Published:Updated:

`` பத்திரப்பதிவுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்" - சட்டசபை ஹைலைட்ஸ்!

சட்டசபையில் முதல்வர்
சட்டசபையில் முதல்வர்

06-09-2021 சட்டசபையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 14-ம் தேதி முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் 18-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் இன்றைய கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தோடு தொடங்கியது. இன்று, வணிக வரிகள், முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல்துறை, கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருள்கள்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இன்று கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பாரக்கலாம்.

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். ``தந்தை பெரியாரின் செயல்கள், போராட்டங்களைப் பற்றிப் பேச வேண்டுமென்றால், சட்டப்பேரவையை 10 நாள்கள் ஒத்திவைத்துவிட்டுத்தான் பேச வேண்டும். அவர் எழுதிய எழுத்துகள், யாரும் எழுதத் தயங்கியவை. அவர் பேசிய பேச்சு யாரும் பேச பயந்தவை. சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி தமிழகத்தில் சமூகநீதிக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். இந்தியா முழுவதும் சமூகநீதி பரவக் காரணமே பெரியார் அளித்த அடித்தளம்தான். தமிழருக்கு எதிரியான எல்லாவற்றையும் எதிரியாக நினைத்துச் செயல்பட்டவர்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``நாடாளுமன்ற வாசலுக்கே செல்லாத அவரால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்குப் பெரியார் போட்ட விதைதான் காரணம். பெரியாரின் குருகுலப் பயிற்சிதான் திமுக-வை உருவாக்கியது. பெரியார் குறித்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமைகொள்கிறேன். பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்பதை 110 விதியின் கீழ் அறிவிக்கிறேன். தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ம் தேதி உறுதிமொழி எடுக்கப்படும்" என்று அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ``ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முதல்வர் அறிவித்திருக்கிறார். நாமெல்லாம் இங்கு உட்கார்ந்திருப்பதற்குத் தந்தை பெரியார்தான் காரணம். அவர் இல்லையென்றால் யார் யார் உட்கார்ந்திருப்பார்கள் என்பதைச் சுதந்திரத்துக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் தெரியும். இப்போது எல்லாமே மாறியிருக்கிறது. அதற்கு தந்தை பெரியார்தான் காரணம். அண்ணா சட்டமன்றத்தில் பேசும்போது சொன்னார், `இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை.’ அறிஞர் அண்ணாவின் வழியில், கலைஞரின் வழியில் அதே உணர்வோடு அதே சுயமரியாதை உணர்வோடு, எங்கள் தளபதி இந்த தீர்மானத்தைப் படித்தபோது, என் ரத்தம் புது வேகத்தில் பரவ ஆரம்பித்துவிட்டது. இந்த திராவிட இயக்கத்தை இனி யாராலும் அழிக்க முடியாது. தலைமுறைக்குத் தலைமுறை வந்துகொண்டிருப்பார்கள்" என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

பத்திரப்பதிவுத் துறை: பிளாட்டுகள்  கோல்மால்! - சிக்கப்போகும் அதிகாரிகள்!
பேரவையில் அமைச்சர் துரைமுருகன்
பேரவையில் அமைச்சர் துரைமுருகன்

முதல்வரின் இந்த அறிவிப்புக்குப் பிறகு பேசிய பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், `` சமூகநீதி என்பது பா.ஜ.க-வின் கொள்கைகளில் ஒன்றாக இருக்கிறது. சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் இவற்றை அடியோடு வேரறுக்க வேண்டும் என்பது பாஜக-வின் கொள்கைகளில் ஒன்று. தந்தை பெரியாரும் அதே கொள்கையைத்தான் செய்திருக்கிறார்கள். அவர்களுக்காக எடுக்கப்படுகின்ற விழா நமது முதல்வரால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கையுடன் இருக்கும் பாஜக இதை வரவேற்கிறது" என்று பேசினார். அவர் பேசும்போது மிகுந்த சிரிப்புடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுதுறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பை அந்தத் துறையின் அமைச்சர் மூர்த்தி இன்று தாக்கல் செய்தார். ``கடந்த காலங்களில் நடந்த பத்திரப்பதிவுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்படும். இந்தக் குழு கடந்த காலங்களில் நடந்த தவறுகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு, போலியாகப் பதியப்பட்ட பத்திரங்கள், அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த அறிக்கைகளின் அடிப்படையில், நடந்த தவறுகள் சரிசெய்யப்படும். மேலும், தவறு செய்தவர்களின்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

முதலவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி
முதலவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி

இன்று சட்டப்பேரவையில் பேசிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ``தமிழகத்திலுள்ள கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் நாள் முழுவதும் நிற்கவைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்குப் பல்வேறு உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறது. அவர்களின் நிலையைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என்று கருதப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனைக்குழுவின் கூட்டத்தில் பணியாட்களுக்கு இருக்கை வழங்குதல் குறித்துப் பேசப்பட்டது. அந்தக் கருத்து, குழு உறுப்பினர்களால் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே, அரசு மேலே சொன்ன நோக்கத்துக்காக 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சட்ட முன்வடிவம், மேலே சொன்ன முடிவுக்குச் செயல்வடிவம் கொடுக்கும்" என்று அறிவித்தார்.

ஸ்டாலின் அரசின் 100 நாள்களில் கருணாநிதி பெயரில் வந்த அறிவிப்புகள் - ஒரு பட்டியல்!

இன்று சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி, ``இனி வரும் கல்வி ஆண்டுகளில் ஆண்டு தொடங்கும்போதே மடிக்கணினி வழங்கினால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்" என்று பேசினார். அப்போது பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ``இந்தத் திட்டம் 2011-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் மற்றும் 2021-22-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கவேண்டிய மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை. 2017-18-ம் ஆண்டிலும் வழங்கவேண்டிய 1,75,789 மடிக்கணினிகள் நிலுவையில் உள்ளன. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். கல்வி ஆண்டு தொடங்கும் ஆறு மாதங்களுக்கு முன்பே மடிக்கணினி வழங்கும் திட்டம் வகுத்துச் செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.

பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், பாமக உறுப்பினர் ஜி.கே மணி இருவரும் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ``முன்னுரிமை அடிப்படையில் சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின்நிலையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும். பென்னாகரம் தொகுதியில் புதிய கோட்டங்கள் அமைப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சியில் புதைவிட மின்கம்பிகள் இல்லாத பகுதிகளில் ஆய்வு செய்து, திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் 8,905 மின்மாற்றிகளை மாற்றும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு