Published:Updated:

நான் பா.ஜ.க-வில் இணைந்ததை 200% அப்பா ஆசீர்வதிக்கிறார்!

- ராம்குமார் நெகிழ்ச்சி

பிரீமியம் ஸ்டோரி

தேர்தல் நெருங்கும் நிலையில் பிரபலங்களை இழுப்பதில் ‘சிக்ஸர்’ அடிக்க முடியாவிட்டாலும், ஒன்றிரண்டாக ‘சிங்கிள்ஸ்’ எடுத்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அந்த வரிசையில் இப்போது பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார் ராம்குமார். இதை முன்வைத்து ‘சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பா.ஜ.க-வில் இணைந்திருப்பது சிவாஜியின் புகழுக்கு ஏற்பட்ட இழுக்கு’ என்று மூக்கில் அழுதிருக்கிறது காங்கிரஸ் தரப்பு.

“சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து முதல் ஆளாக நேரடி அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள்... எப்படியிருக்கிறது இந்த அனுபவம்?’’

“1972-லிருந்தே நான் அப்பாவுடன் அரசியலில் ஒன்றாகத்தான் பயணித்துக்கொண்டிருக்கிறேன். பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர்., ராஜீவ் காந்தி, கலைஞர் என அரசியல் ஆளுமைகளுடன் பழகியிருக்கிறேன். அரசியல் எனக்கொன்றும் புதிதல்ல.’’

“தற்போது கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தலைவர்களுடன் பழகிவரும் நீங்கள், இனி அரசியலில் எதிர்க்கட்சியினரை விமர்சித்துப் பேச வேண்டியிருக்குமே?’’

“அப்பா, காங்கிரஸில் இருந்தபோதும்கூட எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா என அனைத்துத் தலைவர்களுடனும் நட்பு கொண்டிருந்தார். ‘அரசியல் வேறு; நட்பு வேறு’ என்ற அப்பாவின் வழியிலேயே நானும் பயணிப்பேன்.’’

நான் பா.ஜ.க-வில் இணைந்ததை 200% அப்பா ஆசீர்வதிக்கிறார்!

“எல்லாம் சரி, இங்கு பல கட்சிகள் இருக்கும்போது பா.ஜ.க-வில் இணைந்ததற்குக் காரணம் என்ன?”

“அப்பாவைப்போலவே, அடித்தட்டிலிருந்து முன்னேறிவந்திருப்பவர் மோடி. குஜராத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோதிலிருந்தே அவரை உன்னிப்பாக கவனித்துவருகிறேன். நான் மட்டுமல்ல.... எங்கள் குடும்பத்திலும் அனைவரும் மோடி ரசிகர்கள்தான். ஒரு பிரதமராக மோடியின் ஆளுமை, பேச்சுத்திறன், கட்சியின் சித்தாந்தம் என அனைத்துமே என்னை ஈர்த்தன. ஆன்மிகத்திலும் எனக்கு நாட்டம் அதிகம். அதனால்தான் பா.ஜ.க-வில் இணைந்தேன்.’’

“குடும்பத்தில் அனைவருமே மோடி ரசிகர்கள்தான் என்கிறீர்கள். ஆனால், ‘நானும் என் மகனும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை’ என்று உங்கள் தம்பி நடிகர் பிரபு ஒதுங்கிக்கொள்கிறாரே?’’

“அவர் ஒன்றும் ஒதுங்கவில்லை. நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில்தான் இருக்கிறோம். அரசியல் சார்ந்த மனவோட்டம் தம்பி பிரபுவுக்கு வரவில்லை... அவ்வளவுதான். மற்றபடி அப்பாவுடன் அரசியலில் நான் பயணித்ததால், பிரபுவைவிட எனக்கு அரசியல் ஆர்வம் அதிகம்.’’

“பாரம்பர்யம்மிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள், அதற்கு நேரெதிரான கொள்கைகொண்ட கட்சியில் இணைந்திருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறதே?’’

“பா.ஜ.க-வின் கொள்கையில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் பா.ஜ.க மதச்சார்புடைய கட்சியாக பார்க்கப்படுகிறது. உண்மையில், பா.ஜ.க-வும் மதச்சார்பற்ற கட்சிதான். எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். பல்வேறு தேர்தல்களில் சிறுபான்மையின மக்களின் கணிசமான வாக்குகள் பா.ஜ.க-வுக்குக் கிடைத்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக அப்பா, காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியே வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. தவிர, ‘பா.ஜ.க-வில் இணைவது என் தனிப்பட்ட விருப்பம்.’’

“ராம்குமார் பா.ஜ.க-வில் இணைவது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், சிவாஜி ரசிகர்களையும் பா.ஜ.க-வில் இணைத்திருக்கிறீர்களே?’’

“நான் பா.ஜ.க-வில் இணைவதற்கு முன்பாகவே சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் ஆங்காங்கே அந்தக் கட்சியில் இணைந்துவிட்டார்கள். யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. ‘பா.ஜ.க-வில் இணைய விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டத் தலைமையகத்தில் சென்று சேர்ந்துகொள்ளுங்கள்’ என்று மட்டும்தான் சொன்னேன்.’’

நான் பா.ஜ.க-வில் இணைந்ததை 200% அப்பா ஆசீர்வதிக்கிறார்!

“ `காமராஜரைக் கொல்ல முயன்ற கூட்டத்தின் பின்னணியில் செயல்படும் பா.ஜ.க-வில் ராம்குமார் சேரலாமா?’ என்றெல்லாம் சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் சந்திரசேகரன் விமர்சித்திருக்கிறாரே?”

“அப்படியொரு சம்பவம் நடந்ததா என்பதே எனக்குத் தெரியாது. சிவாஜி ரசிகர் மன்றத்தில், சந்திரசேகரன் உறுப்பினரே இல்லை. ‘சிவாஜி பேரவை’ என்று அவராக ஓர் அமைப்பை நடத்திவருகிறார். அந்த அமைப்புடன் சிவாஜி ரசிகர் மன்றத்துக்கோ, எங்கள் குடும்பத்தினருக்கோ எந்தச் சம்பந்தமும் கிடையாது. அதேசமயம், இது ஜனநாயக நாடு... யார் வேண்டுமானாலும் கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. இதற்காக அவர்மீது எனக்குக் கோபமும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக திருநீறு பூசிக்கொள்வது, ருத்ராட்சம் அணிவது, புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வது என்று அப்பாவுக்கு ஆன்மிக நம்பிக்கை அதிகம். ‘நான் 200 சதவிகிதம் இந்து’ என்று பேட்டியே கொடுத்திருக்கிறார். அதேசமயம், மாற்று மதங்களின்மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். நான் பா.ஜ.க-வில் இணைந்ததை அதே 200 சதவிகிதம் ஆசீர்வதிக்கிறார் அப்பா!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு