Published:Updated:

``உதயநிதி புகழாரம் முதல் துரைமுருகன் பெருமிதம் வரை" - சட்டசபை ஹைலைட்ஸ்!

 சட்டசபை ஹைலைட்ஸ்
சட்டசபை ஹைலைட்ஸ்

இன்று (02-09-2021) சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து 14-ம் தேதி முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் 15-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், ``110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். சமூகநீதிக் கொள்கையின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் நமது தமிழகம். வகுப்புரிமை, வகுப்புவாரி உரிமை, இட ஒதுக்கீடு, சாதிரீதியாக ஒதுக்கீடு என்று எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும், சமூகநீதி என்று ஒற்றைப்பொருள் தரும் சொல்லை வேறு எந்தச் சொல்லும் தந்திடாது. சமூகநீதிக் கொள்கைதான் திராவிட இயக்கம். தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்துக்கே சமூகநீதி என்ற தத்துவத்தைக் கொடையாக வழங்கியது திராவிட இயக்கம்தான்.

சமூகநீதிக் கொள்கையை அடைய பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடை உறுதிப்படுத்தியதும், காலத்தின் தேவைக்கேற்ப அளவு மாற்றம் பெற்றுத் தந்ததும். கடந்த அரை நூற்றாண்டுக்காலமாக வரலாற்றிலே இருக்கக்கூடிய சரித்திரச் சான்றை மறைக்க முடியாத சாசனமாக அமைத்துள்ளது. 1987-ம் ஆண்டு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில் பலியானவர்கள் 21 பேர். அந்தத் தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூர்ந்து 4 கோடி ரூபாய் செலவில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்வரின் அறிவிப்புக்குப் பிறகு பேசிய அமைச்சர் துரைமுருகன், ``வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முதல்வர் அறிவித்திருக்கிறார்கள். இதில் இரண்டு விஷயம் உண்டு. ஒன்று, சொன்னதைச் செய்வேன் என்பது, நீண்ட நாள்களுக்கு முன்னால் அந்த வாக்குறுதியை வழங்கினாலும் இன்று அந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். வாக்குறுதி தவற மாட்டார் மு.க ஸ்டாலின் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. மற்றொன்று, அவரின் உள்ளத்தில் இருக்கும் கொள்கையின் வெளிப்பாடு. நாமெல்லாம் இந்தச் சபையில் இருக்கிறோம், பட்டதாரிகளாக இருக்கிறோம் என்றால் அதற்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம்தான் காரணம். நீதிக்கட்சி தொடங்கி இன்றுவரை அதற்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். நெருப்பாற்றை நீந்தி வந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். நாம் முந்தைய காலத்தில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்திருக்கிறோம்" என்றார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

தொடர்ந்து பேசியவர், ``இன்றைக்கு மணிமண்டபம் எழுப்புகிறார். அவர்களுக்கு மரியாதை செய்கிறார், ஊதியம் கொடுக்கிறார். ஆனால், அன்றைக்கு நாங்கள் வாங்கிய அடி எங்களுக்குத் தெரியும். அன்றைக்கு எங்களின் முப்பெரும் விழா, அந்த விழாவுக்கு வந்து சென்ற எங்கள் தோழர்களையெல்லாம் வழிமறித்து அடித்தார்கள். படாதபடுபட்டார்கள் எங்கள் தோழர்கள். கலைஞர் இருந்த இடம் என்ன ஆகுமோ என்று நினைத்திருந்தேன். என் தலைவர் கலைஞரே மறு அவதாரம் எடுத்து வந்திருக்கிறார். அவரைப் புகழ வேண்டும் என்பதற்காக இல்லை. நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா... இன்னும் 25 ஆண்டுக்காலம் நான் இருப்பேனோ இல்லையோ... நீங்கள் இருப்பீர்கள். திராவிட இயக்கத்தைக் காப்பீர்கள். ஒவ்வொருவரும் தங்களின் வீட்டுப் பிள்ளைகளுக்கு நமது வரலாற்றைச் சொல்ல வேண்டும். இந்தக் கதைகளைச் சொல்லவில்லையென்றால், இந்தச் சமுதாயம் அழிந்து போய், நாடற்றவர்களாக, மொழியற்றவர்களாக இந்தச் சமுதாயம் ஆகிவிடும். மொழி இருந்தால் இனம் இருக்கும். இனம் இருந்தால்தான் நம் வாழ்வு இருக்கும்" என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

சுங்கச்சாவடிகள் கட்டணம் அதிகரித்திருப்பது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் எ.வ.வேலு. ``கேரளாவிலுள்ள தூரத்தைக் கணக்கீடு செய்து ஐந்தாக இருந்த சுங்கச்சாவடி மூன்றாகக் குறைக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள தூரங்களைக் கணக்கீடு செய்தபோது மொத்தம் 16 சுங்கச்சாவடிகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 48 சுங்கச்சாவடி உள்ளது. இது குறித்து மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும். அதிகமாக இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றவும், சுங்கச்சாவடிக் கட்டணத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``உதயா இன்னும் அரை நூற்றாண்டுக்காலம் தமிழகத்துக்குச் சேவை செய்கிற, தமிழகத்தைக் காக்கிற, ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவரவிருக்கும் நல்ல இளம் தலைவர். 2018, ஜனவரி 24-ம் நாள், சைதாப்பேட்டையில் நடைபெற்ற 2,000 பேர் கலந்துகொண்ட ஒரு கோலப்போட்டியில் பரிசு தர அவரை அழைத்துச் சென்றேன். அதுமட்டுமில்லாமல ஏராளமான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருக்கிறார் என்றாலும், பொதுமக்கள் அவரிடம் கொண்டுள்ள அன்பு, நட்பு, ஈர்ப்பு இவற்றையெல்லாம் பார்த்து, நான் பேசும்போது, `நீங்கள் இந்த மேடையிலிருந்து இறங்கும்போது நான் அரசியலில் ஈடுபாடுகொள்வேன் என்று சொல்லிவிட்டு இறங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும். காரணம் அந்த அளவுக்கு மக்கள் உங்கள்மீது பற்றோடு இருக்கிறார்கள்’ என்று சொன்னேன். எனக்கடுத்துப் பேசிய அவர் சொன்னார், `அண்ணன் மா.சுப்பிரமணியன் என்னை மேடையைவிட்டு இறங்கும்போது அரசியலில் ஈடுபடுவேன் என்ற அறிவிப்பை வெளியிடச் சொல்லியிருந்தார். அவர் சொல்வதற்கு முன்பே இந்த மேடை ஏறும்போதே அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ஏறினேன்’ என்று சொன்னார்" என்று கூறினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பை அந்தத் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று தாக்கல் செய்தார். ``தமிழ்நாடு சிட்கோ மூலம் நான்கு இடங்களில் 394 ஏக்கர் பரப்பளவில், 218.22 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். நீலகிரி மாவட்டத்திலுள்ள 10 கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகள், நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பட்டு நிதி திட்டத்தின் கடன் உதவியுடன் 50.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும். தமிழ்நாடு சிட்கோ மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 19 ஏக்கரில் 23 கோடி ரூபாய் செலவில் சிற்பக் கலைஞர்கள் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்" என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தா.மோ.அன்பரசன்
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தா.மோ.அன்பரசன்

மேலும், ``கொசிமா மூலம் கோவையில் 42.42 ஏக்கரில் 18.13 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 9.06 கோடி ரூபாய் தமிழக அரசு மானியத்துடன் புதிய தனியார் தொழிற்பேட்டை அமைக்கப்படும். பொது உற்பத்தி கட்டமைப்பு திட்டத்தின் கீழ், மூன்று இடங்களில், 12.81 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், 7.5 கோடி ரூபாய் தமிழக அரசு மானியத்துடன் பொது உற்பத்தி கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்" என்பதோடு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

கருணாநிதி சிலை முதல் அங்கன்வாடி கட்டடத்துக்கு மின்சாரம் வரை - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பை அந்தத் துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தாக்கல் செய்தார். ``நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும். 258 கோடி ரூபாய் செலவில் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கப்படும். 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 97.49 கோடி ரூபாய் செலவில் பன்முக உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும். எட்டு அரசு மருத்துவமனைகளில் 9 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். ஊரகப் பகுதிகளிலுள்ள 2,400 துணை சுகாதார நிலையங்கள் 35.52 கோடி ரூபாய் செலவில் `நலவாழ்வு மையங்களாக' மேம்படுத்தப்படும்" என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தொடர்ந்து பேசியவர், ``இந்தியாவிலேயே முதன்முறையாகச் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும். எய்ட்ஸ் தடுப்பு ஆதரவு பராமரிப்பு, மருத்துவச் சிகிச்சைக்கு 128.27 கோடி நிதி ஒதுக்கப்படும். 19 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக மாற்றி அமைக்கப்படும். 120 இந்திய மருத்துவத்துறை மருந்தகங்கள் இந்திய மருத்துவமுறை சுகாதார நலவாழ்வு மையங்களாக 32 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும். 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தின் மூலம் இந்தியமுறை மருத்துவ மருந்துகளும் வழங்கப்படும். முதியோர் நலனுக்காக 3.25 கோடி செலவில் சித்தர் நிறைவாழ்வு மையம் 100 சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தப்படும்" என்றவர், அதோடு பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு