பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஐ.டி விங் அலப்பறைகள்!

ஐ.டி விங் அலப்பறைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.டி விங் அலப்பறைகள்!

காஷ்மீர் வொண்டர் ஃபுல் காஷ்மீர்... காஷ்மீர் பியூட்டி ஃபுல் காஷ்மீர்...

ள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி விளையாட்டு காட்டுவது, பெரியாரை இழிவுபடுத்தித் தமிழர்களைச் சீண்டுவது என பி.ஜே.பி, ஐ.டி விங்கின் `சீரியஸ் திருவிளையாடல்கள்’ மட்டுமே தமிழ்கூறு நல்லுலகில் பிரபலம். ஆனால், வடக்கும் தெற்குமாக மொத்த இந்தியாவும் பி.ஜே.பி, ஐ.டி விங்கை `வெச்சு செய்த சம்பவங்கள்’ ஏராளம். அதுவும் குறிப்பாக ட்விட்டரில் பி.ஜே.பி ஐ.டி விங்கின் செயல்பாடுகள் பலவும் `குபீர்’ ரகமாக இருக்கும். அதிலிருந்து சில `Rofl இன்னிங்ஸை’ மட்டும் இங்கே பார்ப்போம்.

ஐ.டி விங் அலப்பறைகள்!

தீராத அட்மின் பஞ்சாயத்து

கட்சி அக்கவுன்ட்கள், கட்சித் தலைவர்கள் அக்கவுன்ட்கள் என எல்லா இன்டர்நெட் அக்கவுன்ட்களுக்கும் பொறுப்பாளர்கள் இந்த `ஆல் இன் ஆல்’ அட்மின்கள்தான். பி.ஜே.பி, காங்கிரஸ் தொடங்கி சின்னச்சின்னக் கட்சிகள் வரைக்கும் இன்றைக்கு இதுதான் நிலை. தங்கள் கணக்குகளைத் தாங்களே நிர்வகிக்கும் கட்சித் தலைவர்கள் இங்கு மிகமிகக் குறைவு. எனவே, இணையத்தில் ஒரு தலைவரின் அல்லது கட்சியின் வீச்சு அதிகரிக்க வேண்டுமானால் அதற்கு இந்த அட்மின்களின் கைங்கர்யம் மிக முக்கியம். ஒரே ஒரு எழுத்துப் பிழையோடு இவர்கள் ட்வீட் போட்டால்கூட அன்றைக்கு அது `கலாய் மெட்டீரியல்’ ஆகிவிடும். அப்படிப்பட்ட ட்வீட் ஒன்று கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் அக்கவுன்ட்டிலிருந்து வந்து விழுந்தது. அது, ‘Congress misuses Article 356 several times… but Modi is destroying institutions: PM’. `யாரு சாமீ நீங்க..?’ என அட்மினை நெட்டிசன்ஸ் கலாய்க்க, எப்படியும் ட்வீட் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் அந்த ட்வீட் நீக்கப்படவில்லை.

இதேபோல “பாலகோட் தாக்குதல் அன்று வானிலை கொஞ்சம் சரியாக இல்லை. எனவே வேறொரு நாளுக்குத் திட்டத்தை மாற்றலாமா’’ என நிபுணர்கள் சொன்னார்கள். ஆனால், மேகங்கள் இருப்பதால், நம் விமானங்களை ரேடார் கண்டுபிடிக்காது என நான்தான் அன்றைக்கே தாக்குதல் நடத்தச் சொன்னேன்” என்று ஒரு நேர்காணலில் தன்னுடைய `அறிவியல் ஆர்வத்தை’ மோடி வெளிப்படுத்த, அதை அப்படியே ட்வீட்டாகப் போட்டது குஜராத் பி.ஜே.பி. அடுத்த சில நொடிகளிலேயே விவகாரம் `சம்பவமாக’ மாறவே உடனே அதையும் டெலிட் செய்தது. சில மாதங்களுக்கு முன்பு என்.ஆர்.சி குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார் அமித் ஷா. அதுதொடர்பான ட்வீட்டையும் அண்மையில் டெலிட் செய்தனர். இப்படிப் பொங்குவதும், பின் பல்பு வாங்குவதும் இங்கிருக்கும் சிவகங்கை அட்மின் மட்டுமல்ல, மொத்த இந்தியாவிலும் இதே கதைதான்.

ஐ.டி விங் அலப்பறைகள்!

காப்பி பேஸ்ட் கதாகாலட்சேபங்கள்

‘`காப்பி பேஸ்ட் ஆப்ஷன் மட்டும் ஒருநாள் வேலை செய்யவில்லை என்றால், அன்றைக்கு எந்த பி.ஜே.பி தலைவரின் அக்கவுன்ட்டிலிருந்தும் ஒரு ட்வீட்கூட வராது” என இன்னும் கன்ஹையா குமார் எங்கும் பேசவில்லைதான். ஆனாலும், அதுதான் உண்மை. அந்த அளவுக்கு காப்பி பேஸ்ட் ஆப்ஷனிலேயே காலம் நகர்த்துகிறது அக்கட்சியின் ஐ.டி விங். இதற்கு செமத்தியான உதாரணம், கடந்த ஆண்டு மத்திய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனின் அக்கவுன்ட்டில் நடந்த சம்பவம்தான். ஒவ்வொருநாளும், ஒவ்வொரு மணி நேரமும், எந்த ட்வீட்டை எந்த அக்கவுன்ட்டில் ட்வீட் போடவேண்டும், அதில் எதையெல்லாம் டிரெண்ட் செய்யவேண்டும் போன்ற விஷயங்கள் அனைத்தையும் ஒரு கூகுள் டாக்குமென்ட்டில் `சேவ்’ செய்து வைப்பது அவர்களின் வழக்கம். பின்னர், தகுந்த நேரத்தில் குறிப்பிட்ட ட்வீட்களை மட்டும் காப்பி பேஸ்ட் செய்து ட்வீட் செய்வார்கள். இந்த டாக்குமென்ட்டின் அக்ஸஸ் எப்படியோ ஆல்ட் நியூஸின் நிறுவனரான பிரதிக் சின்ஹாவுக்குக் கிடைக்க, உள்ளே புகுந்து நிறைய ட்வீட்களை எடிட் செய்துவிட்டார். பின்னர் இதை ட்வீட் செய்த அட்மின்கள் யாரும் அதில் என்ன இருக்கிறது என்றுகூடப் படிக்காமல் ட்வீட் செய்ய, அந்த அபத்த ட்வீட்கள் அத்தனையும் அப்படியே பொன்னாரின் அக்கவுன்ட்டில் வந்து விழுந்தன. கூடவே அஸ்ஸாம் மாநில பி.ஜே.பி-யும் அவற்றைப் படித்துப் பார்க்காமல் ட்வீட் செய்தது. கூடவே பிற பா.ஜ.க ஆதரவாளர்களும் கைகோக்க ட்விட்டரில் சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் நிறைய ட்வீட்கள் வந்துவிழுந்தன. `என்னடா ஆச்சு இவங்களுக்கு?’ என நெட்டிசன்ஸ் முழிக்கவே, பின்னர்தான் நடந்த சம்பவங்களை விவரித்தார் பிரதிக் சின்ஹா. இப்படி `நண்பன்’ ஸ்ரீவத்சன்களையே தூக்கிச் சாப்பிட்ட சாதனைகளும் இவர்கள் பட்டியலில் அடக்கம்.

சரி, இவர்கள்தான் இப்படி யென்றால் இவர்களால் பிரபலங்கள் படும் பாடும் அதிகம். தீபாவளிக்கு முன்பு விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு ட்வீட் போட்டிருந்தனர். என்ன சிக்கலென்றால், எல்லாரும் ஒரே ட்வீட்டையே போட்டிருந்தனர். அதிலும், மல்யுத்த வீராங்கனை பூஜா, அவருக்கு அனுப்பப்பட்ட டாக்குமென்ட்டில் இருந்த `Text’ என்பதைக்கூட டெலிட் செய்யாமல் அப்படியே போட்டிருந்தார். இந்தப் பட்டியலில் மேரி கோம், சாய்னா நேவால், பி.வி.சிந்து உள்ளிட்டோரும் அடக்கம். அண்மையில்கூட, தீபிகா படுகோனின் திரைப்படத்தைப் புறக்கணிக்கிறோம் எனச் சொல்லி அந்தப் படத்தின் டிக்கெட்டை கேன்சல் செய்த டிக்கெட்டுகளை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து #Boycottchhapaak என்பதை டிரெண்ட் செய்துகொண்டிருந்தனர். பின்னர் அந்த டிக்கெட்டுகளைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தபோதுதான் அவை அத்தனையுமே ஒரே டிக்கெட்தான் எனத் தெரிந்தது. இப்படி டெக்ஸ்ட்டை அடுத்து இமேஜிலும் தொடர்கிறது இவர்களின் `காப்பி பேஸ்ட் காவியம்.’

நாச்சியப்பன் பாத்திரக் கடை: அத்தியாயம் 2

யுனெஸ்கோ நிஜமாகவே மோடியைச் சிறந்த பிரதமர் என அறிவித்தால்கூட இவ்வளவு சந்தோஷப்படுவார்களா எனத் தெரியவில்லை. ஆனால், ஏதாவது ஒரு வெளிநாட்டுப் பத்திரிகை அல்லது அமைப்பு பாராட்டிவிட்டால் குஷியாகிவிடுவார்கள். கடந்த ஆண்டு அப்படி இரண்டு சம்பவம் நடந்தன. முதலாவது, பிலிப் கோட்லர் விருது.

ஐ.டி விங் அலப்பறைகள்!

இந்த விருது மோடிக்கு அறிவிக்கப்பட்டவுடனேயே எல்லா அமைச்சர்களின் அக்கவுன்ட்களி லிருந்தும் மோடிக்குப் பாராட்டுகள் குவிந்தன. ``சரி, இது என்னதான் விருது?” என்றால், யாருக்கும் தெரியவில்லை. சரி, இந்த விருதை இதற்கு முன்பு யாராவது வென்றிருக்கி றார்களா என்றால் அதுவும் இல்லை. சரி, இந்த விருதுக்காக மோடி எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார் எனக் கேட்டால், அதையும் `ரகசியம்’ என மறுத்து விட்டனர். ஸ்ஸப்பா...!

இதற்கடுத்து `பிரிட்டிஷ் ஹெரால்டு’ என்னும் பத்திரிகை, உலகின் சக்திவாய்ந்த நபராக மோடியைத் தேர்ந்தெடுத்துள்ளது எனச் சொல்லி ஆன்லைனில் ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தனர். அதே அமைச்சர்களின் அக்கவுன்ட்கள்; ஆஹா ஓஹோ பாராட்டுகள். `சரி, இதாச்சும் என்னன்னு சொல்லுங்கய்யா’ என்றால்... ம்ஹூம்! பிறகு நெட்டிசன்ஸ் பிரிட்டிஷ் ஹெரால்டு குறித்துத் தேடினால், அதற்கு ஒரு விக்கிபீடியா பக்கம்கூட இல்லை. ஏதோ, கார்டியன், பிபிசி ரேஞ்சுக்கு இவர்கள் கொடுத்த பில்டப்பிற்கும், அந்தக் கம்பெனிக்கும் துளிகூடத் தொடர்பில்லை. இப்படி வெவ்வேறு ரூபங்களில் இணையத்தில் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது டிரேடுமார்க் நாச்சியப்பன் பாத்திரக்கடை!

ஐ.டி விங் அலப்பறைகள்!

ஒன்பது கிரகங்களும் உச்சம்பெற்ற ஒரே ஐ.டி விங்

உலகத்திலேயே எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் காஷ்மீரில் நடந்த அளவுக்கு இணையம் இப்படி 145 நாள்களுக்கு முடக்கப்பட்டதில்லை. ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றத்தில், பிரிவு 370-ஐ நீக்கப்போவதாக அமித் ஷா அறிவிப்பதற்கு இரு நாள்களுக்கு முன்னரே காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டுவிட்டது. இணையம் துண்டிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர். அரசின் இந்த முடிவுக்குக் காஷ்மீர் மக்களின் பதில் என்னவென்று கூடத் தெரியாத அளவுக்கு அவர்களின் குரல் நசுக்கப்பட்டது. ஆனால், அந்த நேரத்திலும் விடாமல் ஸ்கோர் செய்தது பி.ஜே.பி ஐ.டி விங். #KashmirSupportsModi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து ட்விட்டரில் குறுக்குசால் ஓட்டினர். `அங்கதான் இன்டர்நெட்டே இல்லையே... அவிங்க எப்படியா மோடிக்கு ஆதரவா ட்வீட் போடுவாங்க?’ எனத் தலையில் அடித்துக்கொண்டனர் நெட்டிசன்ஸ். இந்த ஃபார்முலாவை CAA விவகாரத்தில் வடகிழக்கிலும் பயன்படுத்தினர்.

அதை எதுக்கு உருட்டிக்கிட்டு..!

தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் குரல்கள் எழுந்து கொண்டிருக்க, அந்தச் சமயத்தில் சட்டத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டது பி.ஜே.பி. இதற்காக ஒரு எண்ணை அறிவித்து அதற்கு மிஸ்டு காலும் தரச்சொன்னார்கள். இதன்பின் நடந்த ஒவ்வொன்றும் சரவெடிப் பட்டாசு. இந்த எண்ணிற்கு மக்களை மிஸ்டு கால் கொடுக்கவைக்க நைட் ஷிஃப்ட்டெல்லாம் போட்டு வேலைபார்த்திருக்கின்றனர் தாமரையாளர்கள். `செக்ஸ் சாட் பண்ணணுமா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.’, `10 GB இலவச டேட்டா வேணுமா? இதுக்கு கால் பண்ணுங்க’, `6 மாசம் நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஷன் வேணுமா? இதுக்கு கால் பண்ணுங்க’ எனத் தொடர்ச்சியாக ட்விட்டர் முழுக்க டைம்லைனை நிரப்பினர். கடுப்பான நெட்ஃப்ளிக்ஸே, “இதையெல்லாம் நம்பாதீங்க பாஸு” என ரிப்ளை தட்டியது. சரி, இப்படியெல்லாம் செய்து இறுதியாக எத்தனை பேர் அதற்கு மிஸ்டு கால் கொடுத்திருக்கிறார்கள் எனப் பார்த்தால்... ``53 லட்சம் பேர்” என்றார் அமித் ஷா. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பி.ஜே.பி-யின் உறுப்பினர் எண்ணிக்கை என ஜே.பி.நட்டா சொன்னது எத்தனை தெரியுமா? கிட்டத்தட்ட 18 கோடி.

இது பா.ஜ.க-வின் காமெடிக் கதை என்றால் இன்னும் காங்கிரஸ் உட்பட பலப்பல கட்சிகளின் பலப்பல காமெடிகள் இருக்கின்றன. `விடியட்டும் முடியட்டும்’ என `வாய் புளிக்கப் புளிக்க’ ஸ்டாலின் தமிழகத்தில் குறுக்குசால் ஓட்ட, ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனதோ மேற்கு வங்கத்தில். டைம்ஸ் பத்திரிகை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிக்க, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையைத் தீக்கிரையாக்கினர் காங்கிரஸ் தாத்தாக்கள். அவிங்க டுபாக்கூர் 1, இவிங்க டு்பாக்கூர் 2, டுபாக்கூர் 3. அவ்ளோதான் பாஸ் வித்தியாசம். வேறொரு நாள் இவர்களின் காமெடிக் களேபரங்களைப் பார்ப்போம்!