Published:Updated:

கருணாநிதி சிலை முதல் அங்கன்வாடி கட்டடத்துக்கு மின்சாரம் வரை - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து 14-ம் தேதி முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் 14-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித்துறை ஆகிய மூன்று துறைகளின் மானியாக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து முடிந்திருந்தது. இன்று, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இன்று கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைக் காணலாம்.

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``சென்னை அண்ணா சாலையில், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகள் உள்ளன. ஏற்கனவே கலைஞர் சிலை இருந்தது அது அகற்றப்பட்டது. மீண்டும் அங்குக் கலைஞர் சிலை வைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் வைத்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்புக்குட்பட்டு, சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்து அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாவண்ணம் கலைஞர் சிலை அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும் முதல்வர் பேசுகையில், ``இன்றைய மானிய கோரிக்கைகளில் குடிசை மாற்று வாரியமும் இணைக்கப்பட்டுள்ள காரணத்தினால், இந்த அறிவிப்பை நான் அறிவிக்க விரும்புகிறேன். கோட்டையிலிருந்தாலும் குடிசையில் வாழும் மக்களுக்காகச் சிந்தித்தவர் கலைஞர். முதல்முறை ஆட்சி பொறுப்பேற்றதும் குடிசைமாற்று வாரியம் கொண்டுவந்தார். இந்த திட்டம் எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த வாரியம். இனிமேல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் என்று அழைக்கப்படும். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல குடிசைகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்திட வேண்டும் அவர்களின் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ``திருச்சியில் உள்ள மின் தூக்கி சரியாகச் செயல்படவில்லை என்று உறுப்பினர் கூறினார். நாங்கள் அந்த மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் செல்லும்போது அந்த லிப்டில்தான் சென்றோம். நன்றாகத்தான் உள்ளது. ஒருவேளை உறுப்பினர் இனிகோ பருமனாக இருப்பதினால் அது சரியாக வேலை செய்திருக்காதோ என்னவோ.. மேலும், தாய் சேய் மருத்துவமனை தூரத்தில் இருக்கிறது என்றிருக்கிறார். அடுத்தமுறை ஆய்வுக்குச் செல்லும்போது அதை ஆய்வு செய்து தேவைப்படுமென்றால், கண்டிப்பாக மாற்றித் தரப்படும்" என்றார்.

சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தொடர்ந்து பேசியவர், ``தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 113 சிடி ஸ்கேனர்ஸ் 87 மையங்களில் செயல்பாட்டில் உள்ளன. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வாங்கிய சிடி ஸ்கேனர் கொரோனா பேரிடர் காரணமாகக் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பொருத்தப்பட்டது. தற்போது மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு 1.5 கோடி ரூபாயில் புதிய சிடி ஸ்கேனர் வாங்கித்தரப்படும்." என்று கூறினார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பை அந்தத் துறையின் அமைச்சர் சு. முத்துசாமி இன்று தாக்கல் செய்தார். ``தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மனை மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக மனைகள் மேம்படுத்தப்படும். அம்பத்தூர், ஆவடி, சோழிங்கநல்லூர், குடியாத்தம், ஆத்தூர், ஓசூர், தத்தநேரி போன்ற இடங்களில் வீடுகள் கட்டப்படும். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப, பிரதான இடங்களில் வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்" என்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் சு. முத்துசாமி
முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் சு. முத்துசாமி

மேலும், பொதுமக்கள் தொடர்புடைய வாரிய ஒதுக்கீட்டு ஆணை, குத்தகை ஒப்பந்தம் மற்றும் விற்பனைப் பத்திரம் ஆகிவை தமிழில் வழங்கப்படும். தகுதி வாய்ந்த மூன்றாம் தரப்பு கண்காணிப்புக் குழு மூலம் வீட்டுவசதி வாரிய கட்டடங்களில் உறுதித் தன்மையும் தொழில்நுட்பமும் தணிக்கை செய்து உறுதிப்படுத்தப்படும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒப்பந்தப் புள்ளி, ஏலம் மற்றும் ஒதுக்கீடுகள் போன்ற பல்வேறு சேவைகளை எளிதாக்கும் வகையில் மின்னணு சேவைகளாக வழங்கப்படும்" போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

`` ஜெயலலிதா பல்கலை. விவகாரம்  முதல் ஓ.பி.எஸ் கைது வரை" - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பை அந்தத் துறையின் அமைச்சர் கீதா ஜீவன் இன்று தாக்கல் செய்தார். `` தமிழகத்தில் முதியோர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் வகையில் மாநில மூத்த குடிமக்கள் கொள்கை உருவாக்கப்படும். தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை உருவாக்கப்படும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படும். தமிழக அரசால் தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஆறு புதிய மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இளைஞர்கள் நீதிக் குழுமங்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்கள் புதிதாக ஏற்படுத்தப்படும்" என்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் கீதா ஜீவன்

தொடர்ந்து பேசியவர், ``69.24 கோடி ரூபாய் செலவில் 1,291 சத்துணவு மையங்களுக்கு, வைப்பறைகளுடன் கூடிய சமையலறை கட்டடங்கள் கட்டித்தரப்படும். 1,000 சத்துணவு மையங்களில் 80 லட்சம் ரூபாய் செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்படும். தனியார் வாடகை கட்டடங்களில் செயல்படும் 7,228 அங்கன்வாடி மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மாத வாடகை தொகையான 750, 3,000, 5,000 ரூபாய்கள் 1,000, 4,000, 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மின்வசதியின்றி அரசு சொந்த கட்டடங்களில் செயல்படும் 7,757 அங்கன்வாடி மையங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்படும்" உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு