Published:Updated:

``3200 ஆண்டு நாகரிகம் ‘பொருநை அருங்காட்சியகம்’ ; கொடநாடு விவகாரம்" - சட்டசபை ஹைலைட்ஸ்!

சட்டசபை ஹைலைட்ஸ்

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

``3200 ஆண்டு நாகரிகம் ‘பொருநை அருங்காட்சியகம்’ ; கொடநாடு விவகாரம்" - சட்டசபை ஹைலைட்ஸ்!

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

Published:Updated:
சட்டசபை ஹைலைட்ஸ்

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின்
பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் 21-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று, முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இன்று கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பின்வருமாறு காணலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், `` `வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்ற உணர்வை நமக்கெல்லாம் ஏற்படுத்திய தமிழினத் தலைவர் கலைஞர் போற்றிய செம்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளம் வந்த தமிழினத்தின் சிறப்பை பறைசாற்றும் அறிவிப்பை விதி எண் 110-ன் கீழ் இந்த மாமன்றத்தில் வெளியிடுகிறேன். திமுக எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதோ அப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாகத்தான் இருந்துள்ளது. தலைநகரின் வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் 133 அடியில் வள்ளுவர் சிலை அமைத்தது. திரும்பிய பக்கமெல்லாம் திருக்குறளைத் தீட்டியது. தமிழ் வாழ்க என எழுத வைத்தது. முதல்வராக இருந்த கலைஞர் முயற்சியினால்தான் 1990-ம் ஆண்டில் கடல்சார் ஆய்வுக்குப் பெருந்திட்டம் தீட்டியதும் , பின்னர் பூம்புகார் நகரின் சில கட்டுமானப் பகுதிகள் கண்டறியப்பட்டதும், கலைஞரின் பெருமுயற்சியால்தான்" என்றார்.

மேலும், `` கீழடியில் தற்போது நடைபெறும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. வியக்கவைக்கும் செங்கல் கட்டுமானங்கள், வண்ணம் தாங்கிய பானை ஓடுகள், கல்மணிகள், தங்க அணிகலன்கள், விளையாட்டுப் பொருட்கள், தொழிற்பகுதிகள் என ஒரு செழுமையான சமூகமாக, சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் மட்டுமல்ல. இந்த உலகமே அறிந்துகொண்டது. கீழடி என்ற ஒற்றைச் சொல் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்தது என்றே சொல்லவேண்டும். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைக் சோழபுரம் ஆகிய இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆதிச்சநல்லூர் அருகே, சிவகளைப் பறம்புப் பகுதியில் வெளிப்பட்ட முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் மயாமி நகரத்தில் புகழ்பெற்ற Beta Analytical Laboratory-க்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வு முடிவு சமீபத்தில் எங்களுக்குக் கிடைத்தது. அந்த நெல்மணிகள் கி.மு. 1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசுகையில், `` தண்பெருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிசெய்ய முடிகிறது. பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாடு, கடல்வழி வணிகம், நீர் மேலாண்மை, இரும்பு உருக்குதல், அறிய மணிகள் தயாரித்தல், முத்துக் குளித்தல் போன்ற சாற்றிகளைக் சேகரிக்கும் வகையில் நடப்பாண்டில் அகழ்வாராய்ச்சிக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளில் அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களைக் காட்சிப்படுத்தத் திருநெல்வேலியில் ரூ. 15 கோடி செலவில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது `பொருநை அருங்காட்சியகம்' என்று அழைக்கப்படும். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி இந்தியத் துணைக் கண்டமெங்கும், வெளிநாடுகளிலும் உரிய அனுமதி பெற்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் தொடங்கி எழுதப்படவேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில், அறிவியலின் வழிநின்று நிறுவுவதே நமது அரசின் தலையாய கடமை" என்று பேசினார்.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி

இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``கடந்த ஆட்சியில் காவலர்களுக்குத் தொடங்கப்பட்ட `உங்கள் இல்லம்' திட்டம் தொடர்ந்து செயல்படவேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்யவேண்டும்" என்றும் கூறினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், `` `உங்கள் இல்லம்' திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் தரமானதாக இல்லை என்று காவலர்கள் குறைகூறுகிறார்கள். கடந்த ஆட்சியில் தொடங்கிய திட்டத்தைக் கைவிடமாட்டோம். அவர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் தரமான வீடுகள் கட்டித்தரப்படும். கூட்டத்தொடரை நேரலை செய்யக் கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல, செயின் ஜார்ஜ் கோட்டையில் கூட்டத்தொடர் நடைபெறும்போது அது நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இன்று பேரவையில் பேசிய பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், `` முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.50,000 ஓய்வூதியம் வழங்கவேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். அப்போது பதிலளித்துப் பேசிய முதல்வர், `` தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு 20,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 25,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று கடந்த ஆட்சியாளர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், அந்த அறிவிப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வரும் திங்களன்று ( 13-09-2021 ) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியமாக 25,000 ரூபாய் வழங்கும் சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும்" என்று கூறினார்.

பேரவையில் நயினார் நாகேந்திரன்
பேரவையில் நயினார் நாகேந்திரன்

இன்று பேரவையில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ``கடந்தாண்டு 12 -ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால், கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு, தனியார் கல்லூரிகளில் 10 சதவிகிதம் வரை மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டிலும் 15 சதவிகிதம் வரை மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என்று கூறினார். மேலும் இன்றைய கூட்டத்தொடரில், கொடநாடு விவகாரம் தொடர்பாகவும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகவும் அவையில் காரசார விவாதம் நடைபெற்றது. மேலும், நாளை விநாயகர் சதுர்த்தி, அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு அரசு விடுமுறையையொட்டி அவை நடைபெறாது. வரும் திங்கள்கிழமை அவை கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism