Published:Updated:

`அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்'- 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

முதல்வர் அறிவிப்பு
முதல்வர் அறிவிப்பு

இன்றைய சட்டசபைக் கூட்டத்தொடரில் வடசென்னையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை 110 விதியின் கீழ் அறிவித்தார்.

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி நேரத்துடன் தொடங்கிய இன்றைய கூட்டத்தொடரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அயோத்திதாச பண்டிதரின் 175-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வடசென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழகச் சட்டப்பேரவை
தமிழகச் சட்டப்பேரவை

முதல்வர் சட்டசபையில் பேசும்போது, ``தமிழன், திராவிடன் இந்த இரண்டு சொல்லையும் அடையாளச் சொல்லாக மாற்றியவர்தான் அயோத்திதாச பண்டிதர். 1981-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் `பூர்வ தமிழர்’ என்று பதியச் சொன்னவர் பண்டிதர். 1891-ம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் `திராவிட மகாஜன சபை.’ 1907-ம் ஆண்டு 'ஒரு பைசா தமிழன்' என்ற இதழைத் தொடங்கி அதையே `தமிழன்’ என்று பெயர் மாற்றி நடத்திவந்தார். பூர்வீக சாதி பேதமற்ற திராவிடர்கள் என்று அழைத்தவர் அவர். அதனால்தான் தமிழன், திராவிடம் ஆகிய இரண்டு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தினார். அவர் போட்டுக்கொடுத்த பாதையில்தான் தமிழ்நாடு அரசியல் செயல்பட்டுவருகிறது. எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப் புலவர், சிறந்த செயற்பாட்டாளர், சளைக்காத போராளி எனப் பன்முக ஆற்றலைக்கொண்டவர்தான் அயோத்திதாச பண்டிதர்" என்றார்.

``உதயநிதி புகழாரம்  முதல் துரைமுருகன் பெருமிதம் வரை" -  சட்டசபை ஹைலைட்ஸ்!
அயோத்தி தாசர்
அயோத்தி தாசர்

தொடர்ந்து பேசியவர், ``அவரின் தாத்தா கந்தப்பன் தன்னிடமிருந்த திருக்குறள் ஓலைச்சுவடிகளை எல்லிஸிடம் கொடுத்து திருக்குறளை அச்சுப் பதிப்பாக கொண்டுவந்ததை நினைக்கும்போது குறளுக்கு அவர் குடும்பம் ஆற்றிய தொண்டுக்காக நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும். தந்தை பெரியார் அவர்களே தனது பகுத்தறிவு பிரசாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாச பண்டிதர்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதைத் தாண்டி நான் எதுவும் சொல்லவேண்டியது இல்லை. இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்குச் சாதியும் மதமும் தடை என்று சொன்னவர் அயோத்திதாச பண்டிதர். `மனிதர்களை மனிதர்களாகப் பார்ப்பவர் எவரோ அவர் மனிதர்’ என்று முழங்கினார். 1845-1914 ஆண்டுவரை வாழ்ந்த அயோத்திதாச பண்டிதரின் 175-ம் ஆண்டுவிழா நினைவாக, அவரின் அறிவை வணங்கும்விதமாக, வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதில் இந்த அரசு பெருமைப்படுகிறது" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு