை முக்கிய தொகுதியாக விளங்குகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தொகுதி சிவகங்கை. வெள்ளையர்களுக்கு சவாலாக இருந்த வேலுநாச்சியார், மருதுபாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும்.

சிவகங்கை தொகுதி - காளையார்கோயில்
சிவகங்கை தொகுதி - காளையார்கோயில்

கம்பர், ஒக்கூர் மாசாத்தியார் போன்ற புகழ்பெற்ற புலவர்களும் வாழ்ந்தது இப்பகுதி சிறப்பு. சொர்ணகாளீஸ்வரர், வெட்டுடையாகாளி, கண்ணுடைய நாயகி அம்மன் உள்ளிட்ட கோயில்கள் சிறப்புமிக்கது. வைகை, பெரியாறு பாசனப்பகுதியாக இருந்தாலும் மழையை நம்பி தான் விவசாயம். ஆரம்ப கட்டத்திலேயே நூற்பாலைகள் முடங்கியதால் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. தொகுதி முழுதும் வேலையில்லா திண்டாட்டம் இருந்துவருவதால் பலரும் வெளிநாட்டு வேலைக்கே விரும்பிச் செல்கின்றனர். காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் என பல கட்சிகள் இங்கு வெற்றி பெற்றாலும்,தொகுதியின் நிலை மாறவில்லை.

சிவகங்கை கண்மாய், குளங்கள் நிறைந்த தொகுதி. ஆனால் தற்போது நீர் நிலைகள் குப்பை கொட்டும் இடங்களாக மாறிவருகின்றன. அதனால் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் நிலையை மேம்படுத்த ஸ்பைசஸ் பார்க் (Spices Park) என்று சொல்லக்கூடிய தொழிற் பூங்கா, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. மிளகாய், மஞ்சள் போன்ற பொருட்களை பதப்படுத்தி வைத்தல், பூஞ்சைகளால் பாதிக்காத வகையில் பாதுகாக்கும் அறை என பல ஏக்கரில் பல கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

 சிவகங்கை ஆட்சியர் அலுவலகம்
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம்

வேலை வாய்ப்பையும் அள்ளித் தரக்கூடிய இந்த பூங்க தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது சமூக ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படாதது, கிராமங்களுக்கும், பெரு நகரங்களுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததும் முக்கிய பிரச்னைகளாக உள்ளன. கறுப்பு தங்கம் என அழைக்கப்படும் கிராபைட் சுரங்கம், அதன் சுத்திகரிப்பு ஆலையின் மூலமாக தமிழ்நாடு கனிம நிறூவனம் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது.

இதில் வருவாய் கிடைத்தும், உப தொழிற்சாலைகள் இல்லாததால் போதுமான வேலை வாய்ப்பின்றி இன்னும் தொகுதி மக்கள் வெளியூர், வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்கின்றனர். தொழிற்ச்சாலைகள் இல்லாததால் இங்கு வெட்டி எடுக்கப்படும் கிராபைட் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அனுப்பபடுகிறது. கிராபைட்டை பயன்படுத்தி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஏராளமான சிறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன.

தெப்பக்குளம்
தெப்பக்குளம்

அதே போல் சிவகங்கை மாவட்டத்திலும் பல்வேறு தொழில்கள் துவங்க வசதி செய்து தர வேண்டும் என சிவகங்கை மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் குழு ஒன்று ஆந்திரா சென்று வந்தது. ஆனாலும் பெரிய அளவு முன்னேற்றம் அடையவில்லை என்பது தான் நிதர்சனம். தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,43,238 , பெண் வாக்காளர்கள் 1,47,760, மூன்றாம் பாலினத்தவர் 2 மொத்தம் 2,91,000 வாக்காளர் உள்ளனர்.

கடந்த 2016 - சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க வேட்பாளராக இருந்த மேப்பல் சக்தி (எ) சத்தியனாதன் 75,061 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார். அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட ஜி.பாஸ்கரன் 81,697 வாக்குகள் பெற்று 6,636 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து ஜி.பாஸ்கரனுக்கு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

நறுமணப் பூங்கா
நறுமணப் பூங்கா

தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாஸ்கரன் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம் என்ற உளவுத்துறை தகவலால், தனக்கு பதில் தனது மகன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளரான மகன் கருணாகரனை அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளச் செய்தார்.

ஆனால், அ.தி.மு.க சிவகங்கை மாவட்ட செயலாளரான செந்தில்நாதன் காரைக்குடி தொகுதியை கேட்டு வருகிறார். திருப்பத்தூர் தொகுதியை நமது அம்மா பத்திரிகை ஆசிரியர் மருது அழகுராஜ் குறிவைத்து கடந்த ஆறு மாதங்களாக தொகுதியில் வலம் வருகிறார். மேலிட செல்வாக்கு மிக்க இருவரும் அமைச்சர் பதவிக்கு குறி வைப்பார்கள் என்பதால் தனது மகனுக்கு வாய்ப்பிருக்காது என நினைத்து மீண்டும் தானே போட்டியிடுவது என்ற முடிவில் அமைச்சர் அதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மாவட்ட செயலாளருமான முருகானந்தம் தனக்கு அல்லது தனது மகனுக்கோ சிவகங்கை தொகுதியை கேட்டு குடைச்சல் கொடுத்து வருகிறார்.

சிவகங்கை தொகுதி  - காளையார் கோயில்
சிவகங்கை தொகுதி - காளையார் கோயில்

இது ஒரு புறம் இருக்க திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சத்தி(எ)சத்தியநாதனை தங்களது கட்சியில் சேர்த்த பா.ஜ.க, சீட் கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறது. அமைச்சர் பாஸ்கரனை ஒரு பொருட்டாகக் கூட கருதாமல், பா.ஜ.க செயல்பட்டு வருவது அமைச்சர் பாஸ்கரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க நிர்வாகிகள் மட்டுமில்லாமல் கூட்டணி கட்சியனரும் சேர்ந்து அமைச்சருக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். சிவகங்கை தொகுதியில் அமைச்சர் போட்டியிட்டாலே வெற்றி பெறுவது சிரமம் என்ற நிலையில் வேறு யார் போட்டியிட்டாலும் படுதோல்வி நிச்சயம் என்பது மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

தி.மு.க.,வில் கனிமொழி மூலம் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த ஏ.கே.பூபதி சீட் கேட்டுள்ளார். ஸ்டாலினிடம் பூபதிக்காக கனிமொழி பரிந்துரை செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் நகரச் செயலாளர் துரை ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், முன்னாள் எம்.எல்.ஏ மனோகரனின் மனைவி சாந்தி, ஜெயராமன் என தொகுதியில் நன்கு அறிமுகமானவர்களும் சீட் கேட்டு வருகின்றனர்.

சிவகங்கை
சிவகங்கை

ஆனால் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க செவந்தியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் குணசேகரன் ஆகியோருக்கும் பரிந்துரை பலமாக இருந்துவருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரனுக்கு தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளதால் அவருக்கு தி.மு.க கூட்டணியில் சீட்டு ஒதுக்கினால் வெற்றி முகம் காண வாய்ப்பு உள்ளதென அரசியல் ஆர்வலர்கள் நம்மிடம் தெரிவித்தனர். எனினும் தொகுதியில் கட்சி மற்றும் வேட்பாளர்களை அறிவித்த பின்னரே வெற்றி நிலவரம் முழுமையாக தெரியவரும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு