Election bannerElection banner
Published:Updated:

வேலூர்: முதல்வரின் வாழ்த்து; குடியரசு தினத்தில் பதக்கம்! - சுயேச்சையாகக் களமிறங்கும் சமூக சேவகர்

தினேஷ் சரவணன்
தினேஷ் சரவணன்

முதல்வரால், சமூக சேவகர் என்று பாராட்டப்பட்ட ஐடி இளைஞர் தினேஷ் சரவணன், வேலூர் தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்க முடிவு செய்திருக்கிறார்.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியை அடுத்துள்ள ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் சரவணன். 31 வயதான தினேஷ், ஓர் ஐடி நிறுவன ஊழியர். சமூக சேவையில் ஆர்வம்கொண்ட தினேஷ், தனது பணி நேரம் போக, வார இறுதி நாள்களில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். நாளடைவில், தினந்தோறும் களத்தில் இறங்கி தனது சேவையைத் தொடர்ந்துவருகிறார்.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்களைத் தேடிச் சென்று மூன்று மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வழங்குவது, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு, உடை, போர்வை போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கொடுத்து அரவணைப்பது எனச் செயல்படுகிறார்.

அதுமட்டுமல்ல, வீடு வீடாகச் சென்று மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி, மரம் வளர்ப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்துவருகிறார். இளைஞர்களைத் திரட்டி தூர்வாரப்படாமல்விடப்பட்ட நீர்நிலைகளை மறு சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுவருகிறார்.

முதல்வரின் ட்விட்டர் வாழ்த்து
முதல்வரின் ட்விட்டர் வாழ்த்து

காட்பாடியை அடுத்துள்ள கரிகிரிப் பகுதியில், நாடோடி இனக் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியைப் புகுத்தும் நோக்கத்தில், தற்காலிகப் பள்ளிக்கூடம் ஒன்றையும் அமைத்துக்கொடுத்திருக்கிறார்.

கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கணவரை இழந்து குழந்தைகளுடன் வாழும் பெண்களின் எதிர்காலம் சிறக்கவும், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யவும் உதவி செய்திருக்கிறார். லட்சக்கணக்கில் செலவிட்டு, இரண்டு அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்.

கொரோனா பொது முடக்கத்தின்போது, வாழ்வாதாரம் இழந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கி உதவியிருக்கிறார். அப்போதுதான் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பார்வைக்கு தினேஷின் பணிகள் சென்றடைந்தன. தனது நல உதவிகள் குறித்து தினேஷ் சரணவன் ட்வீட் செய்த பதிவை ‘ரீ-ட்வீட்’ செய்து முதலமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

`ஐடி நிறுவனத்தில் வேலை புரியும்போதும், கிடைக்கிற நேரத்தில் கடைக்கோடி மக்களைத் தேடி உதவுதல், மரக்கன்று நடுதல் எனப் பல்வேறு சேவைகள் செய்வதை சமூக வலைதளம் மூலம் அறிந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்...‘ என்று அந்த வாழ்த்தில் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து, இந்த ஆண்டு குடியரசு தினத்தின்போது, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தினேஷ் சரவணனை கௌரவித்து சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கினார்.

தினேஷ் சரவணனை கௌரவித்த வேலூர் கலெக்டர்
தினேஷ் சரவணனை கௌரவித்த வேலூர் கலெக்டர்

தனது தொடர் சேவையால், வேலூர் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார் தினேஷ். மேலும், தினேஷ் சட்டமன்றத் தேர்தலில் தங்களது தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலரும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

எந்தவோர் அரசியல் கட்சியையும் சாராமல் சுயேச்சையாகப் போட்டியிட தற்போது முடிவெடுத்திருக்கிறார் தினேஷ். இவ்வளவு ஏன்... தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார்.

தேர்தலில் போட்டியிடும் தனது முடிவு குறித்து நம்மிடம் பேசிய தினேஷ் சரவணன், ``‘நான், சாதாரண பால் வியாபாரியின் மகன். எனது சம்பளத்திலிருந்து பாதித் தொகையிலும், சமூக வலைத்தளங்களில் என்னைத் தொடரும் நண்பர்களின் உதவியுடனும், மக்களுக்கு இயன்ற சேவையைச் செய்கிறேன். விளம்பரதுக்காகவோ, பணம் சம்பாதிக்கவோ தேர்தலில் போட்டியிடும் முடிவை நான் எடுக்கவில்லை. தற்போது இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் எங்கள் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. ‘நீங்க நில்லுங்க தம்பி ஓட்டுப் போடுகிறோம்’ என்று மக்கள் பேரன்புடன் வரவேற்பதால், தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறேன். என் சேவைமீது களங்கம் ஏற்படுத்தும் வகையில், யாரும் அரசியல் சாயத்தைப் பூச வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’’ என உத்வேகத்துடன் பேசுகிறார் தினேஷ் சரவணன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு