Published:Updated:

``மத்திய அரசின் காதுகளுக்கு அம்பானி, அதானி கோரிக்கை மட்டுமே கேட்கிறது" - சு.வெங்கடேசன் எம்.பி.

ரயில்மறியல்

``மத்திய அரசின் காதுகளுக்கு கார்ப்பரேட்டுகளான அம்பானி, அதானியின் கோரிக்கைகள் மட்டும்தான் கேட்கும். அதை நிறைவேற்றுவதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது." - சு.வெங்கடேசன் எம்.பி.

``மத்திய அரசின் காதுகளுக்கு அம்பானி, அதானி கோரிக்கை மட்டுமே கேட்கிறது" - சு.வெங்கடேசன் எம்.பி.

``மத்திய அரசின் காதுகளுக்கு கார்ப்பரேட்டுகளான அம்பானி, அதானியின் கோரிக்கைகள் மட்டும்தான் கேட்கும். அதை நிறைவேற்றுவதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது." - சு.வெங்கடேசன் எம்.பி.

Published:Updated:
ரயில்மறியல்

`குட்டி ஜப்பான்’ என்றழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியும், அச்சுத்தொழிலும் பிரதானமாக நடந்துவருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் தொழில் நகரத்தில் முன்னணியிலுள்ள சிவகாசியில் மக்கள் அடர்த்தியும் அதிகம். எனவே, இங்குள்ளவர்கள் வேலை காரணமாகவும், தொழில்ரீதியாகவும் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தைச் சார்ந்தே இயங்கிவருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு முன்னர், தென்காசி, சிவகாசி, மதுரை வழித்தடத்தில் கொல்லம்-சென்னை, சென்னை-கொல்லம் இடையே விரைவு ரயில் போக்குவரத்தை மத்திய அரசு தொடங்கிவைத்தது.

போராட்டம்
போராட்டம்

அதுவரையில், வியாபாரத்துக்காகவும் போக்குவரத்துக்காகவும் பொதிகை அதிவிரைவு ரயிலை மட்டுமே நம்பியிருந்தவர்கள் கொல்லம்-சென்னை விரைவு ரயிலைப் பயன்படுத்தத் தொடங்கினர். கொல்லத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்வதுபோல, மறுமார்க்கத்தில் கொல்லம் நோக்கி நள்ளிரவு நேரத்தில் சிவகாசிக்கு வரும் ரயிலும் நின்று சென்றது. இதனால் வியாபாரரீதியாகவும் சிவகாசியைச் சேர்ந்தவர்கள் கேரள மாநிலத்துக்கு கொல்லம் விரைவு ரயிலில் சரக்குகளை அனுப்பிவந்தனர். ஆனால், கொரோனாவுக்குப் பிறகு ரயில் சேவையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக சென்னை-கொல்லம் விரைவு ரயிலுக்கான சிவகாசி நிறுத்தம் பறிக்கப்பட்டது. இதனால் சிவகாசியைச் சேர்ந்த பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கைது
கைது

சென்னையிலிருந்து சிவகாசி வரும் பயணிகள் நள்ளிரவில் விருதுநகர் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல, சிவகாசியிலிருந்து கேரள மாநிலம் செல்லவேண்டிய பல லட்சக்கணக்கான மதிப்புள்ள சரக்குகளையும் ரயில் மூலமாக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில் பயணிகள்‌ நல சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனவே சென்னை - கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்வதை ரத்துசெய்து வெளியிட்ட அறிவிப்பை தென்னக ரயில்வே திரும்பப் பெற வேண்டும். மீண்டும் பழையபடியே சென்னை - கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்பினரும் மத்திய அரசை வலியுறுத்திவந்தனர்‌. இது தொடர்பாக விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர், மத்திய ரயில்வே துறை அமைச்சரிடமும், மக்களவையிலும் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை அதற்கு, மத்திய அரசு எந்த பதிலும் தராததால், அனைத்துக் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் 22-ம் தேதி சிவகாசியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மாணிக்கம் தாக்கூர் எம்.பி அறிக்கை வெளியிட்டார். அதன்படி, சிவகாசியில் ரயில் போராட்டம் நடைபெற்றது. இதில் சு.வெங்கடேசன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக்கட்சியினர், வியாபார அமைப்புகள், ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறே நடந்துவந்த போராட்டக்காரர்கள் திடீரென ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, அனுமதியின்றி ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மாணிக்கம் தாக்கூர் எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் உட்பட 300 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி., "கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக்கூட மத்திய அரசு நிறைவேற்றத் தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தமட்டில் ரயில் நிலையம், ரயில் என எல்லாவற்றையும்கூட தனியாருக்கு எழுதிக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ரயில் நிலையத்தில் வண்டி நின்று செல்ல அனுமதி கேட்டால் மட்டும் செய்ய மாட்டார்கள். மத்திய அரசின் காதுகளுக்கு கார்ப்பரேட்டுகளான அம்பானி, அதானியின் கோரிக்கைகள் மட்டும்தான் கேட்கும். அதை நிறைவேற்றுவதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது. சாதாரண மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டார்கள்" என்றார்.