Published:Updated:

புதுச்சேரி: 8-வது நாளாகத் தொடரும் போராட்டம்! - ஆளுநர் கிரண் பேடிக்காகக் காத்திருக்கும் அமைச்சர்

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி
புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி

``புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 31 கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளுக்கு அனுமதி தரும் வரை சட்டப்பேரவை வளாகத்தில் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவேன்” என்று கூறி இன்று எட்டாவது நாளாக அமைச்சர் கந்தசாமி போராட்டத்தைத் தொடர்கிறார்.

புதுச்சேரி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியின் முதல்வராகப் பதவியேற்றார். இருவருக்குமிடையே அன்று தொடங்கிய அதிகார மோதல் நான்கரை வருடங்கள் கடந்தும் முடிவுக்கு வரவில்லை. `மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் ஜனவரி 8-ம் தேதி மறைமலை அடிகள் சாலையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் நான்கு நாள்கள் தர்ணா போராட்டத்தைத் தொடங்கிய முதல்வர் நாராயணசாமி, பொங்கல் பண்டிகையையொட்டி மூன்றாவது நாளே போராட்டத்தை முடித்தார். மேலும் அடுத்தடுத்த கட்டங்களில் போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்தார்.

கிரண் பேடி
கிரண் பேடி

ஆனால் அன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 15 கோப்புகளுக்கு அனுமதி தரும்வரை போராட்டம் நடத்துவேன் என்று கூறி, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் அமர்ந்தார் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி. அதற்கடுத்து `புதுச்சேரி பஞ்சாலைகள் மற்றும் சர்க்கரை ஆலையைத் திறக்க வேண்டும். மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். ரேஷன்கடை ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளையும் சேர்த்து 36 கோரிக்கைகள் குறித்தும் நேரில் சந்தித்து விவாதிக்க வேண்டுமென்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடியிடம் அனுமதி கேட்டார். அந்தக் கடிதத்துக்கு பதிலளித்த கிரண் பேடி, ``அமைச்சர் குறிப்பிட்ட விஷயங்கள் விதிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட செயலர்கள் அலுவலகங்களில் பரிசீலனையில் உள்ளன. இது குறித்து உங்களிடம் விளக்கிக் கூற, தலைமைச் செயலரைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அமைச்சருக்கும், அவரின் குடும்பத்துக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார்.

ஏழாவது நாளான நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் தனது அறையிலேயே குளித்து, உணவருந்தி வராந்தாவில் சேரில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்கிறார் அமைச்சர் கந்தசாமி. இதற்கிடையில் தொடர் போராட்டத்திலிருக்கும் அவருக்கு ஆதரவாக அனைத்துப் பட்டியலின, பழங்குடி அமைப்புகள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தின. அந்தப் போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தநிலையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைத் தொடர்புகொண்டு, ‘36 கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளுக்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி சட்டப்பேரவையில் போராட்டத்தில் அமர்ந்திருக்கிறார். நீங்கள் அனுமதி தரும்வரை போராட்டத்தைத் தொடர்வேன் என்றும் கூறியிருக்கிறாரே..?’ என்ற கேள்வியை முன்வைத்தோம்.

புதுச்சேரி: `பீரங்கியே வந்தாலும் அஞ்ச மாட்டோம்!’ - கிரண் பேடிக்கு எதிராகக் கொதித்த நாராயணசாமி

அதற்கு, ``எங்கள் அலுவலகத்தில் எந்தக் கோப்பும் நிலுவையில் இல்லை என்பதை உடனுக்குடன் அவருக்குத் தெரிவித்திருக்கிறோம்” என்றவரிடம், ஆனால் அமைச்சர் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டு உங்கள் அழைப்புக்காகக் காத்திருக்கிறாரே ? என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு, ``அது எனக்குத் தெரியவில்லை. அனைத்துக் கோப்புகளுக்கும் உடனுக்குடன் நான் பதிலளித்துவிட்டேன். எந்தக் கோப்பும் எனது அலுவலகத்தில் நிலுவையில் இல்லை. அனுமதி அளிக்கப்படும் கோப்புகளின் விவரங்களை ஒவ்வொரு வாரமும் தெரியப்படுத்திவிடுகிறேன். நான் உறுதியாகக் கூறுகிறேன், அவர் கடிதம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக பதிலளித்திருக்கிறேன்” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு