Published:Updated:

`` என்னுடைய தந்தை தீவிர கலைஞர் பக்தர்" - நெகிழ்ந்த ஓ.பி.எஸ்! பேரவையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 14-ம் தேதி முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்திருந்தது. இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இன்று கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், ``80 ஆண்டுக்காலம் தமிழினத்துக்கு உழைத்த போராளி. கலைஞரின் புகழுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் முதல் அறிவிப்பு அமைந்திருப்பதில் நான் மட்டுமல்ல, இந்த அரசும் பெருமைப்படுகிறது. 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை, 70 ஆண்டுகள் திரைத்துறை, 70 ஆண்டுகளாக பத்திரிகையாளர், 60 ஆண்டுகளாகச் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகளாக திமுக என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவர் என்று வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக வாழ்ந்தவர் கலைஞர். நின்ற தேர்தலிலெல்லாம் வென்ற தலைவர் அவராக மட்டும்தான் இருக்க முடியும்" என்றார்.

கலைஞர் நினைவிட மாதிரி வரைபடம்
கலைஞர் நினைவிட மாதிரி வரைபடம்

மேலும், ``ஒட்டுமொத்த இந்தியாவிலும் தமிழகத்தை வளர்ச்சிபெற்ற மாநிலமாக மாற்றியதில் கலைஞரின் பங்கு ஈடு இணையற்றது. இன்று நாம் பார்க்கும் நவீன தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது. தமிழினத் தலைவர் கருணாநிதி ஆற்றிய பணிகளைப் போற்றும்விதமாக, அவரின் வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும் வருங்காலச் சந்ததியினரும் அறியும் வகையில், நவீன விளக்கப் படங்களுடன் சென்னை காமராஜர் சாலையிலுள்ள அண்ணா நினைவிடத்துக்கு அருகில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று இந்த மாமன்றத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்துப் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ், ``முதலமைச்சர், கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் குறித்து 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதற்காக முதல்வருக்கு நான் நன்றியையும், வணக்கத்தையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அதிமுக-வின் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தத் திட்டத்தை மனதார வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம். முதல்வர் அறிவிப்பைப் படிக்கிறபோது, கலைஞரின் சிறப்புகளைக் கோர்வையாக, அவரின் இளமைக் காலம் முதல் இன்று வரை வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற கருத்துகள் பதியச் சிறப்பாக எடுத்துச் சொன்னார். அமையவிருக்கும் நினைவிடத்தில், முதல்வர் கூறிய அத்தனை சிறப்புகளும் என்றென்றும் வரலாற்றில் இடம்பெறத்தக்க வகையில் அமைய வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள்" என்றார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ்
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ்

மேலும், ``நாமெல்லாம் பேரறிஞர் அண்ணாவின் குடையின் கீழ் அரசியல் பாடம் கற்றவர்கள் என்பதை நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறேன். முதல்வர் கலைஞரின் வசனத்தில் அனல் பறக்கும் என்று சொன்னார்கள். உள்ளபடியே அனல் பறக்கும், பின்னடைவில் இருக்கும் ஒரு சமுதாயத்தைச் சீர்திருத்தும் கருத்துகளாகத்தான் அது பரவி நிற்கும் என்பதற்கு, `பராசக்தி’, `மனோகரா’ படங்கள்தான் எடுத்துக்காட்டு. நான் ஒரு சிறிய நினைவை இங்கு கூற கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய தந்தை தீவிர கலைஞரின் பக்தர். அவரின் பெட்டியில் எப்போதும் `பராசக்தி’, `மனோகரா’ படத்தின் வசனப் புத்தகங்கள் இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி" என்று கூறினார்.

திமுக-வைச் சேர்ந்த கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், துணைச் சபாநாயகருமான கு.பிச்சாண்டி சட்டப்பேரவையில் ``கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்துப் பேசுகையில் கடந்த பத்து ஆண்டுகளாகக் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தவில்லை" என்று கூறினார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``பத்து ஆண்டுக்காலம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தவில்லை என்று சொல்வது தவறானது. அதிமுக ஆட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது குறித்து கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது" என்றார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

தொடர்ந்து பேசியவர், ``மேச்சேரி - நங்கவள்ளி, நாசிபுரம், இருப்பாளி போன்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் 14 மணி நேரம் இயங்கி வந்தன. தற்போது மின் மோட்டார் இயங்கும் நேரம் ஆரு மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருப்ப்தால் குடிநீர் பிரச்னை எழுந்துள்ளது. இந்தப் பிரச்னையில் அரசு உடனடியாகத் தலையிட்டு, கடந்த அதிமுக ஆட்சியிலிருந்ததுபோல மின் மோட்டார் தொடர்ந்து இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், ``பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளிலுள்ள ஊராட்சி, நடுநிலை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் இந்த ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும். ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மாதாந்தர மதிப்பூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல்வருடன் அமைச்சர் பெரியகருப்பன்
முதல்வருடன் அமைச்சர் பெரியகருப்பன்
``பேச வார்த்தையில்லை; ஸ்டாலினைக் கட்டிப்பிடித்து அழுதிருப்பேன்!" - துரைமுருகன் உருக்கம்

மேலும், ``காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யவேண்டியிருந்த காரணத்தால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். 233 கோடி ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், 2,097 கோடி ரூபாய் மதிப்பில் ஊரகச் சாலைகள் மேம்படுத்துதல் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும். 12,125 நூலகங்கள் மேம்படுத்தப்படும். சுகாதாரத்தில் சிறப்பாகச் செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அந்தத் துறையின் அமைச்சர் கே.என்.நேரு. ``தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என்ற புதிய அறிவிப்பையும், கரூர், கடலூர், காஞ்சிபுரம், கும்பகோணம் போன்ற நகராட்சிகளைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்த உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக உயர்த்தப்படும்" என்றார்.

முதல்வருடன் அமைச்சர் கே.என்.நேரு
முதல்வருடன் அமைச்சர் கே.என்.நேரு

மேலும், ``ஓசூர், தஞ்சாவூர், நாகர்கோவில், திருச்சி போன்ற மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும். பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், மானாமதுரை உள்ளிட்ட 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும். புகளூர் நகராட்சியும் உருவாக்கப்படும்" என்று அறிவித்தார். அமைச்சர் பேசுகையில், ``ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டியாக முதல்வரின் திட்டங்கள் இருப்பதால், முதல்வருக்குப் பிரதமராகும் தகுதி உள்ளது" என்றும் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு