Published:Updated:

``விநாயகர் சதுர்த்தி ஊர்வலத் தடை ! முதல்வர் சொன்ன விளக்கம்" - சட்டசபை ஹைலைட்ஸ்!

சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து 14-ம் தேதி முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் 19-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று, வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து முடிந்திருந்தது. இன்று, சட்டத்துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இன்று கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்:

இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான 13 அறிவிப்புகளை 110 வீதியில் கீழ் வெளியிட்டார். `` அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 01.01.2022 முதல் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 01.01.2022 முதல் அமல்படுத்தப்படும். சத்துணவு மையங்களில் செயல்படும் சத்துணவு சமையலாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோர் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்படும். சத்துணவு சமையலாளர்கள், சமையல் உதவியாளரின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``அரசுப் பணியாளர்களை ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறை தவிர்க்கப்படும். வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்திற்கு மாற கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும். அவர்களுக்குப் பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால், அதுவும் சரி செய்யப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அதற்கேற்ப ஆசிரியர்கள் பணி நியமனம் மேற்கொள்ளப்படும். மக்களாட்சி தத்துவத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்தின் அடித்தளமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களின் நலனில் இந்த அரசு எப்போதுமே அக்கறை கொண்டு அவரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும்" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விநாயகர் சதுர்த்தி தடை தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர், கொரோனா பரவல் காரணமாக வரும் 30-ம் தேதி வரை மக்கள் கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே, தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``நமது மாநிலத்தில் 12,000 மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். மழைக்காலங்களில் தொழில் செய்ய முடியாததினால் அவர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுகிறது. இதில் 3,000 தொழிலாளர்கள் விழாக்காலங்களில் விநாயகர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த 3,000 தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் 5,000 ரூபாயோடு கூடுதலாக 5,000 ரூபாய் சேர்ந்து 10,000 ரூபாயாக வழங்கப்படும்" என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, ``தமிழக அரசுக்கு ஆன்லைனில் மதுபான விற்பனை செய்யும் எண்ணம் உள்ளதா" என்று கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ``ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை செய்யும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு, மாதத் தொகுப்பூதியம் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்குக் கூடுதலாக 15 கோடி ரூபாய் செலவாகும். இதன்மூலம் 25,009 சில்லறை விற்பனையாளர்கள் பயன்பெறுவார்கள்" என்று கூறினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி
முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி

மேலும், மானிய கோரிக்கை விவாதத்தின்போது, ``கடந்த ஆண்டு மே மாதத்தை விட இந்த ஆண்டு மே மாதம் 32 சதவிகிதம் அதிகமான மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் குறைவான கட்டணத்தைத்தான் வசூல் செய்துள்ளோம். அதேபோல், முதலமைச்சர் அறிவுறுத்துதலின்படி 419 கோடி கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மின்மிகை மாநிலம் என்று கூறிய அதிமுக அரசு ஏன் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கவில்லை. உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு 22,815 கோடி ரூபாய்க் கடனை ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலும் 31.03.2021 வரி 1,34,119.94 கோடி ரூபாய் கடன் தொகை நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் கடன் 25,568.73 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இந்த கழகம் கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு ஆண்டுகள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டின் வருவாய் இழப்பு மட்டும் 1,778.17 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு