Published:Updated:

``அந்தச் சம்பவத்தை இன்னும் மறக்கமுடியல; முதல்வர் மேல நம்பிக்கை இருக்கு!" - ஸ்னோலின் தாயார் உருக்கம்

செய்தியாளர் சந்திப்பு

``4 பேரை இழந்தவர்கள் வேதனையுடன் இருக்கிறோம். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்வர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்." - ஸ்னோலின் தாயார்

``அந்தச் சம்பவத்தை இன்னும் மறக்கமுடியல; முதல்வர் மேல நம்பிக்கை இருக்கு!" - ஸ்னோலின் தாயார் உருக்கம்

``4 பேரை இழந்தவர்கள் வேதனையுடன் இருக்கிறோம். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்வர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்." - ஸ்னோலின் தாயார்

Published:Updated:
செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையின்படி தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

இந்தக் கூட்டமைப்பினர் மதுரையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இதில் துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் தாயார் வனிதாவும் கலந்துகொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம்மிடம் பேசிய தமிழ் மீனவர் கூட்டமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் ரஜினி, ``சட்டப்பேரவையில் அருணா ஜெகதீசன் அறிக்கையையும், அதன்மீதான நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்யவேண்டும். அருணா ஜெகதீசன் அறிக்கை வெளிவந்தது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வழக்கறிஞர் ரஜினி
வழக்கறிஞர் ரஜினி

ஜெயக்குமார் சமூக பொறுப்பில்லாமல் பேசிவருகிறார். இதுவரை அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்களிலேயே முறையாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலைத் தந்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்துக்கு நன்றி.

விசாரணை ஆணையத்தில் 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அதில் 1,048 பேர் நேரிலும், மீதமுள்ளவர்கள் ஆவணங்கள் மூலமும் விளக்கமளித்தனர். அப்போதைய கலெக்டராக இருந்த வெங்கடேஷ், எஸ்.பி மகேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 3,000 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை கடந்த மே 1-ம் தேதி நீதிபதி அருணா ஜெகதீசன் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தாக்கல்செய்தார்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

இந்த நிலையில்தான் விசாரணை அறிக்கையில் உள்ள சில விஷயங்கள் வெளி வந்துள்ளன. இதில் கலெக்டர், ஐ.ஜி உள்ளிட்ட 17 பேர்தான் துப்பாக்கிச்சுடு சம்பவம் நடக்க காரணம் என்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. போராட்டம் நடத்திய மக்கள் நிராயுதபாணிகள் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அறிக்கையிலுள்ள விஷயங்கள் எப்படி வெளியானது என்று ஆராய்வது முக்கியமல்ல. அதிலுள்ள உண்மைகளை வெளியே கொண்டு வருவதுதான் முக்கியம்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியது போல சட்டப்பேரவையில் அறிக்கை மற்றும் அறிக்கைமீதான நடவடிக்கை என இரண்டையும் சேர்த்து தாக்கல் செய்யவேண்டும். வேதாந்தா நிறுவனத்தை தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். பயங்கரவாத அமைப்பு புகுந்துள்ளதாகக் கூறி துப்பாக்கிச்சூட்டிற்கு ஆதரவாகப் பேசி திசை திருப்பிய நடிகர் ரஜினிகாந்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால், அருணா ஜெகதீசன் அறிக்கையில் பயங்கரவாத ஊடுருவல் எதுவுமில்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்றார்.

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட ஸ்னோலின் தாயார் வனிதா பேசும்போது, ``இன்னும் என்னால் நடந்ததை மறக்க முடியவில்லை. இந்த கொடூரச் சம்பவத்துக்கு காரணமான 16 பேர்மீதும் நடவடிக்கை எடுக்க எடப்பாடி அரசிடம் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். கனிமொழியும் உறுதி அளித்தார். அவர்கள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். 14 பேரை இழந்தவர்கள் வேதனையுடன் இருக்கிறோம். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்வர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எத்தனை கோடி இழப்பீடு கிடைத்தாலும் ஈடு செய்ய இயலாது. தமிழ்நாடு அரசு அருணா ஜெகதீசன் அறிக்கையை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும். தவறு செய்த அனைவரும் தண்டனை அனுபவிக்க வேண்டும்" என்றார்.