Published:Updated:

காரைக்கால்: ``அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளாகிறது..!" - காந்தி சிலை அமைக்க வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்

காந்தி கிணறு

75-வது சுதந்திரதின நாளை கொண்டாடவிருக்கும் இந்தத் தருணத்திலாவது காந்தி சிலை அமைத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

காரைக்கால்: ``அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளாகிறது..!" - காந்தி சிலை அமைக்க வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்

75-வது சுதந்திரதின நாளை கொண்டாடவிருக்கும் இந்தத் தருணத்திலாவது காந்தி சிலை அமைத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

Published:Updated:
காந்தி கிணறு

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே சுரக்குடியில் காந்தி கிணறு அமைந்திருக்கும் பகுதியில் காந்தி சிலை நிறுவ அடிக்கல் நாட்டப்பட்டு, 5 ஆண்டுகளாகியும் சிலை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 75-வது சுதந்திரதின நாளை கொண்டாடவிருக்கும் இந்தத் தருணத்திலாவது காந்தி சிலை அமைத்திட உடனடி  நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென சமூக  ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

காந்தி கிணறு
காந்தி கிணறு

திருநள்ளாறு அருகேயுள்ள சுரக்குடி கிராமத்துக்கு 1935-ம் ஆண்டு காந்தி வருகை தந்தார். அந்தக் காலக்கட்டத்தில் இந்தப் பகுதியிலிருந்த ஒரு கிணற்றிலிருந்து குறிப்பிட்ட சமூகத்தினர் நீர் எடுக்கக்கூடாது என்ற பாகுபாடு நிலவியது. இதையறிந்த காந்தியடிகள் பகுதி மக்களிடம் கலந்துபேசி, அனைத்து  தரப்பினரும் பயன்படுத்தும் வகையில்  அந்தக் கிணறை கிராம மக்களுக்கு அர்ப்பணித்தார். 

அன்றுமுதல், அது 'காந்தி கிணறு' என்றழைக்கப்பட்டுவருவதுடன், காரைக்காலின் அடையாளமாகவும் திகழ்கிறது.

வெறும் கிணறு மட்டும் இருந்த இடம், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் உதவியுடன், ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டு நலப்பணித திட்ட மாணவர்களால் புனரமைக்கப்பட்டு, கிணற்றைச் சுற்றி சுற்றுச்சுவருடன் கூடிய தோட்டம் அமைக்கப்பட்டது. இதை 2004-ம் ஆண்டு டிச.,11-ம் தேதி அப்போதைய புதுச்சேரி அமைச்சர் மறைந்த சந்திரகாசு திறந்துவைத்தார். அதன்பின்பு காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி கிணறு உள்ள பகுதியில் அரசின் சார்பில் மார்பளவுள்ள காந்தி சிலை நிறுவ முடிவுசெய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு அக்.,3-ம் தேதி அப்போதைய புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் அடிக்கல் நாட்டினார். மேலும், ``இந்தக் கிணற்றிலிருந்து நீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து, மக்களுக்கு குடிநீராக விநியோகம் செய்வதற்கான அமைப்பு ஏற்படுத்தப்படும். பொதுப்பணித்துறை மூலம் இங்கு மாணவர்களுக்கான நூலகம் அமைக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதுவரை சிலை நிறுவுவது உட்பட எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த இடமும் பராமரிப்பின்றி காணப்படுகிறது.

நாட்டின் 75-வது சுதந்திர தின பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும்  நிலையில், காந்தி சிலையை நிறுவி, காந்தி கிணற்றை காரைக்காலின் அடையாளம் ஆக்குவதற்கான செயல்பாடுகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என வரலாற்று ஆர்வர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

வேளாண் கல்லூரி பேராசிரியர் ஆனந்தகுமார்
வேளாண் கல்லூரி பேராசிரியர் ஆனந்தகுமார்

இது குறித்து இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவரும், வேளாண் கல்லூரி பேராசிரியருமான ஆனந்தகுமாரிடம் பேசினோம். ``காரைக்கால் மாவட்டத்தில் பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றுடன் தொடர்புடைய ஒரே அடையாளமாக சுரக்குடியில் உள்ள காந்தி கிணறு அமைந்திருக்கிறது.  திருப்பட்டினம்  பூங்காவிலுள்ள  காந்தி சிலையைத் தவிர மாவட்டத்தில் வேறெங்கும் காந்திக்கு சிலை இல்லை. காந்தி பெயரில் சாலையும் இல்லை. எனவே காந்தி கிணறு அமைந்திருக்கும் இடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, இங்கு விரைந்து காந்தி சிலையை நிறுவவேண்டும். அந்த இடத்தையும், கிணற்றையும் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்த இடத்துக்கும் சென்றுவரும் வகையில் மாவட்ட இணையதளத்தில் இந்தக் கிணற்றின் வரலாற்றுக் குறிப்புகளை புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்டத்தின முக்கிய வரலற்றுச் சின்னங்களுள் ஒன்றாக காந்தி கிணற்றை மேம்படுத்தி அடையாளப்படுத்த வேண்டும்" என்றார்.