Published:Updated:

``பாஜக-வுக்கும், ஆர்எஸ்எஸ்-ஸுக்கும் நன்றி; அவர்களை குருவாக கருதுகிறேன்"- ராகுல் காந்தி சொல்வதென்ன?

ராகுல் காந்தி

``பாதுகாப்புக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் அவர்கள் பிரச்னையைக் குறிவைக்கிறார்கள்." - ராகுல் காந்தி

``பாஜக-வுக்கும், ஆர்எஸ்எஸ்-ஸுக்கும் நன்றி; அவர்களை குருவாக கருதுகிறேன்"- ராகுல் காந்தி சொல்வதென்ன?

``பாதுகாப்புக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் அவர்கள் பிரச்னையைக் குறிவைக்கிறார்கள்." - ராகுல் காந்தி

Published:Updated:
ராகுல் காந்தி

ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை 100 நாள்களுக்கு மேலாக 9 மாநிலங்களைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது ஒரு சின்ன இடைவெளி எடுத்திருக்கும் யாத்திரை ஜனவரி 3-ல் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் தொடங்குகிறது.

இதுநாள் வரையில் பெரிய அளவில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் நடந்துகொண்டிருந்த யாத்திரையில் கடந்த சில நாள்களாக, பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்ட, பதிலுக்கு மத்திய துணை ராணுவப் படையோ ராகுல் காந்தி தான் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாகக் கூறிவருகிறது. இந்த நிலையில் பா.ஜ.க-வுக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் நன்றி சொல்ல விரும்புவதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்
பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்
ட்விட்டர்

டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களுடனான உரையாடலில் புத்தாண்டு வாழ்த்தோடு ஆரம்பித்த ராகுல் காந்தி, ``நான் இதை ஆரம்பித்தபோது, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான சாதாரண யாத்திரையாகத்தான் எடுத்துக்கொண்டேன். பின்னர் இந்த யாத்திரைக்கென்று குரல், உணர்ச்சி இருப்பதை மெதுவாக நாங்கள் புரிந்துகொண்டோம். இந்த இடத்தில் பா.ஜ.க-வுக்கும், ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் எந்த அளவுக்கு அதிகமாகக் குறிவைக்கப்படுகிறோமோ, அந்த அளவுக்கு அது நமக்கு உதவுகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அவர்கள் எங்களை இன்னும் கடுமையாகத் தாக்கவேண்டும் என விரும்புகிறேன். காங்கிரஸின் சித்தாந்தத்தைப் புரிந்துகொள்ள அது உதவும். அதோடு அவர்களை என்னுடைய குருவாகக் கருதுகிறேன். அவர்கள் எனக்குப் பாதை காண்பித்து, எதையெல்லாம் செய்யக்கூடாது என்று பயிற்சியளிக்கின்றனர். பாரத் ஜோடோ யாத்திரையின் கதவுகள் அனைவருக்கும் திறந்திருக்கும். எங்களுடன் மக்கள் இணைவதை நாங்கள் தடுக்கப்போவதில்லை. அகிலேஷ் யாதவ், மாயாவதி மற்றும் பலரும் `அன்பின் இந்துஸ்தான்' வேண்டும் என விரும்புகிறார்கள். எங்களுக்குள் சில சித்தாந்த உறவுகள் இருக்கின்றன" என்று கூறினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தொடர்ந்து மத்திய ராணுவப் படை குற்றச்சாட்டு குறித்து பேசிய ராகுல் காந்தி, ``குண்டு துளைக்காத வாகனத்தில் நீங்கள் செல்லுங்கள் என உள்துறை அமைச்சகம் கூறுகிறது. என்னால் எப்படி அது முடியும். யாத்திரையில் நான் நடைபயணமாக செல்லவேண்டும். பாதுகாப்புக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் அவர்கள் பிரச்னையைக் குறிவைக்கிறார்கள்" என்றார். டீ-ஷர்ட் குறித்து பேசும்போது, ``டி-ஷர்ட்டால் ஏன் இவ்வளவு தொந்தரவு... நான் ஸ்வெட்டர் அணிவதில்லை. ஏனெனில் குளிரால் எனக்கு பயமில்லை. குளிருவதாக உணரும்போது நான் ஸ்வெட்டர் அணியலாம் என்றிருக்கிறேன்" என்கிறார் ராகுல் காந்தி.