Published:Updated:

`அம்மா உணவகம்; புதிய கல்லூரிகள்; `கவிமணி' விருது' - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 14-ம் தேதி முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் 10-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று கூட்டுறவுத்துறை மற்றும் உணவு நுகர்வோர்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து முடிந்திருந்தது. இன்று உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இன்று கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், ``இளநிலை தொழிற் படிப்புகளான சட்ட முன்வடிவை நான் அறிமுகப்படுத்த முன்வருகிறேன். தொழிற்கல்விகளில் நகரங்களிலுள்ள தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களைவிட கிராமப்புறங்களிலுள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சேர்வதைக் கருத்தில்கொண்டு, 1997-ம் ஆண்டு கிராமப்புற பள்ளிகளில் கல்வி கற்க 15 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முதல் பட்டதாரி மாணவர்களுக்குக் கல்விச் சலுகை அளிக்கப்பட்டது. கிராமப்புற மாணவர்கள், பின்தங்கிய பகுதிகளிலுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சிரமங்களைக் கருத்தில்கொண்டு, 2006-ம் ஆண்டு தொழிற்கல்வி தேர்வுக்கான நுழைவுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களோடு போட்டியிடும் சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் அவர்கள் விரும்பும் உயர்கல்வியில் சேர்வது, தொழிற்கல்வி படிப்புகளில் சேர்வது மிகவும் கடினமாக இருக்கிறது. பல்வேறு சமூக, பொருளாதார ஏற்ற தாழ்வுகளால் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பயில சமவாய்ப்பு கிடைப்பதில்லை" என்றார்.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

தொடர்ந்து பேசியவர், ``மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. மருத்துவப் படிப்புகளைப் போன்றே, கால்நடை மருத்துவம், வேளாண் கல்வி, பொறியியல், சட்டம் போன்ற இதர கல்விகளிலும் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றது. பல்வேறு வகையான தொழிற்கல்வி படிப்புகள், கல்வி நிறுவனங்களால் அவர்களின் சேர்க்கை தொடர்பான சிக்கல்களை ஆய்வுசெய்து, அவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ``2019-20 கல்வியாண்டில், மேல்நிலைக் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 8.5 லட்சம். அவர்களில் 3.4 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். ஆனால், 2020-21 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 0.83 சதவிகிதம்தான். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 6.3, 0.44 சதவிகிதம் மட்டுமே. வேளாண்மை தொழிற்கல்வி படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை 4.8 சதவிகிதமாக உள்ளது" என்று கூறினார்.

மேலும், ``ஏழ்மைநிலை, அறியாமை, போதிய வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தொழிற்கல்வி குறித்த விழிப்புணர்வைக் குறைவாகப் பெற்றுள்ளார்கள். இதை நன்கு ஆய்வு செய்து அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்த பல தீர்வுகளைப் பரிந்துரை செய்ததோடு, தொழிற்கல்வி படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகிதத்துக்கும் குறையாமல் முன்னுரிமை வழங்கலாம் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டு அதற்கான சட்ட முன்வடிவு இந்த அவையில் வைக்கப்பட்டுள்ளது" என்று பேசினார். இதை முழுமனதாக வரவேற்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இன்று பேரவையில், `விழுப்புரத்தில் செயல்பட்டுவரும் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும்’ என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அப்போது பேசிய முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ``ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது" என்று குற்றச்சாட்டு வைத்தார். அப்போது பேசிய முதல்வர், ``இதை நாங்கள் காழ்ப்புணர்ச்சியோடு செய்திருக்கிறோம் என்று பொருள்படக் கூறினார்கள். அப்படி காழ்ப்புணர்ச்சியோடு நாங்கள் நடக்கத் தொடங்கியிருந்தால் `அம்மா உணவகம்’ என்ற பெயரில் ஓர் உணவகம் இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கும். இந்த அரசைப் பொறுத்தவரை எந்தக் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ஏன் அந்தப் பெயர் மாற்றப்பட்டது என்ற காரண, காரியத்தை அந்தத் துறையின் அமைச்சர் விரிவாகக் கூறியிருக்கிறார். காழ்ப்புணர்ச்சி என்பது இல்லை என்பதை நான் தெளிவுபடக் கூறுகிறேன்" என்று பேசினார். ``நாகையிலுள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னையிலுள்ள இசைப் பல்கலைக்கழகம் ஆகியவை ஜெயலலிதா பெயரில்தான் இயங்கிவருகின்றன" என்று அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி

அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, அதிமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ``அம்மாவின் பெயரிலுள்ள பல்கலைக்கழகம் அதே பெயரில் தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், உயர் கல்வித்துறை அமைச்சர் அந்தப் பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று கூறினார். அதை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். கல்வியில் புரட்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியவர் அம்மா. தமிழகம் முழுவதும் பள்ளிகளின் தரங்களை உயர்த்தி கல்வி கற்போரின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள். அந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநரும் அனுமதி வழங்கியிருந்தார்கள். அதற்கு துணைவேந்தரும், சிண்டிகேட் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டார்கள். தேர்தல் வந்த சூழலால் அந்தப் பல்கலைக்கழகத்தை முழுமையாக நிறுவ முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது புதிதாக அமைந்துள்ள அரசு, அம்மாவின் பெயரிலுள்ள அந்தப் பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று கூறுகிறார்கள். அம்மாவின் பெயரில் பல்கலைக்கழகம் இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.

உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பை அந்தத் துறையின் அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்தார். ``தமிழ்நாட்டில் புதிதாக ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், திருச்சுழி, திருக்கோவிலூர், ஆலங்குடி, சேர்காடு, தாளவாடி, மானூர், கூத்தாநல்லூர் ஆகிய 10 இடங்களில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். பல்வேறு பாடப்பிரிவுகளிலிருந்து 100 பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து, புதுவகை கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொற்று தடுப்பு, தடுப்பூசி இடுதல் மற்றும் வாழ்க்கைச் சமநிலை என்ற குறுகியகால பாடப் பிரிவு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி

மேலும், ``திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர், செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பாடப் பிரிவு தொடங்கப்படும்" என்றார். கலசப்பாக்கம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசுகையில், ``திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு முன்னதாக, `கலைஞர் அரசு கலைக் கல்லூரி’ என்று பெயர் இருந்ததாகவும், தற்போது அது பின்பற்றப்படவில்லை" என்றும் கூறினார். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, ``உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, முதல்வரின் ஒப்புதலோடு, திருவண்ணாமலை அரசு கலை கல்லூரிக்குக் `கலைஞர் அரசு கலைக் கல்லூரி’ என்று பெயர் மாற்றம் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பை அந்தத் துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தாக்கல் செய்தார். ``தமிழகத்தில் 12 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும். 22 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களில் சிறந்த எழுத்தாளர்கள் மூவரைத் தேர்வுசெய்து 'கவிமணி' விருது வழங்கப்படும். அவர்களுக்கு 25,000 ரூபாய் ரொக்கப் பணம், சான்றிதழ், கேடயம் வழங்கப்படும். தனியார் தொண்டு நிறுவனங்கள் கருத்தியல்ரீதியாக, கற்றல், கற்பித்தல் இயக்கத்தில் தலையிட முற்பட்டால் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்" என்று கூறினார்.

`துரைமுருகனின் பேச்சால் சிரிப்பலை முதல் நிதியமைச்சரின் அச்சம் வரை’ -இன்றைய பேரவை நிகழ்வின் ஹைலைட்ஸ்
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மேலும், ``அண்ணா நூற்றாண்டு நூலகம் குளிர்சாதன வசதி, இதர மின் வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் என நவீன முறையில் மேம்படுத்தப்படும். நூலகங்களின் அனைத்துப் புத்தகங்களின் விவரங்களும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் சரிசெய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் மூலம் அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள புத்தகங்களைத் தேடும் வசதி ஏற்படுத்தப்படும். காலியாக உள்ள 2,098 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று கூறினார்.

``கடந்த ஆட்சியில் போலி நகைகளை வைத்து ரூ.7 கோடி மோசடி" - பேரவையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்!

வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில், ``பெரியாரின் சிந்தனைகளையும் எழுத்துகளையும் தொகுத்த பெரியார் சிந்தனையாளர் ஆனைமுத்துவின் பெயரைத் தமிழக அரசின் ஆவணக் காப்பகத்துக்குச் சூட்ட வேண்டும். சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் பெயரைத் தமிழ்நாட்டில் உருவாக இருக்கும் புதிய கல்வி நிறுவனம் அல்லது கல்வி வளாகத்துக்கு வைக்க வேண்டும்" என்ற கோரிக்கையை வைத்தார். நடைபெறும் ஆட்சி குறித்து ஆளுங்கட்சித் தரப்பில் மட்டுமின்றி. எதிர்த் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன" என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேசியதைக் குறிப்பிட்டு ஷாநவாஸ் பேசினார்.

சட்டப்பேரவையில் ஆளூர் ஷாநவாஸ்
சட்டப்பேரவையில் ஆளூர் ஷாநவாஸ்

கூடலூர் தொகுதி உறுப்பினர் ஜெயசீலன் யானைகளின் நடமாட்டம் குறித்து பேரவையில் கேள்வியை எழுப்பியிருந்தார். அப்போது பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ``யானைகளின் நடமாட்டம் ட்ரோன்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. இரவு நேரங்களில் காட்டுயானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், விரட்டியடிக்கவும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் முகாமிட்டிருக்கிறார்கள்" என்றும் விளக்கம் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு